Friday, August 22, 2014

ஒரு சமூகநிறுவனத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்



ஒரு சமூகநிறுவனத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

ஒரு குறிப்பிட்ட சமூக நிறுவனத்தின் (eg: சமூகம், இயக்கங்கள், நிறுவனங்கள், அமைப்புக்கள்....) ஆயுட்காலத்தில் பிரதானமான மூன்று பருவங்களை சந்திக்கின்றது. அவை,
i.              வளர்ச்சிப் பருவம்
ii.             வாடிவதங்குப் பருவம்
iii.            அழுகிதுர்வாடைவீசும் பருவம்
இதில் ஒவ்வொரு பருவமும் தனித்தனிபண்புகளைக் தன்னகத்தே கொண்டமைந்துள்ளது. அதனை இன்ஷா அல்லாஹ் சற்று சுருக்கமாக தெளிவுபடுத்துவதே இந்தகட்டுரையின் பிரதான நோக்கமாகும்.

i.          வளர்ச்சிப் பருவம்
இப்பருவம் தான் ஒரு சமூகநிறுவனத்தின் மிகவும் ஆரேக்கியமான பருவமாகும். இப்பருவத்தில் அந்நிறுவனமானது அதனது கொள்கைகளையும், மேன்மை-யையும் பற்றிப் பேசுகின்ற இன்னும் அதனைக் கட்டிக்காப்பதற்காக தமக்குச் சொந்தமான அனைத்தையும் தியாகம் செய்கின்ற ஊழியர்களைக் கொண்டிருக்கும்.

மேலும் அந்நிறுவனமானது இத்தகைய கொள்கைப்பிடிப்புள்ள தமது ஊழியர்களை மிகவும் பெருமதிவாய்ந்த சொத்தாகக் கருதி அவர்களை கௌரவப்படுத்தி பாதுகாத்து தன்னோடே வைத்திருக்கும். மேலும் அத்தகைய ஊழியர்களின் கருத்துக்களையும், அனுபவங்களையும் அந்நிறுவனமானது சந்தோசமாக ஏற்றுக்கொள்ளும் மேலும் எதிர்பார்க்கும். எந்தளவிற்கெனில், இந்த கொள்கைபிடிப்புள்ள ஊழியர்கள் சமூகமட்டத்தில் அறிவு-அந்தஸ்து, பட்டம்-பதவி என்பவற்றில் மிகவும் தாழ்ந்தவர்களாக இருப்பினும் சரியே.

இதற்கு உதாரணமாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உருவாக்கிய சஹாபா சமூகத்தைக் குறிப்பிடலாம். அந்த அற்புத சமூகத்தில் அறபு சமூகமே புறக்கனித்து, இழிவானவர்களாகவும், மிகவும் கீழான மனித விலங்குகளாகவும் கருதி ஒதுக்கித் அப்புறம் தள்ளிய மேலும் செல்லாக்காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வாங்கப்பட்ட அபீஸீனிய கருப்பு அடிமைகள் நபியின் தூய கொள்கையை சுமந்த ஊழியர்களாக மாறிய போது அவர்களை அந்த கொள்கைசார் சமூகம் பார்த்த விதம் அகம்பாவமும், அந்தஸ்தும் தலைக்கேறிய அறபுத் தலைவர்களை ஆச்சரியப்படுத்தியது.

பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் நபியின் செயலாளராகச் செயற்பட்ட அதேவேளை அந்த சமூகத்தின் மத்திய இஸ்தலமாக திகழ்ந்த மஸ்ஜிதுன் நபவியின் முஅத்தினாக (அழைப்பாளராக) கடமையாற்றினார். அதேபோன்று ஹப்பாப் இப்னுஅரத் (ரழியல்லாஹு அன்ஹு), யாசிர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் குடும்பம், அந்நிய தேசத்துமக்களான ஸல்மான அல்பாரிஸி (ரழியல்லாஹு அன்ஹு), ஸுஹைப் அர்ரூமி (ரழியல்லாஹு அன்ஹு) என்று ஏராளமானவர்களின் நிலை இவ்வாறு தான் இருந்தது.

இப்படியாக இந்தக் கொள்கைக்காக தம்மையே அர்ப்பணம் செய்யும் இத்தகைய தியாகிகள் மனிதர்களின் பார்வையில் அற்பர்களாக இருப்பினும் அவர்களை, ஒரு தாய்க்கோழி தனது குஞ்சுகளை சிறகுகளால் அணைத்துக்கொள்வது போன்று அனைத்துக்கொள்ளுமாறு ஒவ்வொரு நபிக்கும் அல்லாஹ் தெளிவாக கட்டளை பிரப்பித்துள்ளான்.

 وَاصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِيْنَ يَدْعُوْنَ رَبَّهُمْ بِالْغَدَاةِ وَالْعَشِىِّ يُرِيْدُوْنَ وَجْهَهُ وَلاَتَعْدُ عَيْنَاكَ عَنْهُمْ
'(நபியே!) தங்களுடைய, ரப்பைகாலையிலும், மாலையிலும் (பிரார்த்தனைசெய்து) அழைத்துக் கொண்டு, அவனுடையதிருமுகத்தை (திருப் பொருத்தத்தை) நாடியவர்களாகவும் இருப்பவர்களுடன், உம்மை நீர் பொறுமையுடன் கட்டுப்படுத்திக் கொள்வீராக!' (18:28)

 وَاخْفِضْ جَنَاحَكَ لِمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِيْنَ
'முஃமின்களில் உம்மைப் பின்பற்றியோருக்கு, உம்முடைய (பரிவுஎனும்) இறக்கையை தாழ்த்துவீராக!' (26:215)

 அல்லாஹ்வின் இந்தக் கட்டளைக்கு மாற்றமாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நடக்க முற்பட்ட போது அல்லாஹ் கண்டித்து வசனம் இறக்கிய நிகழ்வைப் பாருங்கள். நபியவர்கள் குறைஷித் தலைவர்களுடன் முக்கியமான ஒரு அமர்வை மேற்கொண்டிருந்த போது, அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரழியல்லாஹு அன்ஹு) என்ற கண்தெரியாத நபித்தோழர் வந்து இஸ்லாத்தின் கொள்கைகளைக் கற்றுத் தரும்படி நபியிடம் வேண்டுகிறார். இதை ஜீரனிக்க முடியாத நபியவர்கள் அவரைப் பொருட்படுத்தாது கடுகடுத்து முகத்தை அவரைவிட்டும் திருப்பிக்கொண்டார்கள். உடனே இந்த செயலை கண்டிக்கும் முகமாக அல்லாஹ் பின்வரும் வசனங்களை இறக்கினான்.

عَبَسَ وَتَوَلَّى۝ اَنْ جَآءَهُ الْأَعْمَى۝........ وَأَمَّا مَنْ جَآءَكَ يَسْعَى۝ وَهُوَ يَخْشَى۝ فَأَنْتَ عَنْهُ تَلَهَّى۝
'(நமதுநபியாகிய) அவர்கடுகடுத்தார். மேலும் முகத்தைத் திருப்பிக் கொண்டார். பார்வையற்றவர் அவரிடம் வந்ததற்காக.......... இன்னும், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ அவரே (அல்லாஹ்வை) அஞ்சியவராக (உம்மிடம் வர) நீரோ அவரை விட்டும் பராமுகமாகிவிடுகிறீர்.' (80:1,2....8,9,10)

இத்தகைய தியாகிகளை நபியவர்கள் எந்தளவிற்கு மதித்தார்கள் என்பதற்கு பின்வரும் சம்பவம் சான்றுபகரும் எனக்கருதுகிறேன். ஹுதைபியா உடண்படிக்கை முறிந்த போது மக்காவை வெற்றி கொள்ள நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மிகவும் இரகசியமாக ஆயத்தப்படுத்துவதை ஹாதிப் இப்னுஅபீபல்தஆ (ரழியல்லாஹு அன்ஹு) என்ற நபித்தோழர் மக்காவில் வசிக்கும் தன் குடும்பத்தினருக்கு இரகசியமாக தெரியப்படுத்த முனைந்த போது, உமர் இப்னுல் கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஆவேசப்பட்டு, 'ஹாதிபின் கழுத்தை சீவ எனக்கு அனுமதி தாருங்கள்' எனநபியிடம் அனுமதிகேட்டு கர்ஜித்தார்கள். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அமைதியாக, 'இவர் இஸ்லாத்தின் முதல் போராட்டமான பத்ர்களத்தில் தனது உயிரை பனயம் வைத்து கொள்கைப் பிடிப்போடு போராடியவரல்லவா?' மேலும், 'அல்லாஹ் இவரின் முன்பின் பாவங்களை மன்னித்து விட்டானல்லவா?' எனவே நாமும் இவரை மன்னித்துவிட வேண்டும். இவர் இராஜதந்திர குற்றம் புரிந்தாலும் பரவாயில்லை. அவர் மதிக்கப்பட வேண்டியவர்' என்ற தோரணையில் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை ஆறுதல் படுத்தி ஹாதிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை மன்னித்துவிட்டார்கள்.

இதுதான் ஒரு சமூகநிறுவனத்தின் ஆரோக்கியமான பருவத்தின் ஆரோக்கியமான நிலையாகும். சுருக்கமாகக் கூறுவதாயின்,
  •  குறிப்பிட்ட சமூக நிறுவனத்தின் ஊழியர்கள் கொள்கையைச் சுமந்து அதற்காகவே வாழ்பவர்களாக இருப்பார்கள்.
  • இத்தகையகொள்கைப்பிடிப்புள்ளஊழியர்கள் சமூகமட்டத்தில் அற்பர்களாககருதப்படுபவர்களாக இருப்பினும் அவர்கள் மேலானவர்களாகமதிக்கப்பட்டார்கள், கன்னியப்படுத்தப்பட்டார்கள்.மேலும் இவர்களதுகருத்துக்களும் ஆலோசனைகளும் ஏற்கப்பட்டது.
  • குறிப்பிட்ட அந்நிறுவனம் இவர்களை அணைத்துக்கொள்வதற்கான அனைத்துவித ஏற்பாடுகளையும் செய்தது.


ii.         வாடிவதங்கும் பருவம்
பொதுவாக இந்தப் பருவத்தில் ஊழியர்கள் கொள்கையைச் சுமந்து அதன்பின்னால் சுற்றித்திரிவதற்குப் பதிலாக தனி நபர்களை நம்பி அவர்களை சுமந்துகொண்டு சுற்றத் துவங்குவார்கள். எந்தளவிற்கெனில் அக்குறிப்பிட்ட தனிநபரின் கருத்துக்களும், ஆலோசனைகளுமே ஊழியர்களில் தங்கியிருக்கும் மேலும் பிரதிபளிக்கும். ஊழியர்களின் பேசுபொருளாகவும் இவையே இருக்கும். இவற்றுக்கு மாற்றமான, எதிரான கருத்துக்கள் தட்டப்படும் மேலும் புறக்கணிக்கப்படும். மேலும் இவ்வாறாக மாற்றுக் கருத்துக்களைச் சொல்பவர்கள் மட்டம்தட்டப்படுவார்கள்.

மேலும் அந்த குறிப்பிட்ட தனிநபரின் பேச்சு, செயல், நடத்தை அனைத்தையும் சரிகானும் போக்கே அவரோடு கூடவே இருக்கும் பக்தர்களின் பனியாக இருக்கும். மேலும் குறிப்பிட்ட அந்த சமூகநிறுவனத்தின் இயக்கமே அவரில் தான் தங்கியுள்ளது என்றும் அத்தகைய பக்தர்கள் மூலம் அந்தநிறுவனத்திற்கே எடுத்துக் காட்டப்படும்.

பொதுவாக இந்தப் பருவத்தில், அக் குறிப்பிட்ட சமூக நிறுவனம் இப்பூமியில் கால்பதித்து வளர்ந்து பூத்துக் காய்க்கக் காரணமாக இருந்த கொள்கைவாத ஊழியர்களை (பத்ர் சஹாபாக்களைப் போன்றவர்களை) அறிவற்றவர்கள், அணுபவம் அற்றவர்கள் என ஒதுக்கிப் புறந்தள்ளும் நிலை வளர்ந்து பரவலாகும்.

வரலாற்றில் இப்படிப்பட்ட ஒரு நிலை உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்தது. எவ்வாறெனில், 'அல்லாஹ்வின் உறுவப்பட்ட வாள் என்று தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களால் பெயரிடப்பட்டு கௌரவிக்கப்பட்ட காலித் பின் வலீத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களால் தான் இஸ்லாமிய சாம்ராஜ்யம் ரோம் பாரசிக வள்ளரசுகளை வெற்றிகொள்வதற்கு அடிப்படைக் காரணமாகும். காலித் இல்லையெனில் இது நடைபெறாது' என்றகருத்து மக்கள் மத்தியில் பரவத் துவங்கியது. இக்கருத்தின் விளைவை நன்கறிந்த உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் உடனே அவரை பிரதம தளபதி பதவியில் இருந்து விலக்கி சாதாரன ஒரு சிப்பாயாக மாற்றி இந்த தவறான மற்றும் ஆபத்தான நிலையிலிருந்து முஸ்லிம் சமூகத்தை காப்பாற்றினார்கள்.

ஆக இந்த நிலையானது ஒரு சமூக நிறுவனத்தின் மிகவும் ஆபத்தான நிலையாகும். இது தொடரும் பட்சத்தில் அக் குறிப்பிட்ட சமூக நிறுவனம் மூன்றாவது பருவத்தை நோக்கி நகரும் என்பதில் இருகருத்திற்கு இடமில்லை.

iii.        அழுகிதுர்வாடைவீசும் பருவம்
இந்தப் பருவத்தில் குறிப்பிட்டசமூகநிறுவனத்தின் தலைமைகளின் போக்கும், ஊழியர்களின் போக்கும், சிந்தனையும் பொதுவாக பணம், பட்டம், பதவி என்பவற்றை அடியொட்டியே அமையும்.

இதனால் இப்பருவத்தில் பணம், பட்டம், பதவி படைத்த தனவந்தர்களுக்குத் தான் இடம் அதிகம். இத்தகையவர்கள் தான் மதிக்கப்படுவார்கள். இவர்களது கருத்துக்கள் தான் ஏற்கப்படும்.

மேலும் முதல் பருவத்திற்காக உழைத்தவர்கள் பணம், பட்டம், பதவி என்ற இவர்களின் இந்த முப்பெரும் அளவுகோளிற்கு உட்படாவிடின் அவர்களும் புறக்கணிக்கப்படுவார்கள், தாழ்த்தப்படுவார்கள். அதேபோன்று அவர்களது கருத்துக்களும், அனுபவங்களும் தட்டிக்கழிக்கப்படும்.

இதனை நடைமுறை உதாரணத்தில் சொல்வதானால், கொள்கைக்காக தனது அனைத்தையும் தியாகம் செய்து, அடி-உதை என்று பல இன்னல்களை அனுபவித்து, தனது வாழ்வையே அதற்காக அர்ப்பனித்து அக்கொள்கையை சுமந்துவந்தவர்கள். பணம், பட்டம், பதவி என்ற அளவுகோளினுல் வராதவிடத்து தட்டிக்கழிக்கப்படுவார்கள்.

இதனை இன்னும் தெளிவாக சொல்வதானால், ஏஸி வாகனத்தில் தனது பெயருக்குப் பின்னால் வால்போல் நீழும் பதவிப் பெயர்களைக் அடுக்கிக் கொண்டு லெப்டொப்புடன் டிப்டொப்பாக வந்திறங்கும் மனிதர்கள் மதிக்கப்படுவார்கள், கௌரவிக்கப்படுவார்கள். இத்தகையவர்களின் வார்த்தைகள் தெய்வவாக்குகள் போன்றுகருதப்படும். இது தான் நிதர்சனம்....

கொள்கையை தமது தோள்களில் தூக்கிச் சுமந்துவந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டு, இவர்களுக்குப் பதிலாக அந்த இடத்தை பணம், பட்டம், பதவி என்ற அளவுகோளைக் கொண்டு அனைத்தையும் பார்ப்பவர்கள் பிடிக்கும் போது அக் குறிப்பிட்ட சமூக நிறுவனம் துர்நாற்றம் வீசத் தொடங்கும், அதனை சுமந்துவந்தவர்களே புறக்கணிக்கப்படதுவங்குவர். அதுமட்டுமல்ல அத்தகைய கொள்கைவாதிகளே நம்பிக்கை இழந்து அதனை விட்டும் விலகிக்கொள்வார்கள். இதுதான் உலகநியதி!!

إِنَّ اللهَ لاَيُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوْا مَا بِأَنْفُسِهِمْ
'எந்தவொரு சமுதாயமும் தங்கள் நிலையை தாங்களேமாற்றிக் கொள்ளாத வரை நிச்சயமாக, அல்லாஹ் அவர்களை மாற்றுவதில்லை.' (13:11)

முஆத் முனாஸ்
வரகாபொலை

No comments:

Post a Comment