சிரியா மீது ஐ.நா. சபையின் அனுமதி பெறாமல் ராணுவ தாக்குதல் நடத்தகூடாது – பான்–கி மூன்!
சிரியாவில்
அதிபர் பஷர் அல்–ஆசாத்துக்கு எதிராக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த
நிலையில் தலைநகர் டமாஸ்கஸ் புறநகரில் அதிபர் ஆதரவு ராணுவம் கடந்த மாதம்
21–ந் தேதி ரசாயன குண்டு (விஷ குண்டு) வீசி தாக்குதல் நடத்தியதில் 1429
பேர் பலியானதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா அதிபர் ஒபாமா சிரியா மீது
தாக்குதல் நடத்தப்படும் என அறிவித்தார். இதற்கு அமெரிக்க மக்கள் கடும்
எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே போர் தொடுக்க பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெற
அந்த தீர்மானத்தை அனுப்பியுள்ளனர். அதன் மீது பாராளுமன்றத்தில் வருகிற 9–ந்
தேதி விவாதம் நடத்தப்பட்டு ஓட்டெடுப்பு நடைபெறுகிறது.
அதற்கு முன்னதாக அவர் பாராளுமன்ற எம்.பி.க்களுடன் வெள்ளை மாளிகையில்
உள்ள கேபினட் அறையில் ஆலோசனை நடத்தினர். அதில் ஆளும் ஜனநாயக கட்சி மற்றும்
எதிர்க்கட்சியான குடியரசு கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து
கொண்டனர். அப்போது சிரியா மீது அமெரிக்க தாக்குதல் நடத்த ஒபாமாவுக்கு ஆதரவு
தெரிவித்தனர்.
மேலும் இந்த தீர்மானம் ‘செனட்’ சபை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
அதற்காக ‘செனட்’ உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அதில், வெளியுறவு மந்திரி
ஜான்கெர்ரி, ராணுவ மந்திரி சக்ஹாஜல் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள், ராணுவ
ஜெனரல் மார்டின் டெம்பசி ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது ஜான்கெர்ரி பேசும் போது, ‘‘சிரியாவில் பஷர் அல்–ஆசாத்தின்
ராணுவம் ரசாயன குண்டு வீசியதற்கான ஆதாரம் உள்ளது. அதற்காக சிரியா மீது
அமெரிக்கா போர் நடத்த வேண்டும் என அதிபர் ஒபாமா கேட்கவில்லை இந்த
விவகாரத்தில் தனது அதிகாரத்தை தெளிவு படுத்த விரும்புகிறார்’’ என்றனர்.
அதை தொடர்ந்து ‘செனட்’ உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தில் திருத்தங்கள்
கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினர். அதாவது சிரியா மீது தரை வழி
தாக்குதல் நடத்த கூடாது. மேலும் குறைந்த அளவு மட்டுமே ராணுவத்தை பயன்படுத்த
வேண்டும்.
60 நாட்களுக்குள் தாக்குதலை முடித்து கொள்ள வேண்டும். வேண்டுமானால்
கூடுதலாக தாக்குதலை 30 நாட்கள் நீடித்துக் கொள்ளலாம். அதற்கும்
பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டும் என்றனர். முன்னதாக செனட் சபையின்
சபாநாயகரும், எதிர்க் கட்சியான குடியரசு கட்சி உறுப்பினருமான ஜான் போக்னர்
சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த ஒப்புக் கொள்வதாக தெரிவித்தார்.
மேலும், பாராளுமன்றத் தில், எனது கட்சியினர் இந்த தீர்மானத்தை ஆதரிப்பார் கள் என நம்புவதாகவும் அவர் கூறினார்.
சிரியா மீது போர் தொடுக்க அமெரிக்க தலைவர்கள் ஆதரவு தெரிவித்த
நிலையில் இதற்கு ஐ.நா.சபை முட்டுக்கட்டை போட்டுள்ளது. இது குறித்து ஐ.நா.
பொதுச் செயலாளர் பான்–கி மூன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, ‘‘ரசாயன குண்டு வீச்சு தொடர்பாக சிரியா மீது அமெரிக்கா
மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில் அனுமதி
பெறாமல் ராணுவ தாக்குதல் நடத்த கூடாது. அதனால் குழப்பமும், ரத்தம் சிந்த
வேண்டிய நிலையும் ஏற்படும்.
ரசாயன குண்டு வீசியது குறித்து ஐ.நா. கண்காணிப்பாளர்கள் ஆய்வில் உறுதி
செய்யப்பட்டால் சிரியா அரசு மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஏனெனில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது சர்வதேச போர் விதிமுறைகளுக்கு
எதிரான குற்றமாகும்’’ என்றார்.
No comments:
Post a Comment