ஆசைகளை கட்டுப்படுத்தும் நோன்பு
கண்ணியமிக்க ரமழான் மாதம் இதோ மீண்டும் எம்மிடம் வந்திருக்கின்றது. பாக்கியம் நிறைந்த ரமழான் மாற்றங்களுக்ககான பாதையாக அமைய வேண்டுமென எதிர்பார்க்கின்றோம். எனவே 'ரமழான் ஆசைகளின் கடிவாளம்" என்ற வாசகம் இவ்வருட ரமழான் இலக்காக அமையட்டும். இவ்வருட இலக்கை அடைந்து கொள்ளும் வகையில் நான்கு விடயங்களை கீழே தருகின்றோம். உண்மையில் இவை கண்டிப்பாக கட்டுப்படுத்தப்பட வேண்டிய நான்கு இச்சைகளாகும்.
1) வயிற்றை நிரப்பும் பேராசை
2) காம இச்சை
3) கோபாவேசம்
4) கடிவாளமில்லாத நாவு
குறிப்பிட்ட நான்கு அம்சங்களும் தனிநபர் வாழ்விலும், குடும்ப உறவுகளிலும், சமூக மட்டத்திலும், நாடுகளுக்கிடையிலும் சந்தேகமின்றி பாரிய சீர்கேட்டை ஏற்படுத்தும் என்பது நாமறிந்ததே. குணப்படுத்த முடியாத நோயாக பரவும் இந்த கொடிய நோய்களுக்கு தகுந்த கடிவாளமிட்டு சிகிச்சையளிக்கும் பயிற்சிப் பாசறைதான் நோன்பாகும்.
ஆசைகள் ஏன்?
மனிதன் உணவில் ஆசையுள்ளவன். தொடர்ந்தேர்ச்சியான மனித வாழ்வுக்கு அதுவே அடிப்படைக் காரணி. எனவே சாப்பிடும்
ஆசையோடு மனிதனை அல்லாஹ் படைத்துள்ளான். அதில் எல்லைமீறும் போது அவனுக்கு கடிவாளம் தேவைப்படுகிறது.
இச்சைகளில் மிகவும் பலம் வாய்ந்தது காம உணர்வாகும். மனித இன விருத்திக்கான அடிப்படைக் காரணியும் அதுவே. எனவே
அல்லாஹ் காம உணர்வை மனிதனில் படைத்துள்ளான். ஆனால், அது இறைவழிகாட்டலுடன் பிரயோகிக்கப்பட வேண்டும்.
பல பாதகங்களையும் கொண்டுவரும் கோபம் அதற்குரிய இடத்தில் இருந்தால் தீமைகள் பரவாது. எங்கும் பாதுகாப்பு நிலவும்.
நாவு மனித உறுப்புக்களிலே மிக நீண்ட காலம் சிறைவைக்க வேண்டிய ஒன்று. ஆனால் பேச்சுக்கள் இறை திருப்தியை
அடிப்படையாக கொண்டு அமைந்தால் நிச்சயமாக உயர்ந்த சுவனம் பரிசாக கிடைக்கும். தவறும் போதும் பாதாளம் செல்ல நேரிடும்.
கடிவாளமில்லாத நான்கு ஆசைகளின் விளைவுகள்:
வயிறு:
அதிகரித்த உடல் பருமன் 25 இற்கும்; அதிகமான தீராத நோய்களுக்கு காரணி.
அளவை மீறிய உடல் பருமன் இன்னொரு பொருளாதாரச் சுமை.
அதிகரித்த உடல் பருமன் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கும்.
சோம்பல், வினைத்திறனில் பலவீனம் போன்றன உடல் பருமன் தரும் பரிசுகள்.
காம இச்சை
காம உணர்வுக்கு கடிவாளம் இல்லாததன் விளைவு உலகின் மிகப் பெரிய வணிகமாக அது மாறியுள்ளது.
எய்ட்ஸ் நோய் விபசாரத்தின் விளைவு என்பதை யாவரும் அறிந்ததே.
ஒழுக்கம் பேணாத கல்வி வாழ்விலும் இதனைக் காணலாம். ஆசிரியர்கள் மாணவிகளை கற்பழிக்கும் நிகழ்வுகள் இன்று அதிகமாக
வாசிக்கும் செய்தியாக மாறியுள்ளது.
கணவன்-மனைவி பரஸ்பர துரோகம் அதிகரித்துள்ளதை பல ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
உலகில் அதிகளவில் பரவியுள்ள நோய்கள் பாலியல் சார்ந்த நோய்களே என சர்வதேச சுகாதார அமைப்பு கூறுகிறது.
கோபாவேசம்
பெற்றோர் குழந்தைகளுக்கு காட்டும் கோபத்தால் ஏற்படும் தீய விளைவுகள் கொலை வரை சென்றுள்ளது.
குடும்ப சீரழிவிற்கும், விவாகரத்துகளுக்கும் காரணி கோபம் என்றால் அது மிகையல்ல.
உலகலாவிய அநியாயங்களின் பின்னனியில் பிரதான காரணியாக இருப்பது கோபமே.
நாவு
யோசிக்காமல் கதைக்கும் வார்த்தைகளே குடும்பப் பிணக்குகளின் மூல காரணி.
நண்பர்கள், உறவினர்கள், ஊர்கள், நாடுகளுக்கிடையிலான பிளவுகளின் அச்சாணி நாவே.
போராட்டத்தின் முன் நடைபெறும் பனிப்போர் வார்த்தைகளே.
இச்சைகளை நெறிப்படுத்துவதில் நோன்பின் பங்கு
ரமழான் உடல், அறிவு, ஆன்மா என்ற மூன்று பகுதிகளையும் பரிசுத்தப்படுத்துகின்றது.
நோன்பு அதன் முழுமையான வடிவில் நோற்கப்படும் போது இறையச்சம் வளரும்.
நோன்பு பாவக்கறைகளை போக்கும்.
ரமழானில் ஷைத்தான் விலங்கிடப்படுகிறான். வணக்க வழிபாடுகளுக்குரிய கூலி அதிகமதிகமாக கிடைக்கிறது. எனவே, அல்லாஹ்வை
நெருங்குவதற்கான பாதை திறந்துள்ளது.
நோன்பு காலங்களில் கேட்கப்படும் துஆ மறுக்கப்படமாட்டாது.
அமல்களை ஆர்வமாக செய்வதற்குரிய சூழல் ரமழானில் அதிகமாகவே இருக்கின்றது.
ரமழான் ஒரு பாதுகாப்பு வேலி.
பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்படுவதை ரமழான் கட்டுப்படுத்துகிறது.
உலோபித் தனத்திலிருந்து மனிதனை மீட்டெடுக்கிறது.
கற்பொழுக்கம் பேணி வாழ பயிற்றுவிக்கின்றது.
ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கிறது.
தனி நபர் என்ற ரீதியில் செய்ய வேண்டிய சில செயற்பாடுகள்
1) 'ரமழான் ஆசைகளின் கடிவாளம்" என்ற வாசகத்தை அடிக்கடி காணும் வகையில் வைத்திருத்தல்
2) அல்லாஹ்வுக்காக என்ற மிகத் தூய்மையான எண்ணத்துடன் நோன்பு நோற்றல்
3) நாவைப் பேணுதல் (பொய், புறம், கோள்,அவதூறு, பொய் சாட்சி, திட்டுதல்)
4) உண்பதிலும் குடிப்பதிலும் சிக்கனத்தை கடைப்பிடித்தல்
5) ஐவேளைத் தொழுகையை ஜமாஅத்தாக தொழுதல்
6) முன்-பின் ஸ{ன்னத்களை தவறாமல் பேணிவருதல்
7) தராவீஹ் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதல்
8) அல்குர்ஆன் ஓதுதல்
9) திக்ர் அவ்ராத்களில் நாவை திளைத்திருக்கச் செய்தல்
10) பிரார்த்தனையில் ஈடுபடல்
11) இறுதிப் பத்தில் இஃதிகாப் இருத்தல்
12) லைலதுல் கத்ர் இரவை அடைந்து கொள்ளும் பேராசையோடு செயற்படுதல்
13) மன்னிக்கும் பண்பை வளர்த்தல்
14) தான தருமங்களை அதிகமாக செய்தல்
15) வேற்றுமை கொண்டுள்ள சகோதரர்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல்
16) நாவின் விபரீதம் என்ற புத்தகத்தை அமைதியாக வாசித்தல்
No comments:
Post a Comment