தற்போதைய நிகழ்வுகள் குறித்து இமாம் ஹஸனுல் பன்னா பேசுகிறார்கள்…
இஹ்வான்களே!
இஸ்லாத்தின் உண்மைநிலை குறித்த மக்களின் அறிவீனம் உங்களின் பாதையில் ஒரு தடையாக வரும். மார்க்க பக்திகொண்ட சிலரும் சில உத்தியோகபூர்வ உலமாக்களும் இஸ்லாம் பற்றிய உங்களின் புரிதலை ஆச்சரியமாகக் காண்பார்கள். அந்தப் பாதையில் நீங்கள் போராடுவதை நிராகரிப்பார்கள். தலைவர்களும் தளபதிகளும் அந்தஸ்த்து மிக்கவர்களும் அதிகாரவர்க்கத்தினரும் உங்கள் மீது குரோதம் கொள்வார்கள். வித்தியாசமின்றி எல்லா அரசாங்கங்களும் உங்களுக்கெதிராக நிற்பார்கள்.
ஒவ்வொரு அரசாங்கமும் உங்களது நடவடிக்கைகளை வரையறுக்க முயற்சிப்பார்கள். நீங்கள் செல்லும் பாதையில் தடைகளை ஏற்படுத்த முனைவார்கள். உங்களை எதிர்க்கவும் உங்களது பிரச்சாரப்பணியின் ஒளியை அணைக்கவும் வன்முறையாளர்களை தூண்டிவிடுவார்கள்.
அதற்காக, பலவீனமான அரசாங்கங்களையும் மோசமான நடத்தைகளையும் உதவிக்காக அழைத்துக் கொள்வார்கள். அவர்களை நோக்கி நீளும் கரங்களை கேள்விக்கணைகளால் எதிர்கொள்வார்கள். உங்களுக்கு தீங்குகிழைப்பார்கள், அத்துமீறுவார்கள்.
எல்லோரும் உங்களது பிரச்சார பணியைச் சூழ சந்தேகங்களையும் அநியாயமான குற்றச்சாட்டுக்களையும் கிளரிவிடுவார்கள். உங்களது தஃவாப்பணி மீது சேறுபூச முற்படுவார்கள். அந்த தஃவாவுக்கு மிக மோசமான தோற்றமொன்றை வழங்க முனைவார்கள்.
அவர்கள் தமது பலத்திலும் அதிகாரத்திலும் தங்கியிருப்பார்கள். அவர்களது செல்வத்திலும் அதிகாரத்திலும் ஊடகத்திறனிலும் அவர்கள் நம்பிக்கை கொண்டிருப்பார்கள்.
சந்தேகமில்லாமல் இவையனைத்தையும் எதிர்கொண்டு நீங்கள் சோதனைக் கட்டத்தினுள் நுழைவீர்கள். அப்போது, அவர்கள் உங்களை சிறைப்பிடிப்பார்கள், படுகொலை செய்வார்கள், கைது செய்வார்கள், விரட்டியடிப்பார்கள், உங்களது நலன்களை பறிமுதல் செய்வார்கள், உங்களது நடவடிக்கைகளை சீர்குழைப்பார்கள், உங்களது வீடுகளை சோதனையிடுவார்கள்.
உங்களது இந்தச் சோதனைக்காலம் சிலபோது கொஞ்சம் நீடிக்கலாம். நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவிசெய்ய தயாராக இருக்கிறீர்களா?
”அளவற்ற கருணை சொரிவோன் நிகரற்ற கருணைப் பண்பு கொண்டோன் அல்லாஹ்வின் பெயரால், நாங்கள் இறைநம்பிக்கை வழியில் நுழைந்து விட்டோம் என்று கூறியதற்காக அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டுவிடப்படுவார்கள் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்களா! நாம் அவர்களுக்கு முன்பிருந்தவர்களை கடுமையாக சோதித்திருக்கிறோம். உண்மைப்படுத்தியவர்களை அல்லாஹ் நன்கறிவான். பொய்யாக்கியோரையும் அவன் நன்கறிவான்.” ( அன்கபூத் 1-3)
-இமாம் அஷ்-ஷஹீத் ஹஸனுல் பன்னா (றஹ்)-
No comments:
Post a Comment