Friday, July 5, 2013

மாற்றம் வேண்டிநிற்கும் முதல் மாற்றம்....

மாற்றம் வேண்டிநிற்கும் முதல் மாற்றம்....


மாற்றம் என்பது திடீரென உருவெடுப்பதொன்றல்ல. அது படிப்படியாக, கட்டம்கட்டமாக உருவாகின்றதொன்றாகும். அதேநேரம் இது இடம்பெற இரண்டு பலங்கள் ஒருசேர வேண்டும். அவைதான்: உடல், உள வலிமை மிக்க இளம் கன்றுகளும், பழுத்த அனுபவமுள்ள முதியவர்களுமாகும். இன்று எமது சமூகத்தில் அனுபவசாலிகள் வழிகாட்ட காத்திருக்க அதனை சுமந்து, நடைமுறைப்படுத்தி மாற்றத்தை கொண்டுவரத் தயாராகும் உடல், உள வலிமை கொண்ட இளம் பரம்பரையினரைக் காணமுடியாதுள்ளது. இதற்குக் பலவிதமான காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இன்று எமது இளைஞர்கள் தமது சக்தியையும் பலத்தையும் உணரவில்லை என்பதாகும்.

இளைஞர்கள் என்றால்...?

இளைஞர்கள்தான் மாற்றத்தை ஏற்படுத்த வல்லவர்கள் என்பதை அல்குர்ஆன், அல்ஹதீஸ் எடுத்தியம்புகிறது. இதற்கு கஹ்ப் வாசிகளின் சம்பவம், மற்றும் இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்), கிடங்குவாசிகளின் சம்பவம்.... போன்ற இன்னோரன்ன சம்பவங்கள் ஆதாரம். அதுமட்டுமல்லாமல்ல, இளைஞர்களைப் பற்றி அனுபவசாலிகள் பல கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள். அந்தவகையில் ஈராக்கைச் சேர்ந்த நவீனகால சிந்தனையாளர் அஹ்மத் முஹம்மத் ராஷpத் தனது ஷஸினாஅதுல் ஹயாத்| என்ற புத்தகத்தில் சொல்லியிருக்கும் கருத்தை இங்கு குறிப்பிடுவது சிறந்தது. 'ஒரு கிராமத்தில் முதியவர்கள், பெண்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், சிறுவர்கள் மற்றும் நோயாளிகள் போன்றோர் சமூகமாற்ற செயற்பாட்டில் மிகக் குறைந்த அளவே பங்கெடுக்கின்றனர். அச்செயற்பாட்டின் ஆணிவேர் அக்கிராமம் கொண்டிருக்கும் இளைஞர்களே, இவ்விளைஞர்களின் செயற்பாட்டுத் திசைக்கேற்பவே அக்கிராமத்தின் திசை தீர்மானிக்கப்படுகிறது. எனவே இளைஞர்கள் மிகக் கவனமாக வழிகாட்டப்பட வேண்டிய தேவை இருக்கிறது.'

மேலும் சில அறிஞர்கள், 'இளைஞர்கள்தான் ஒரு சமுதாயத்தின் உயிர் நாடிகள்' என்கிறார்கள். ஏனென்றால் இளம் கண்டு பயமறியாதது போன்று இளைஞர்கள் துணிவும் வீரமும் உள்ளவர்கள். இத்தகைய சக்தியினராலேயே சமூகமாற்றம் சாத்தியப்படுகிறது. இதனை நவீன அறபுப் புரட்சிகள் எடுத்துக்காட்டின.

இன்றைய இளைஞர்கள்...

ஆனால் இன்று எமது இளைஞர்களின் நிலை என்னவென்று தெரியும், உலகை அனுபவிப்பதற்காக வாழ்கின்றார்கள். சற்று விரிவாக கூறுவதாயின் நான் யார், நான் எதற்காக வாழ்கிறேன்?.... போன்ற கேள்விகளுக்கு விடைதெரியாதவர்களாய், ஆபாசங்களிலும், அளிச்சாட்டியாங்களிலும், இதுபோன்ற விடயங்களில் அடிபட்டுச் செல்லும் சருகுகளாயிருக்கின்றார்கள்.

இந்நிலையை மாற்றுவது எவ்விதம்...?

நாம் இவர்களை மாற்றத்தின் கதாநாயகர்களாக மாற்றுவதற்கு அவர்களது இயல்புடன் ஒத்துப்போகும் அனுகுமுறைகளைக் கையாளவேண்டியுள்ளது. இன்றைய யுகம் குறிப்பாக வாலிப சமூகம் ஊடகத்தால் அடிமைப்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம். இதனைத்தான் மலேசியாவின் முன்னால் பிரதமர் மஹாதிர் முஹம்மத் அவர்கள், '19ஆம் நூற்றாண்டில் யார்கைவசம் கப்பல் படை இருந்ததோ அவர்கள்தாம் இவ்வுலகை ஆளும் ஜாம்பவான்களாக இருந்தார்கள். அதேபோன்று, 20ஆம் நூற்றாண்டில் யார் கைவசம் விமானப் படை இருந்ததோ அவர்கள்தான் இவ்வுலகின் ஜாம்பவான்களாகத் திகழ்ந்தார்கள். இந்த நூற்றாண்டின் ஜாம்பவான்களாகத் திகழுபவர்கள் ஊடகத்தை கையில் வைத்திருப்பவர்களே.' என்றார்கள்.

இந்த ஊடகம் இன்றைய உலகை ஆண்டுகொண்டிருக்கிறது. மேலே சொன்னது போல குறிப்பாக இது இளைஞர் சமூகத்தை அடிமைப்படுத்தியிருக்கிறது. ஆகவே நாம் இவர்களை மாற்றத்தின் கதாநாயகர்களாக மாற்ற ஊடகத்தில் மாற்றத்தை ஏற்றபடுத்த வேண்டும், அதனூடாக எமது புரட்சியை ஏற்படுத்த வேண்டும். இந்த ஊடகத்தைப் பொருத்த வரையில் இரண்டுவகைப்படுகிறது.

1. அச்சு ஊடகம்
2. இலத்திரனியல் ஊடகம்

அச்சு ஊடகங்கள் என்பது துண்டுப்பிரசுரங்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், சிற்றேடுகள், புத்தகங்கள்,.... போன்றனவாகும். இலத்திரனியல் ஊடகங்கள் என்பது, தொலைக்காட்சி, கைப்பேசி, இணையம், மின்னஞ்சள், Facebook, Twitter, Blogger,........ போன்றனவாகும். இதிலே இளைஞர்களையும் மக்களையும் அதிகம் அடிமைப்படுத்தியிருப்பது இலத்திரனியல் ஊடகங்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இவ்வகையான இலத்திரனியல் ஊடகங்களினூடாக ஒரு பாரிய புரட்சியை ஏற்படுத்துவதன் மூலம் ஒரு பலம் மிக்க வாலிபக் குழுவை சமூகத்தில் உருவாக்க முடியும்.

இது போன்று நாம் எழுதும் எழுத்துக்கள் இளைஞர்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்துவது மிகவும் குறைவாகும். ஏனென்றால் அவர்கள் வாசிப்புத் துறைக்கு ஆர்வம் காட்டாதவர்களாகவே இருக்கிறார்கள். உதாரணமாக Facebook இல் கூட நாம் ஒரு செய்தியைக் கொடுப்பதாக இருந்தால் அதை நாம் ஒரு Videoவாக அல்லது ஒரு Imageஆக கொடுக்கும் போதுதான் அதனை அதிகமானவர்கள் பார்ப்பார்கள். மாற்றமாக அதனை வெரும் எழுத்துக்களாக கொட்டினால் அதனைப் பார்க்கமாட்டார்கள். பொதுவாக இன்று அனேகமானவர்கள் Image Readerகளாகத் தான் இருந்துவருகிறார்கள் என்பதே இதற்குக் காரணம்.

இதற்காக சமூகம் வேண்டி நிற்பது...?

இன்று இளைஞர்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை கொண்டுவருவதற்கு நாம் செய்ய வேண்டிய முதலாவது வேலை இலத்திரனியல் ஊடகங்களில் மாற்றத்தை உண்டுபன்னி அதில் இஸ்லாமிய கருத்துக்களை மேற்சொன்ன விதத்தில் சொறிவதாகும். இதற்காக எமது சமூகம் இத்தகைய ஊடகத் துறையாளர்களை உள்வாங்கவேண்டும். ஊடகத்துறையாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இதனை பேராசிரியர் குர்ஷpத் அஹ்மத் அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள், இன்று எமது முஸ்லிம் உம்மத் அவசரமாக வேண்டி நிற்பது மூன்று விடயங்களையாகும்.
1. புத்திஜீவிகள்
2. துறைசார் நிபுனர்கள்
3. ஊடகத் துறையாளர்கள்

ஆகவே நாம் ஊடகத்துறையினர்களை எமது சமூகத்தில் உருவாக்கி அவர்களினூடாக ஊடகத்தில் பின்வரும் விடயங்களைச் செய்வதன் மூலம் மாற்றம் என்ற சொல்லின் தாத்பரியத்தை நிதர்சனமாக சமூகத்தில் காணலாம்.

இஸ்லாமிய சிந்தனையை பரப்புதல்.
இஸ்லாம் பற்றிய பிழையான கருத்துக்களை களைதல்.
பிற சமூகங்களுடன் நல்லுறவை பேனல்.
இஸ்லாம் பற்றி பூரணமான சிந்தனையை முன்னெடுத்தல்.
அடிப்படை அலகுகளில் இஸ்லாத்தை நிலைநாட்டல்.
உம்மத்தின் ஒற்றுமையை பாதுகாத்தல். (பிளவுபட்ட பெரும்பான்மை சமூகமொன்றில் ஒற்றுமையாக வாழும் சிறுபான்மை சமூகம் பலம்மிக்கது –  யூசுப் அல்கர்ழாவி)

ஆகவே நாம் சிறந்த ஊடகத்தினை உருவாக்குவதினூடாக, ஒரு பலம்வாய்ந்த இளைஞர் சமூகத்தை உருவாக்கி, அதன் மூலம் ஒரு முன்மாதிரி சமூகமாக மாறி, இந்த மாற்றமடைந்த சமூகத்தினூடாக உலகத்திற்கு ஒளியூட்டுவோம்.

إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ
''எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை.'' (13:11)


முஆத் முனாஸ் (வரகாபொலை)
இஸ்லாஹிய்யா வளாகம் - மாதம்பை.

No comments:

Post a Comment