Tuesday, September 10, 2013

எகிப்து இருண்ட காலத்தை நோக்கிச் செல்வதையிட்டு நான் அஞ்சுகிறேன் - பேராசிரியர் நோம் சொம்ஸ்கி


எகிப்து இருண்ட காலத்தை நோக்கிச் செல்வதையிட்டு நான் அஞ்சுகிறேன் - பேராசிரியர் நோம் சொம்ஸ்கி

தமிழில்: அஷ்கர் தஸ்லீம்

எகிப்தின் தற்போதை நிலையை நீங்கள் எப்படி விவரிக்கிறீர்கள்? எதிர்வரும் நாட்களில் என்ன நிகழலாம் என்று நினைக்கிறீர்கள்? எகிப்தில் நிகழ்ந்து வரும் சமீபத்திய நிகழ்வுகள் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? ஒரு இராணுவ சதிப் புரட்சியை நீங்கள் எதிர்பார்த்தீர்களா?

ஆம், எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இராணுவம் கொண்டிருக்கின்ற சலுகைகள், அதன் பொருளாதார சாம்ராஜ்யம், பாரம்பரிய அரசியல் அதிகாரம் என்பவற்றைத் தக்க வைத்துக் கொள்ளும் எண்ணங்கள் காரணமாக இராணுவம்தான் இதன் பின்னணியில் இருக்கின்றது என்று நான் தெரிந்திருந்தேன்.

ஆனாலும், மனிதத் தன்மையற்ற வகையில் மிகக் கடுமையான பலத்துடன் கொடூரமான ஒரு இராணுவ ஆட்சியை கொண்டு வருவதற்கான அவர்களது இயலுமை - தயார் நிலை குறித்து நான் ஆச்சரியப்படுகிறேன்.

குறிப்பாக, இந்த நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு கிடைத்தமை ஆச்சரியமாக இருந்தது. இருப்பினும் இந்த இராணுவ நடவடிக்கையை ஆதரித்தவர்கள் வரும் நாட்களில் அதிக விலை கொடுக்க வேண்டி வரும் என்று நான் சந்தேகிக்கிறேன்.

அப்துல் பத்தாஹ் ஸீஸியின் படைகள் எகிப்துக்கு ஒரு கேடு என்று கருதுகிறீர்களா? அமெரிக்கா ஸீஸிக்கு ஆதரவு தெரிவிப்பது பற்றி என்ன சொல்கிறீர்கள்? அல்லது ஸீஸிக்கு மேற்கு உதவுகிறது என்று ஏன் கருதுகிறீர்கள்?

வழங்கப்படும் உதவிகள் வரையறுக்கப்பட்டவை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. திட்டவட்டமாக அமெரிக்காவும் அதன் மேற்கு நேச நாடுகளும் இராணுவ சதியை எதிர்க்கவில்லை. சவூதி அரேபியாவைப் போன்று பாரிய ஆதரவை அவை வழங்கியதற்கான சான்றுகளும் குறைவாகவே உள்ளன.

ஸீஸி எகிப்துக்கு ஜனநாயகத்தைக் கொண்டு வருவார் என்று அமெரிக்கா சொல்கிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை ஜனநாயகம் என்பது என்ன? சதிப் புரட்சியின் பின்னர், முதன்முறையாக கெதரின் அஷ்டன் முர்ஸியை சந்தித்தார். ஐரோப்பிய யூனியனைப் பொறுத்தவரை இந்த விஜயத்தின் உண்மை நோக்கம் என்ன?

இராணுவ சதிப் புரட்சியையும் இராணுவ ஆட்சி மூலம் முர்ஸி தடுத்து வைக்கப்பட்டிருப்பதையும் எதிர்ப்பதற்கான சிறியதொரு சைகைதான் இது.

எகிப்தில் நிகழ்ந்த சதிப் புரட்சிக்கு யார் பொறுப்பு சொல்ல வேண்டும்? சதிப் புரட்சி தொடர்பில், ஸீஸி மொஸாட்டுடன் ஒத்துழைத்து செயற்பட்டதாக சில நிபுணர்கள் சொல்கிறார்கள். இந்தக் கருத்தில் நீங்கள் உடன்படுகிறீர்களா?

இஸ்ரேல், இராணுவப் சதிப் புரட்சிக்கான தனது ஆதரவை மறைத்து வைத்திருக்கவில்லை. ஆனாலும், குறிப்பிட்டுச் சொல்லுமளவு ஒத்துழைப்பு வழங்கியதற்கான ஆதாரங்கள் எனக்குத் தெரியவில்லை.

துருக்கி பற்றி என்ன சொல்கிறீர்கள்? மத்திய கிழக்குக்கான முன்மாதிரி நாடு என்று துருக்கியை நீங்கள் கருதுகிறீர்களா? எகிப்து மற்றும் சிரிய விவகாரங்களில் துருக்கி மௌனம் சாதிக்கவில்லை. இந்தக் கருத்துடன்; நீங்கள் உடன்படுகிறீர்களா?

அர்தூகான் இராணுவ சதிப் புரட்சியை கடுமையாகக் கண்டித்திருந்தார். அத்தோடு, முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்காக பலமாகக் குரல் கொடுத்தார். சிரியாவின் சிதறிய சிக்கலான எதிரணியை அவர் ஆதரிக்கிறார். இரு விவகாரங்களிலும் மிக வித்தியாசமான அனுகுமுறைகளே பொருத்தமானது என்று நான் கருதுகிறேன்.

உங்களது அபிப்பிராயப்படி தற்போது முர்ஸியின் பலத்த ஆதரவாளர் யார்? அவர் ஏன் அந்த ஆதரவை வழங்குகிறார்? எகிப்தில் ஒரு உள்நாட்டுப் போர் வெடிக்கும் என்று மக்கள் அஞ்சுகின்றனர். இப்படியானதொரு நிலை தோன்றுமென்று நீங்கள் கருதுகிறீர்களா? ஆம் எனில் அது ஏன்? எகிப்தின் நிலைமை முன்னேற்றமடையாவிடின் அது எவ்வாறு மத்திய கிழக்கைப் பாதிக்கும்?


எகிப்து இருண்டதொரு எதிர்புரட்சிக் காலத்தை நோக்கி செல்வது பற்றி நான் அஞ்சுகிறேன். எவ்வாறாயினும், கடந்த பல ஆண்டுகளாக இடம்பெற்ற மக்கள் எழுச்சியால் உந்தப்பட்ட பல்வேறு முக்கியமான மக்கள் சக்திகள் வெளிவந்துள்ளன. அவ்வளவு இலகுவாக இவர்களை அமைதிப்படுத்திவிட முடியும் என்று நான் கருதவில்லை. முன்னே அதிகமான ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. எகிப்தில் நிகழ்பவை மத்திய கிழக்கில் பல தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

நன்றி: Meelparvai Media Centre

No comments:

Post a Comment