Thursday, March 17, 2016

உளத்தூய்மையும் இறைகாதலும்

உளத்தூய்மையும் இறைகாதலும்

தூய்மை, சுத்தம் என்று பேசும் போதெல்லாம் இரண்டுவகையான சுத்தங்கள் குறித்த பேச்சு முன்னுரிமைப்படுத்தப்படுகின்றது. அவை இரண்டில் ஒன்று புறச்சுத்தம், மற்றையது உளச்சுத்தம். இதில் புறச்சுத்தம் குறித்து பேசவேண்டிய அவசியம் இல்லை என்றுசொல்லும் அளவிற்கு புறச்சுத்தம் பற்றிய விழிப்புணர்வு சமூகத்தில் இருந்தாலும் சுத்தம் குறித்துபேசும் போது அதனை விட்டுவிட்டு செல்லமுடியாது என்ற ரீதியில் அதனை சற்று சுருக்கமாக எழுதுகிறேன்.

இன்று ஒரு மனிதன் பிறந்தது முதல் அவனது இரப்பு வரை அவனது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அனைத்து அம்சங்களுக்குமான புறச்சுத்த ஏற்பாடுகள் வகை வகையாக விளம்பரப்படுத்தப்படுகின்றது. எந்தளவுக்கொனில் முகத்துக்கு, உடம்புக்கு, தலைக்கு.... என்று ஆணுக்கும் பெண்ணுக்கும் வௌ;வேறாக... ஒவ்வொரு உருப்புக்கும் வேறாகவும் வாசனைத்திரவியங்கள் என்றும் சவர்க்காரங்கள் என்றும் எத்தனையோ விதமான அழகு சாதனங்கள் இன்று கடைத்தெருக்களை நிரப்பியிருக்கிறது. இதனைத்தான் மேற்கும் அதனது ஊடகங்களும் இனி இல்லை என்ற அளவிற்கு ஆர்வமூட்டி ஆசையூட்டி விளம்பரப்படுத்தி வயிறுவளர்க்கிறது.

ஆனால் உளத்தூய்மை என்ற ஒரு விடயம் இன்று மறக்கடிக்கப்பட்டிருக்கும் ஒரு விடயமாக தொடர்ந்து இருந்துவருகின்றது. ஆனால் இஸ்லாம் இது குறித்து அலாதியான கவனத்தை செலுத்துகின்றது என்பதை அதனை ஓரளவு கற்றவர்களாலும் புரிந்துகொள்ள இயலுமாக இருக்கும். ஆக நான் இந்த ஆக்கத்தினூடாக மரக்கடிக்கப்பட்டிருக்கும் இந்த உளத்துய்மையை உங்களது உள்ளங்களில் விதைக்கவிரும்புகிறேன்.. இன்ஷா அல்லாஹ்...

ஒரு மனிதனுடைய வார்த்தையில், செயற்பாட்டில், அவனது வாழ்வில், மரணத்தில், மௌனத்தில், பேச்சில், வணக்கத்தில்... என்று இந்த உலகத்தில் உள்ள அனைத்து செயற்பாடுகளையும் ஒரே ஒரு விடயத்தை நாடிசெயற்படுத்துவது உளத்தூய்மையாகும். அந்த ஒரு விடயம் தான் அல்லாஹூத்தஆலாவின் திருப்பொருத்தமாகும். இதனால்தான் இஹ்லாஸ் எனும் உளத்தூய்மை மிகவும் கடினமான ஒன்றாகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் காணப்படுகின்றது.

நாம் எந்த ஒரு விடயத்தையும் ஒருவரைநாடி செய்ய வேண்டுமென்றால் அந்த குறிப்பிட்ட நபர் எம்மிடத்தில் மதிப்பிலும், அந்தஸ்திலும், அன்பிலும் அதி உச்ச இடத்தைப் பெற்றவராக, மேலும் அனைத்திலும் மேலான எமது உற்ற நேசராக மாறவேண்டும். அப்படிமாறும் பட்சத்தில் தான் நாம் ஒவ்வொரு விடயத்தையும் குறித்த அந்த நபரை நாடியே செய்ய முடியும். ஆகவேதான் நான் சொல்கிறேன் ஒருவர் மீது நாம் அலாதியான பிரியம் வைத்தால் தான் அவருக்கு நாம் தூய்மையாக நடக்க முடியும்.

உதாரணமாக| இன்று இளைஞர் யுவதிகளை ஆட்கொண்டிருக்கும் காதல் என்ற கலாச்சாரத்தைப் பாருங்கள். இரு காதலர்களுக்கு மத்தியில் இருக்கின்ற உறவைப் பாருங்கள்... சிரிப்பதும்-சிந்திப்பதும், அழுவதும்-அசிங்கப்படுவதும், உண்ணுவதும்-பருகுவதும், ஆடை அணிவதும்-அலங்காரம் இடுவதும்... என்று தங்களது அனைத்துவிதமான செயற்பாடுகளையும் ஒரு காதலன் தனது காதலிக்காகவே செய்கிறான், அவளது நினைவிலேதான் செய்கிறான், ஒருவிடயத்தை செய்யும் போது அவள் இதனை விரும்புவாளோ? வெறுப்பாளோ? என்று ஏராளமான கேள்விகளுடனேயே செய்கிறான்... இன்னும் ஏராளம்... ஒரு படைப்பை நேசித்ததாலே இத்தனை தூய்மை அந்த உறவில்...!!

இதனையும் மீறி| இந்தக் காதல் எம்மைப் படைத்த இறைவனோடு வருமானால் எமது அனைத்து செயற்பாடுகளும் அவனை நோக்கியே நகரும்... அந்த நகர்வைத்தான் நாம் இஹ்லாஸ்-உளத்தூய்மை என்று சொல்கிறோம். அதனை விடுத்து இந்தக் காதலை நாம் அல்லாஹ்வின் ஒரு அற்பப்படைப்பிற்கு செலுத்துவோமானால் அது அல்லாஹ்விற்கு செய்யும் இணைவைப்பு என்று குர்ஆன் பரைசாற்றுகின்றது...

'அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாகவைத்துக் கொண்டு, அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள்.'ஆனால் நம்பிக்கைகொண்டவர்கள் அல்லாஹ்வை தீவிரமாககாதல் கொள்வார்கள்.' (2:165)

இந்த வசனம் கூறும் அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்று சூழுரைக்கும் இணைவைத்தல் என்ற பாவம் எதனால் வந்தது? அந்த மனிதர்கள் அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப அல்லாஹ் அல்லாதவர்களை நேசித்ததே... பின்னர் ஈமான் கொண்டவர்களை பற்றிப் பேசும்போது அல்லாஹ் கூறுவது, அவர்கள் அல்லாஹ்வை தீவிரமாக நேசம் கொள்வார்கள்...

ஆக நேசத்தை அல்லாஹ்விற்கு மாத்திரம் செலுத்தும் போது இஹ்லாஸ் எம் உள்ளத்தை அலங்கரிக்கும் என்பது நியதியே...

இறை நேசத்தை அதிகரித்து உளத்தூய்மையை உறுதிப்படுத்த சில வழிமுறைகள்...

1. الذكر - இறைநினைவு

திக்ர் என்பது அல்லாஹ்வின் நினைவிலேயே எமது அத்தனை செயற்பாடுகளையும் மேற்கொள்வதாகும். உதாரணமாக ஒரு மனிதன் கைப்பேசியில் மிக்க ஆர்வம் கொண்டவனாயிருந்தால் சமூகத்தில் அவரது நிலை பின்வருமாறு இருக்கும். எங்குசென்றாலும், யாருடனும், எச்சந்தர்ப்பத்திலும்... அவனது உதடுகள் கைப்பேசி... கைப்பேசி... என்றே உளரிக்கொண்டிருக்கும்... இது தான் நியதி... ஏனெனில் தான் விரும்புவதை அடுத்த மனிதர்கள் விரும்பாவிட்டாலும் விரும்பினாலும் அதனை அலட்டிக் கொள்ளாது அதைப்பற்றியே பேசிக் கொண்டிருப்பது அவனது நிலை.. இதனால் தான் அல்லாஹ் அவனை நினைவு கூர்வது குறித்து பின்வருமாறு கூறுகின்றான்...

'அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள். (அப்படியென்றால் அவர்கள் எந்தநிலையில், எந்த இடத்தில் எப்படியிருந்தாலும் அவர்களது வேலை அல்லாஹ்வை நினைவுபடுத்துவதாகும். இது தான் திக்ர்) வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, (அப்படியென்றால் ஒரு படைப்பைப் பார்த்தாலும் அதனூடாக அவன் அல்லாஹ்வைத்தான் காண்கிறான்.. உதாரணமாக அல்லாஹ்வின் படைப்பான எதிர்பால் இனத்தைக் காண்கிறான், ஒரு ஆண் இன்னொரு பெண்ணைக் காண்கிறான், அப்போது அவனுக்கு இறைவனின் ஞாபகம் வரும், அவனது தடை உத்தரவு நினைவில் வரும்.. உடனே தன் பார்வையை மறுபக்கமாக திருப்பிக் கொள்வான்) 'எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை, நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!' (பின் அல்லாஹ்வைத் துதித்துதான் செய்த பாவத்திற்காக இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்பான்...) (3:191)

ஆக திக்ர் என்பது ஒரு மனிதனுடைய பேச்சிலும், நடத்தையிலும், உடையிலும், நடையிலும், இன்னோரன்ன அனைத்து செயற்பாடுகளிலும் இறைவனை நினைவுகூர்வதாகவே அமையும்... இதனைத் தான் மேற்சொன்ன இறைவசனமும் சுட்டிநிற்கிறது.

2. المراقبة - இறை அவதானம்

நாம் மிகவும் நேசிக்கின்ற, கண்ணியமாக கருதுகின்ற ஒரு உயிருக்கு முன்னால் நாகரிகமான முறையிலும், பாவமற்ற உத்தமப் புருஷராகவுமே நாம் வாழவிரும்புகின்றோம்... ஆனால் நாம் நேசிக்கும் இறைவன் முன்னிலையில் பாவம் செய்வதை அலட்டிக்கொள்ளாமலே வாழ்கிறோம்... காரணம் இன்று நவீன உலகம் கண்டுபிடித்திருக்கும் CCTV, Hidden கெமராக்களுக்கு இருக்கும் பயம்; எல்லாம் வள்ள இறைவனின் பார்வைக்கும் கேள்விக்கும் இல்லை...

காரிருளில் கருங்கல்லில் பயணிக்கும் கட்டெரும்பைப் பார்க்கிறான் அதன் சப்தத்தையும் கேட்கிறான் அவன்.. இன்று இலட்சம் பேருக்கு முன்னால் எனது பாவம் அரங்கேரப்போகிறது என்ற அச்சம் எம் ஆழ்மனதை ஆர்பரிக்கின்றது... ஆனால் நளை மஹ்ஷரில் உலகின் அனைத்துப் படைப்புகளுக்கு முன்னாலும் அல்லாஹ்வின் கமராவில் பதியப்பட்ட பதிவுகள் அம்பலமாகப் போகின்றது என்ற கவளை வருவதில்லை.. இந்தக் கவளையோடும், அச்சத்தோடும் வாழ்வது தான் இறை அவதானம் குறித்துசிந்திக்கத் தூண்டுதலாக அமையும்.

3. تلاوة القرآن– அல்குர்ஆன் ஓதுதல்

இறைவனின் வார்த்தைகளோடு இரண்டர சங்கமித்து அவனோடு உறவாடும் இனியபொழுதுகள் அல்குர்ஆனை பாராயனம் செய்வதில் கிடைக்கிறது.. என் காதலனின் காவியம் என் கல்பை கரைக்கிறது.. ஆனால் இறைவனுடனான காதலில் அவன் வார்த்தைகள் என் கல்பின் கரைகளைக் கூட கரைப்பதில்லை.. இது உண்மையான நேசமா..? என என்னத்தோன்றுகிறது.. அந்தக் குர்ஆனோடுநான் களிக்கும் நேரங்கள் என் வாழ்வில் விரல்விட்டு என்னும் நிமிடங்களாகவே இருக்கின்றது.. உள்ளங்களுக்கு உயிர்கொடுக்கும் ஜீவகாவியமான இந்தக் குர்ஆனுடனான உறவு அந்தக் காவியத்தின் சொந்தக்காரனுடனான உறவை பலப்படுத்தும்..

இறை காதலினூடாக உள்ளத்தை தூய்மைப்படுத்த இவை மாத்திரமல்ல, இன்னும் எத்தனையே வழிமுறைகளை இறைவன் தந்திருக்கின்றான்.. அந்த வழிமுறைகளை வாழ்க்கையில் வாழவைத்து வளம்மிக்க வாழ்க்கைக்கு அத்திவாரமிடுவோம்... இன்ஷா அல்லாஹ்.!!!

اللُّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ حُبَّكَ، وَحُبَ مَنْ يُحِبُّكَ، وَالْعَمَلَ الَّذِيْ يُبَلِّغْنِيْ حُبَّكَ. اَللَّهُمَّ اجْعَلْ حُبَّكَ أَحَبَّ إِلَيَّ مِنْ نَفْسِيْ، وَأَهْلِيْ، وَمِنَ الْمَاءِ الْبَارِدِ..

யாஅல்லாஹ்! நான் உனது நேசத்தையும், உன்னை நேசித்தவர்களின் நேசத்தையும், உன்னுடனான நேசத்தை அதிகரிக்கும் அமல்களையும் கேட்கிறேன். யாஅல்லாஹ்! உன்னுடனான நேசத்தை எனக்கு விருப்பமான எனது உயிர், குடும்பம் மற்றும் குளிர்ந்த நீர் ஆகியவற்றை விட மேலானதாக ஆக்கித்தருவாயாக!!! ஆமீன்.. ஆமீன்.. யாரப்பல் ஆலமீன்..




வரகாபொலை முஆத் முனாஸ்
மாதம்பை இஸ்லாஹிய்யா வளாகம்

No comments:

Post a Comment