Friday, September 6, 2013

உன்னால் முடிந்ததும் முடியாததும்! (ஸீஸிக்கு ஒரு மடல்)

உன்னால் முடிந்ததும் முடியாததும்! (ஸீஸிக்கு ஒரு மடல்)

ஜெம்ஸித் அஸீஸ்


அடக்குமுறைக்கு எதிராக
எழுந்து நின்றால்
கழுத்தை அறுக்க முடியும்!

சதிக்கு மேல் சதி செய்து
பிணங்கள் மீது
குதித்துக் கூத்தாட முடியும்!

அராஜகத்தின் அவலம் மறைக்க
புன்னகைக்கும் மையித்துக்களையும்
தீயிட்டுக் கொழுத்த முடியும்!

துப்பாக்கி உனக்கு
விளையாட்டுப் பொருள்
நினைத்தபடி பந்தாட முடியும்!

பன்னாவின் பரம்பரையை
தேடித் தேடி
ஒழித்துக்கட்ட முடியும்!

இஃவானிய இதயங்களை
இருண்ட சிறைக்குள் தள்ளி
சித்திரவதை செய்ய முடியும்!

அங்கம் அங்கமாய்
உடலை
பங்குபோட முடியும்!

பிஞ்சு மலர்களின்
நெஞ்சை பிளந்த பின்னரும்
சிரித்து மகிழ உன்னால் முடியும்!

சக்கர நாற்காலியில் அமர்ந்து
அமைதிப் பேரணி நடத்தியவர்களையும்
பயங்கரவாதிகளாய் படம் காட்டவும் முடியும்!

முழு உலகும் பார்த்திருக்க
நீதியைக் கொன்று
நல்லடக்கம் செய்யவும் முடியும்!

நிராயுதபாணிகளோடு
மூன்றாம் உலகப் போர்
புரியவும் உன்னால் முடியும்!

இவையெல்லாம்
உன்னால் முடிந்தவை!
நடந்தும் முடிந்தவை...

ஆனால்,
உன்னால் முடியாதவை ஏராளம்
அது உனக்கும் தெரியும்!

எகிப்திய உள்ளங்களில் சுடர்விட்டு பிரகாசிக்கும்
நம்பிக்கையின் ஒளிக்கீற்றில்
ஒரு கீறலையும் ஏற்படுத்திவிட உன்னால் முடியாது!

இரத்தம் சிந்த புறப்பட்டிருக்கும்
இளைஞர் படையின் வேகம் தணிக்க
உன்னால் தடுப்புச் சுவர் கட்ட முடியாது!

இஃவானிய உணர்வுகளை
சிறைப்படுத்தவோ
ஊனமாக்கவோ முடியாது!

இதயங்களில் விதைக்கப்பட்டிருக்கும்
குர்ஆனிய சிந்தனைக்கெதிராய்
உன் துப்பாக்கியை நீட்ட முடியாது!

எகிப்திய தாய்மாரின்
பசுமை நிறைந்த துணிச்சலுக்கு
படுகுழி தோண்ட முடியாது!

நீ உரமிட்ட ராபிஆ அதவிய்யாவில் நாளை
ஆயிரம் ஆயிரம் ஹபீபாக்களும் அஸ்மாக்களும்
முளைப்பதை உன்னால் தடுத்த நிறுத்த முடியாது!

சத்தியத்தின் ஆணிவேரை
அசைத்துப் பார்க்க
ஒருபோதும் முடியாது!

மறுமை வரை
பிர்அவ்னுக்கு
உனது மண்ணில் வைத்தே
பாடம் கற்பிக்கும்
அல்லாஹ்வை மறந்து
கொலை வெறி கொண்டலையும்
உனக்கு
வேறு என்ன சொல்ல இருக்கு!

கடந்த மாத அல்ஹஸனாத் இதழில் (செப்டம்பர்- 2013) வெளியான கவிதை இது.

No comments:

Post a Comment