எது சக்தி? எது ஆற்றல்?
எது சக்தி?
எது ஆற்றல்?
இந்த ஷரீஅத் கோழைகளுக்காக அருளப்பட்டதல்ல..!
மனஇச்சைகளுக்கு அடிமையானவர்களுக்கும் உலக சொகுசுகளின் பின்னால் அலைபவர்களுக்கும் இந்த மார்க்கம் அருளப்படவில்லை...!
காற்று வீசுகின்ற திசையில் பறக்கின்ற தூசு தும்புகளுக்காக...
தண்ணீர் போகின்ற போக்கில் அடித்துச் செல்லப்படுகின்ற சக்கைகளுக்காக...
எந்த நிறத்தையும் பூசிக் கொள்கின்ற நிறம் இல்லாதவர்களுக்காக...
இந்த மார்க்கம் அருளப்படவில்லை!
வீரஞ்செறிந்த ஆண்மகன்களுக்காக..
மகத்தான உத்தம புருஷர்களுக்காக அருளப்பட்ட மார்க்கம் தான் இஸ்லாம்.
அவர்கள் காற்று வீசுகின்ற திசையை மாற்றிவிடுகின்ற தீரம் நிறைந்தவர்கள்.
வீறுகொண்டு பாய்ந்தோடுகின்ற நதியில் எதிர்நீச்சல் போட்டு நதியின் போக்கைத் திருப்பிவிட விரும்புகின்றவர்கள்...!
ஸிப்கத்துல்லாஹ் - இறைவனின் வர்ணத்தையே மற்ற எல்லா வர்ணங்களை விட அதிகமாக விரும்புகின்றவர்கள்.
காற்றடிக்கின்ற திசையில் போகின்றவனுக்குப் பெயர் முஸ்லிம் அல்ல!
வாழ்க்கை நதியை நம்பிக்கை - கோட்பாட்டின் பாதையில் - ஸிராத்துல் முஸ்தகீம் என்கிற நேர் பாதையில் திருப்பி விடுபவனுக்குப் பெயர் தான் முஸ்லிம்..!
ஆற்றலும் சக்தியும் கொண்டவர்களால் தான் புரட்சியைக் கொண்டு வர முடியும்.
எது சக்தி?
எது ஆற்றல்?
முடங்கிப் போவதற்குப் பெயர் ஆற்றல் அல்ல..!
குனிந்து போவதற்குப் பெயர் சக்தி அல்ல..!
முடுக்கி விடுவதற்குப் பெயர்தான் சக்தியும் வலிமையும்!
உலகம் போகின்ற திசையில் திரும்பிப் போவதற்குப் பெயர் ஆற்றல் அல்ல..!
உலகையே திருப்பி விடுவதற்குப் பெயர் தான் ஆற்றல்..!
கோழைகளும் ஆண்மையை இழந்து போனவர்களும்
எந்தக் காலத்திலும் உலகில் புரட்சியைக் கொண்டு வந்தது கிடையாது.
தமக்கென யாதொரு கொள்கையோ கோட்பாடோ கொண்டிராதவர்கள்-
தமக்கென யாதொரு குறிக்கோளோ வாழ்க்கை இலட்சியமோ கொண்டிராதவர்கள்-
உலகின் சொகுசுகளுக்கும் வசதிகளுக்கும் உல்லாசங்களுக்கும் முன்னுரிமை கொடுப்பவர்களாகத் தான் இருப்பார்கள்.
எல்லாவகையான அழுத்தங்களுக்கும் வளைந்து கொடுப்பவர்களாகத் தான் இருப்பார்கள்.
இத்தகைய நபர்கள் உலகில் குறிப்பிடத்தக்க பணியைச் செய்ததாக சரித்திரம் இல்லை..!
வரலாறு படைப்பது வீரஞ்செறிந்த ஆண்மகன்களின் வேலை ஆகும்.
அவர்கள் தான் தம்முடைய ஜிஹாத் - இடைவிடாத உழைப்பின் - மூலம், தம்முடைய தியாகங்கள்,அர்ப்பணிப்புகளின் மூலம் வாழ்க்கையின் திசையைத் திருப்பி இருக்கின்றார்கள்..!
இவர்களால் தான் உலக மக்களின் சிந்தனைகள் சீர் பெற்றிருக்கின்றன.
இவர்களால் தான் உலக மக்களின் எண்ணங்கள் பொலிவு பெற்றிருக்கின்றன.
இவர்களால் தான் உலக மக்களின் மனோபாவங்கள் மாறி இருக்கின்றன.
காலத்தின் வர்ணத்தால் தம்மையும் தோய்த்தெடுத்துக் கொள்வதற்குப் பதிலாக காலத்தை தம்முடைய வர்ணத்தால் தோய்த்தெடுப்பவர்கள் இவர்கள்..!
-மௌலானா அபுல் அஃலா மௌதூதி(ரஹ்)
No comments:
Post a Comment