சிரியா மீதான ஒபாமாவின் எச்சரிக்கை இலங்கைக்கும் தான்!
சிரியப் பிரச்சினையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கடந்த வாரம் வெளியிட்ட கருத்து, இலங்கை அர சாங்கத்துக்கும் சற்று உதறல் எடுக்கக் கூடியது தான்.
இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்திய சிரியாவைத் தண்டிக்கும் உரிமை அமெரிக்காவுக்கு உள்ளது.
ஐ.நா பாதுகாப்பு சபையில் ரஷ்யாவைக் கவசமாகப் பாவித்து சிரியா தப்பிக் கொள்ள முனைவதை அனுமதிக்க முடியாது.
பாதுகாப்புச் சபையின் அனுமதியைப் பெறாமலேயே சிரியா மீது தாக்குதல் நடத்துவோம்.
எந்த நாடும் ஐ.நா.வைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொள்வதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
இவ்வாறு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா குறிப்பிட்டது நேரடியாக இலங்கையுடன் சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல.
ஆனால் ஐ.நா பாதுகாப்புச் சபையை கவசமாகப் பயன்படுத்தி தப்பிக் கொள்ளலாம் என்ற இலங்கை அரசின் நினைப்பில் இது மண் போட்டு விடக் கூடிய கருத்து.
ஏனென்றால் ஐ.நா பாதுகாப்புச்சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளான சீனாவும் ரஷ்யாவும் தமது பக்கத்தில் நிற்கின்றன என்ற துணிச்சலில் தான் இலங்கை அரசாங்கம் இதுவரை செயற்பட்டு வந்துள்ளது.
ஐ.நா.வினது, அமெரிக்காவினது, மேற்குலகினது பல கோரிக்கைகளை நிராகரித்ததற்கும், அழுத்தங்களைத் தூக்கியெறிந்ததற்கும், இலங்கை அரசாங்கத்துக்கு அடிப்படைப் பலத்தைக் கொடுத்தது, இந்த ஐ.நா பாதுகாப்புச் சபை தான்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்த போது, போர் நிறுத்தம் செய்யுமாறு ஐ.நா.வும், அமெரிக்காவும் பிற நாடுகளும் விடுத்த வேண்டுகோள்களை, இலங்கை அரசாங்கம் உறுதியாக நிராகரித்திருந்தது.
போர் முடிவுக்கு வந்த பின்னர், வவுனியாவில் முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழர்களை விடுவிக்கவும், வேறு மனிதாதாமானத் தேவைகளை நிறைவேற்றவும், மனிதஉரிமைகளை உறுதிப்படுத்தவும் கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் குறித்தும் அரசாங்கம் அலட்டிக் கொள்ளவேயில்லை.
சர்வதேச அரங்கில் எந்த நெருக்கடி ஏற்பட்டாலும், சீனாவும், ரஷ்யாவும் தோள் கொடுக்கும் என்ற தைரியத்தில், யாராக இருந்தாலும், தூக்கியெறியத் தயங்கியதில்லை இலங்கை அரசாங்கம்.
ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழு சர்வதேச போர்க்குற்ற விசாரணையை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்த போதிலும், அவரோ அல்லது ஐ.நா.வோ அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளாமல் தள்ளிப் போட்டதற்கும், காரணம் ரஷ்யாவும், சீனாவும் தான்.
ஐ.நா. பாதுகாப்புச் சபையின் அனுமதியுடன் தான் சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு உத்தரவிட முடியும் என்ற நிலையில் தான் அந்த அறிக்கையின் பரிந்துரையை ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு அனுப்புவதைத் தவிர்த்திருந்தார் பான் கீ மூன்.
கடைசியாக வேறு வழியின்றி அதை ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு அனுப்பி விட்டு பான் கீ மூன் தனது பொறுப்பு முடிந்து போனதாக, நழுவிக் கொண்டார்.
அந்த அறிக்கையை வைத்து நவநீதம்பிள்ளையாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த இரண்டு தீர்மானங்கள் பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட போதிலும், அந்தத் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக அமெரிக்கா கூட தனது நிலையில் இருந்து இறங்கிப் போக வேண்டியிருந்தது.
அதனால் அமெரிக்கா எதிர்பார்த்தது போன்று, கடுமையான தீர்மானங்களை இலங்கைக்கு எதிராக கொண்டு வர முடியவில்லை.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் வீட்டோ அதிகாரங்கள் இல்லாவிட்டாலும், இலங்கை அந்த நாடுகளின் செல்வாக்கைப் பயன்படுத்தி தப்பிக்கப் பார்த்தது உண்மை.
இரண்டு தீர்மானங்களின் போதும், இலங்கையைக் காப்பாற்ற சீனா உச்சக்கட்ட முயற்சிகளை எடுத்திருந்தது.
இரண்டு தடவைகள் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றிய அமெரிக்காவுக்கு, இனி அடுத்து என்ன செய்வது என்ற குழப்பம் இருக்கவே செய்கிறது.
ஜெனீவா தீர்மானத்துக்கு அமைய இலங்கை நிறைவேற்ற வேண்டியஇ கடப்பாடுகளை நிறைவேற்றவில்லை என்று அமெரிக்கா பலமுறை சுட்டிக்காட்டியும், அதையெல்லாம் இலங்கை அலட்டிக் கொள்ளவேயில்லை.
இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் தார்மீக உரிமை அமெரிக்காவுக்கு கிடையாது என்று கடந்தவாரம் கூட பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
அதாவது, யார் எதைச் சொல்கிறார்கள், அதற்கு அவர்களுக்கு என்ன தகுதி உள்ளது என்று குறை பிடிப்பதிலேயே அரசாங்கம் குறியாக இருக்கிறதேயன்றி, தனக்கான கடப்பாட்டை நிறைவேற்றுவதில் அக்கறை செலுத்தவில்லை.
ஜெனீவா தீர்மானத்தை இலங்கை நிறைவேற்றியுள்ளதா? என்பதை மதிப்பிட வந்த ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, கொழும்பில் வெளியிட்ட கருத்துக்கள், அவரது அறிக்கை எந்தளவுக்கு இலங்கைக்கு சாதகமாக இருக்கும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
நவநீதம்பிள்ளையின் அறிக்கை தமக்குச் சார்பாக அமையப் போவதில்லை என்பதை, அரசாங்கம் நன்றாகவே உணர்ந்திருப்பதால் தான், காற்று எந்தப் பக்கம் வீசுகிறது என்பதை நன்றாகவே புரிந்து கொள்ள முடிவதாக, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நவநீதம்பிள்ளை ஜெனீவா கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை திருப்திகரமாக இல்லாது போனால், அமெரிக்கா அடுத்து என்ன செய்யும் என்ற கேள்வி இருக்கிறது.
இன்னொரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வராது என்றும், ஏனைய அமைப்புக்களுடன் ஆலோசித்து வேறு வழிகளை ஆராயும் என்றும் சில மாதங்களுக்கு முன்னரே அமெரிக்கா தெரிவித்திருந்தது.
அமெரிக்கா ஐ.நா பாதுகாப்புச் சபையின் உதவியை நாட முடியாது, அங்கு வீட்டோ அதிகாரத்துடன் ரஷ்யாவும், சீனாவும் தமக்கு ஆதரவாக இருக்கின்றன என்று இலங்கை வெளிப்படையாகவே பலமுறை கூறியுள்ளது.
அமெரிக்காவுக்கும் இது ஒரு சிக்கலான விடயம் தான்.
ஏற்கனவே சிரியா விடயத்தில், ஐ.நா. பாதுகாப்புச்சபை மூலம் நடவடிக்கை எடுக்க முயன்ற அமெரிக்காவுக்கு இரண்டு முறை தோல்வி தான் மிஞ்சியது.
இலங்கைக்கு எதிராக, பாதுகாப்புச் சபையில் தீர்மானம் கொண்டு வந்தாலும் அதுவே நடக்கும் என்பதும் அமெரிக்காவுக்குத் தெரியும்.
ஆனால், சிரியா விடயத்தில், அமெரிக்கா தனது பொறுமையின் எல்லைக்கே வந்து விட்டது.
பாதுகாப்புச்சபை மூலம் சிரியா தப்பிக் கொள்வதை அனுமதிக்க முடியாது என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறியுள்ளது. தனியே சிரியாவுக்கான எச்சரிக்கையாக மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது.
சிரிய விவகாரம் புதிய புண் என்றால் இலங்கை விவகாரம் பழைய புண்.
இந்த இரண்டுக்கும் வேறு வேறு பரிமாணங்கள் இருந்தாலும், சிரியா மீதான தாக்குதலை பாதுகாப்புச்சபையின் ஒப்புதலின்றி அமெரிக்கா நடத்துமேயானால், இலங்கை அரசாங்கமும் தனது போக்கை மாற்றிக் கொள்ள நிர்ப்பந்திக்கப்படும்.
ஏனென்றால், அமெரிக்கா நினைத்தால், சீனாவையும் ரஷ்யாவையும் உதாசீனம் செய்து விட்டு இலங்கை மீது நடவடிக்கை எடுக்கலாம்.
நடவடிக்கை என்றதும், இராணுவ நடவடிக்கையாக இருக்கும் என்று கருதக் கூடாது. அதற்கான தேவை தற்போது இங்கில்லை.
ஆனால் இலங்கை மீது வேறு நடவடிக்கைகளை அமெரிக்கா தன்னிச்சையாக எடுப்பதற்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்தும்.
சிரியா மீதான தாக்குதலை அமெரிக்கா தன்னிச்சையாக ஆரம்பிக்குமேயானால் ரஷ்யாவும் சீனாவும் கூட தமதுபொறுப்புகளை ஓரளவுக்கு உணர்ந்து கொள்ளும்.
அதாவது நிரந்தர உறுப்புரிமையை வைத்து சிரியா மீதான தாக்குதலை தடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இந்த நாடுகள் தமது மூலோபாயங்களை மாற்றிக் கொள்ள முனையலாம்.
அத்தகைய மாற்றம் கூட இலங்கைக்கு சாதகமானதாக இருக்காது.
ஆக ஒருபக்கத்தில் ஒபாமாவின் அறிவிப்பு உலகின் சட்டாம்பிள்ளையாக அமெரிக்காவை மீண்டும் உறுதிப்படுத்தினாலும் இன்னொரு பக்கத்தில் மனிதஉரிமை மீறல்களுக்கு பாதுகாப்பு கவசமாக ஐ.நா. பாதுகாப்புச் சபை இருப்பதையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தொடக்கமாகவும் கருதலாம்.
No comments:
Post a Comment