மீண்டும் ஒரு சிங்கள-முஸ்லிம் கலவரம் வெடித்துவிடுமோ என பெரிதும் அஞ்சினேன்! - விக்டர் ஐவன்
அவருடனான விரிவான நேர்காணல் வருமாறு:
நேர்காணல்: எம்.ஜே. பிஸ்ரின் முஹம்மத்
இந்நாட்டில் வாழுகின்ற மக்களை இலங்கையர் என்ற ஒருமைப்பாட்டின் கீழ் கொண்டுவர முடி யாதிருப்பதற்கான காரணம் என்ன எனக் கருதுகிறீர்கள்?
ஒரு சமூகம் எனப்படும் போது பல இனங்கள், மதங்கள், மொழிகள் கலந்து காணப்படும். அதற்குள்ளே முஸ்லிம் தன்மை, சிங்களத்தன்மை, தமிழ்த் தன்மை என கலந்த தன்மை காணப்படும். அவ்வாறானதொரு சூழலில் ஒவ்வொருவரும் இணைந்து வாழ வேண்டும். எனது தனிப்பட்ட கருத்து ஒரு இனத்தை விட இன்னொரு இனம் உயர்ந்ததோ தாழ்ந்ததோ அல்ல.
எமக்கிடையில் ஒற்றுமையை உருவாக்கிக் கொள்வதில் ஒரு பிரச்சினை இருக்கின்றது. இதற்கு எமது சிங்கள, முஸ்லிம் தமிழ் தலைவர்கள் அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும். ஒரு தடவை முஸ்லிம் தலைவர்களுள் ஒருவரான அஷ்ரப் என்னோடு கதைத்தார். தனது கட்சிக்கு முஸ்லிம் காங்கிரஸ் என்று பெயரிட்டது தவறு என்று கூறினார். அவர் மரணிக்க ஒரு வாரத்துக்கு முன்னரே இந்த விடயத்தை என்னிடம் கூறினார்.
1948 ஆம் ஆண்டு நாம் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு பெரிய கஷ்டங்களை அனுபவிக்கவில்லை. இந்தியா பல கஷ்டங்களை அனுபவித்துதான் சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டது. அதற்காக வேண்டி அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டிய தேவையிருந்தது.
மகாத்மா காந்தி போன்ற சிறந்த தலைவர்கள் அங்கு இனங்களுக்கிடையில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்த எத்தனிப்புக்களை செய்தனர். இவ்வாறான தலைவர்கள் நமக்கிருக்கவில்லை. பிரித்தானியரை அல்லது ஆங்கிலேயரை ஏமாற்றி இந்த நாட்டின் சுதந்திரத்தை பெற முயற்சித்தனர். சுதந்திரத்தை பேணும்போது ஒரு பொதுவான உடன்பாடு இருக்கவில்லை. இலங்கையர் என்ற இனத்தைக் கட்டியெழுப்பும் நிலை இருக்கவில்லை.
அதன் தாக்கத்தை நாம் இன்னும் அனுபவித்துக் கொண்டே இருக்கின்றோம். எமது எந்தத் தலைவரும் எந்தவித வேறுபாடுமின்றி நாம் ஒன்றிணைவோம் என்று சொல்வதில்லை. இந்த நாட்டில் அனைவருக்கும் சம உரிமையுடைய ஒருவரை ஒருவர் மதிக்கின்ற ஒரு சமூகத்தை உருவாக்க யாரும் முயற்சி செய்ததில்லை. எல்லோருமே இன்னொரு இனத்துடன் குரோதத்தை தூண்டும் வகையிலேயே செயற்படுகின்றனர். இது மிகவும் பயங்கரமானது. சிங்கள தமிழ் சமூகத்துக்கு மத்தியில் பல தசாப்தமாக தொடர்ந்த யுத்தம் ஓய்ந்துள்ள நிலையில் இன்னொரு சிறுபான்மை சமூகத்துடன் முரண்படுவது மிகப் பயங்கரமான தவறான விடயமாகும்.
இந்த நிலைமைகளுக்கு ஒட்டுமொத்த பெரும் பான் மையினரும் மௌன அங்கீகாரம் வழங்குகின் றனர் எனக் கருத இடமுண்டா?
இல்லை. இந்த நிலைமையை பெரும்பான்மை சமூகம் அனுமதிப்பதாக எனக்கு தோன்றவில்லை, பெரும்பான்மை சமூகம் அமைதியாகத்தான் இருக்கின்றது. தீவிரவாதப் போக்குடைய கடும்போக்குடைய நூறு இருநூறு பேர் இணைந்து மிகப் பெரிய குழப்பத்தை உண்டு பண்ண முடியும். சில நேரங்களில் நல்ல விடயங்களை சிந்திக்கின்ற பார்க்கின்ற அமைப்புகளால் ஒன்றிணைய முடியாமல் இருக்கும். ஆனால் இவ்வாறான கடும்போக்கு சக்திகள் இலகுவாக நிறுவனமயமாகிவிடும்.
இன்று மக்கள் இவ்வாறான நிகழ்வுகளூடாக கற்றுக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறான விடயங்களை மக்கள் அனுமதிக்கின்றனர் என்று எனக்குத் தோன்றவில்லை. நான் குறித்த ஒரு இனத்தைச் சாடவில்லை. எல்லா இனத்தவரும் பொறுப்புடன் மிகவும் நுணுக்கமான முறையில் இப்பிரச்சினைகளுக்கான தீர்வைத் தேட வேண்டும்.
இவை போதனை செய்து தீர்வுகாணக்கூடிய பிரச்சினையல்ல. நான் நினைக்கின்றேன் ஒரு புதிய சமூக கோணம், புதிய அரச தலைவர், புதிய அரசியல் பண்பாடு என்பன உருவாக வேண்டும். இது சிங்கள, முஸ்லிம்,தமிழ் இனங்கள் இணைந்த புதிய கோணத்தில் சிந்தித்து நாம் அனைவரும் ஒரு நாட்டவர் என்ற எண்ணத்துடன் அனைவருக்கும் எல்லா உரிமைகளும் உள்ளன என்ற எண்ணத்துடன் செயற்பட வேண்டும்.
நாம் எப்போது வந்தவர்கள், புதியவர்களா? பழையவர்களா? என்பதில் எந்தப் பயனுமில்லை. இங்கு பிறந்தவர்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்தவர்கள். முஸ்லிம்கள் ஒரு காலத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். அவர்கள் இங்குள்ள பெண்களையே மணந்து கொண்டனர்.
சிங்களவர்கள் இந்நாட்டுக்கு வர முன்னர் குவேனி என்ற ஒருவர் இங்கு வசித்தார். அறிவுபூர்வமாக பார்த்தால் வரலாற்றை மையப்படுத்தி கதைப்பது மிகவும் மடத்தனமான விடயமாகும்.
நமது நாட்டில் இனங்களுக்கிடையே முரண் பாடுகளும் கருத்துவேறுபாடுகளும் தோற்றம் பெறும் போது ஊடகங்கள் அதற்கு எண்ணை வார்த்தன எனும் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியுமா?
எனது பார்வையில் சிங்கள ஊடகங்கள் சிங்களக் கோணத்திலும் முஸ்லிம் ஊடகங்கள் முஸ்லிம் கோணத்திலும் தமிழ் ஊடகங்கள் தமிழ் கோணத்திலேயுமே பிரச்சினகளைப் பார்க்கின்றன. இதன் அர்த்தம் என்னவென்றால் எமக்கான ஒரு பொதுப் பார்வை இல்லை என்பதாகும்.
நான் வலியுறுத்தும் ஒருவிடயம் தான் இந்தப் பிரச்சினைக்கு மூலகாரணம் ஊடகங்கள்தான். வேறு நாடுகளில் என்றால் இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஊடகங்கள் மிகக் கவனமாக செயற்படும். இனவாதம், வர்க்க வாதம், குழுவாதம் போன்ற விடயங்களுக்கு ஊடகங்கள் முன்னுரிமை கொடுக்காது. ஆனால் துரதிஷ்டவசமாக எமது ஊடகங்களுக்கு இந்தப் பண்பு இல்லை. இந்தப் பண்பில்லாமல் போவதற்கு காரணம் நாம் ஒன்றிணைந்த சமூகத்தை கட்டியெழுப்பும் மனோபாவம் கொண்ட ஒரு சமூகமல்ல. நான் தனிப்பட்ட ரீதியில் நினைக்கும் ஒரு விடயம்தான் நாம் மிகப் பெரிய பிரச்சினையை நோக்கிச் சென்றுவிட்டோம். எனது எண்ணப்படி எமது பழைய தலைவர்களின் காலம் முடிந்துவிட்டது. புதிய முறையில் சிந்திக்கக் கூடிய, மக்களை இனமுரண்பாடுகளில் சிக்கவைக்காத, ஒற்றுமைப்படுத்தக் கூடிய, அன்புடன் சமூகத்தை பார்க்கின்ற தலைவர்கள் உருவாக வேண்டும்.
மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர் என்றால் அந்நாடு எப்படியும் அபிவிருத்தியை நோக்கிச் செல்லாது என்றே நான் நம்புகின்றேன். தாம் விரும்பும் மதத்தை யாராலும் பின்பற்றமுடியும். தமது கலாசாரங்களில் பல மாற்றங்கள் உள்ளன. முஸ்லிம்கள் மாட்டிறைச்சியை சாப்பிடுவர். நானும் அதனைச் சாப்பிடுவேன். இதனை உண்ணாதவர்களும் இருப்பர். நான் ஒரு இந்து நாட்டுக்கு சென்று மாட்டிறைச்சியை கேட்கமாட்டேன். முஸ்லிம் நாட்டுக்குச் சென்றால் பன்றி இறைச்சி கேட்க மாட்டேன். என்னால் சாப்பிட முடியுமானதை உண்பேன். எனக்கு அந்த பண்பு இருக்க வேண்டும். மற்ற மக்களை அங்கீகரித்து வாழ வேண்டும். கலாசாரங்களை மதிக்க வேண்டும். மற்ற மக்களை அங்கீகரித்து பிறரது உரிமைகளை மதித்து அனுசரிக்கும் மனோ நிலை உருவாக வேண்டும்.
கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி 'ராவய' பத்திரிகையில் பிரசுரமான உங்களது கட்டுரை ஒன்றில் 1915, 1958, 1983 காலங்களில் ஏற்பட்ட கலவரத்துக்கு முன்னர் நிலவிய சூழ்நிலையை ஒத்ததாகவே தற்போதைய நிலையும் உள்ளது எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். எனவே சமகால பிரச்சினையும் அத்தகைய பாரதூரமான நிலைக்கு நம்மை இட்டுச் செல்லுமா?
அவ்வாறான நிலை ஏற்படும் என்றில்லை. ஆனால் எனக்கு அதுபற்றிய பெரியதோர் பயம் ஏற்பட்டது. 1915 கலவரம் பற்றி நான் ஆய்வு நோக்கில் பார்த்துள்ளேன். எனக்குள்ள பிரச்சினைதான் இந்த கலவரத்தில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள். ஆனால் அதன் போது கைதான சிங்கள தலைவர்கள் பற்றியே அதிகம் பேசப்பட்டுள்ளது. மாறாக அதிகளவில் பாதிக்கப்பட்டோர் பற்றியே பேசப்பட்டிருக்க வேண்டும்.
இந்த ஆய்வின் பின்னர் சமூக இயங்கியல் பற்றி நான் ஒரு முடிவுக்கு வந்தேன். ஒரு சிறுபான்மை சமூகம் தாக்கப்படும்போது இன்னொரு சிறுபான்மை சமூகம் பெரும்பான்மை சமூகத்தோடு இணைந்து கொள்கிறது. 1958 கலவரத்தில் நான் இதனைக் கண்டேன். முஸ்லிம்கள் தமிழர்கள் பற்றி சிந்திக்கவில்லை. அதேபோல் 1915 இல் தமிழர்கள் முஸ்லிம்களைப் பற்றி யோசிக்கவில்லை. நமது சமூக இயங்கியலில் இருப்பது ஒரு சமூகம் தாக்கப்படும்போது ஏனைய அனைத்து சமூகமும் ஒரு பக்கத்துக்கு இணைந்து விடுகின்றனர். இது ஒரு கேவலமான நிலை. தாக்கப்படுபவர்கள் மீதே அனுதாபம் வர வேண்டும். சில வரலாற்று எழுதுகைகளைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. நியாயமற்ற முறையிலேயே 1915 ஆம் ஆண்டு கலவரம் பற்றிய வரலாற்று பதிவுகள் இடம்பெற்றுள்ளன. ஒரு கலவரத்தின்போது சிறைக்குப் போனவர்களைத் தான் நாம் வீரர்களாகக் கருதுகின்றோம்.
இவ்வாறானதோர் நிலை மீண்டும் ஏற்படக் கூடாது. நாம் அனைவரும் இணைந்து சிறந்ததோர் சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். 2015 இல் மீண்டும் இன முரண்பாடொன்று ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் வீணாகக் கத்துபவர்கள் திருந்தாவிட்டாலும் கூட அவர்களுக்கு சார்பாக அதிகமானோர் இல்லை.
அவர்களை வெறுப்பவர்களே அதிகமாகவுள்ளனர். எல்லா தவறுகளுக்கும் எமது அரச தலைவர்களைத்தான் சாட வேண்டும். அவர்களது சுய தேவைகளுக்காகவே முஸ்லிம், தமிழ், சிங்களத் தலைவர்கள் அனைவரும் செயற்படுகின்றனர். அஷ்ரப் போன்ற முஸ்லிம் தலைவர்கள் இருக்க வேண்டும். சோமஹாமுதுருவோடு தைரியமாக கதைத்தார். இவ்வாறு தைரியமான உண்மையான தலைவர்கள் தேவை. எமது சமூகத்திலும் இவ்வாறான தலைவர்கள் இல்லை.
1915 ஆம் ஆண்டு கலவரத்தின் போது முஸ்லிம்களால் சிங்களவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டதாக வரலாற்று எழுதுகைகள் காணப்படுகின்றன. இவ்விடயத்தில் நீங்கள் உடன்படுகின்றீர்களா?
நிச்சயமாக இல்லை. நான் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டேன். நாம் பழைய வரலாறுகளைப் பார்த்தோமேயானால், வரலாற்றுக் கட்டமைப்புகளின் போது பல்வேறுபட்ட இடர்பாடுகள் இருக்கின்றன. சிங்கள சமூகம்தான் உலகில் சிரேஷ்டமான சமூகம் என்று கருதுகின்றனர். ஆனால் இவ்வாறு கருதுவது தவறு. சிங்கள சமூகம் மிகவும் தாழ்ந்த சமூகம் என்பதல்ல. தங்களை உயர்வானவர்களாகவும் ஏனையவர்களை தாழ்வானவர்களாகவும் கருதுவது பிழையான விடயமாகும்.
முஸ்லிம் சமூகம் எப்போதும் வியாபார சமூகமாகவே இருந்துள்ளது. எனவே அவர்கள் அதி முன்னேற்றம் கண்டுள்ளனர். சிங்கள மற்றும் தமிழ் சமூகத்துக்கு அதன் மீது ஒரு வகையான குரோத நிலை காணப்பட்டு வந்தது. இவர்கள் வரலாற்றில் பெரிதாக வியாபாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை, ஆனால் உலகமயமாதலின் விளைவாக இவ்விரு சமூகமும் வியாபாரத்தில் நுழைய வேண்டி ஏற்பட்டது. வியாபாரத்துக்கு வந்த பின்னர் முஸ்லிம்களை அடித்துத் துரத்தவேண்டிய நிலை ஏற்பட்டது.
முஸ்லிம்களுடன் முரண்பட வேறு எந்த ஒரு காரணமுமில்லை. ஒவ்வொரு சமூகத்துக்கும் தனித்துவமான ஆற்றல்கள் இருக்கின்றன. அவற்றின் மீது பொறாமை கொள்ளக் கூடாது. வேறு ஒரு சமூகம் அத்தகைய விடயத்தில் ஈடுபடுகின்றது என்றால் முயற்சித்து அதனுடன் போட்டியிட்டு நாம் முன்னேற வேண்டுமே தவிர அவர்களை தாக்கி ஒருபோரும் முன்னேற முடியாது.
நாட்டில் பலர் கடும்போக்குச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். ஆனால் அவற்றை கவனத்திலெடுக்காது அஸாத் ஸாலியை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தமை தொடர்பில் உங்களது அபிப்பிராயம் என்ன?
இங்கு நடக்கின்ற விடயங்கள் மிகவும் அசாதாரணமானவையாகவே இருக்கின்றன. அஸாத் ஸாலி கைது செய்யப்பட்டால் ஏனையவர்களும் கைது செய்யப்படவேண்டும். சட்டம் என்பது ஏனைய மனிதர்களின் இனம், சமூகம், உரிமைகள் என்பனவற்றை பாதிக்காத வகையிலேயே அதன் செயற்பாடுகள் இருக்கவேண்டும்
பொதுபலசேனா அமைப்பு பற்றிய உங்களது நிலைப்பாடு என்ன?
'பண்சலேவிப்லவய' என்று நான் ஒரு புத்தகம் எழுதியுள்ளேன். அதில் நான் பேச விளைந்தது புத்தமதம் விருத்தியடைந்து எப்படி இலங்கையில் சிங்கள மதமாக மாறியது என்பதும் அது ஏற்படுத்தியுள்ள பிரச்சினைகள் பற்றியதுமாகும். புத்தமதம் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்குரியதல்ல. புத்த பெருமான் சிங்களவர் என்று எங்கும் குறிப்பிடப்படவுமில்லை. எமது மத நிலையங்களிலும் மதத்தலைவர்கள் மீதும் அழுக்குப்படிந்துள்ளது. இது அந்தக் காலத்தில் இருந்துள்ள ஒரு விடயம். இவ்வாறான குழப்பத்தின் ஒருபகுதிதான் இது. இவர்களின் செயற்பாடுகள் புத்தபெருமானின் போதனைகளுக்கு சற்றும் உடன் பட்டதல்ல. புத்தமதம் ஏனைய மதங்களை அனுசரிக்கும் ஒரு மதமாகும். ஆனால் இலங்கையில் இந்நிலை இல்லை.
1915 ஆம் ஆண்டு கலவரத்துக்கு சிங்கள வியாபாரிகள் நிதி வழங்கியதாக உங்கள் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தீர்கள். தற்போதைய பிரச்சினைகளின் பின்னாலும் அவ்வாறான நிதி உதவிகள் இருக்கும் எனக் கருத இடமுண்டா?
என்னால் அதனை நிரூபிக்க முடியாது. ஆனால் இது ஒரு வியாபாரப் போட்டியாகவும் இருக்கலாம். நோலிமிட் போன்ற முஸ்லிம் கடைகள் தாக்கப்பட்டன. அவை பாரிய வருமானமீட்டுகின்றன என்பது உண்மைதான். ஆனால் அதனை ஈடுசெய்யும் வகையில் இன்னுமோர் வியாபாரியால் போட்டியிட முடியும். மாறாக வியாபார போட்டிக்காக அவற்றைத் தாக்குவது ஒருபோதும் தீர்வாகாது.
இலங்கை முஸ்லிம்கள் அடிப்படைவாதிகளாக செயற்படுகின்றனர் என்று குற்றம்சாட்டுகிறார்களே?
என்னிடம் அதற்கான எந்த ஆதாரங்களும் கிடையாது. எனவே ஆதாரங்கள் இல்லாமல் இதுவிடயமாக எதுவும் கதைக்க முடியாது.
அண்மையில் முஸ்லிம்களுக்கெதிராக புரியப்பட்ட தாக்குதல்கள், எதிர்ப்புகள் தற்போது சற்றுக் குறைந்திருந்தாலும் கூட மீண்டும் அந்த நிலை மேலோங்கும் சில நிகழ்வுகள் நடக்கின்றன. இந்த சூழ்நிலை தொடர்வதற்கான வாய்ப்புள்ளதா?
முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகள் மேலோங்கிச் செல்வதானது ஒரு பெரிய பிரச்சினை. இதற்கு அரசு அனுமதி கொடுக்கிறது என்று நான் கூறவரவில்லை. ஆனாலும் அமைதியாக இருப்பது இதற்கு அனுமதியை கொடுத்துள்ளது போல் தோன்றுகின்றது. பிறருக்கு துன்பம் விளைவிக்கும் அமைப்புகளுக்கும் சங்கங்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பற்றி நாம் சற்று யோசிக்க வேண்டும். இவ்வாறு நடப்பதால் அச்செயற்பாடுகளுக்கு அரசு சார்பாக உள்ளது போன்று தோன்றுகின்றது.
அரசு தமது இனம் விளையாடும் பைத்தியகாரத்தனமான செயற்பாடுகளுக்கு இடம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இது மிகவும் மோசமானநிலையாகும்.
முஸ்லிம் ஊடகங்கள் பற்றிய உங்கள் பார்வை எப்படியிருக்கிறது?
முஸ்லிம்கள் எவ்வளவுதான் தமிழ் பேசினாலும் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்குமிடையில் ஒரு பாகுபாடு உள்ளது. இரண்டு இனத்தவரும் பேசுவது ஒருமொழியல்ல, சிந்தனைப்போக்கும் ஒன்றல்ல. எனவே தனித்துவ ஊடகமொன்றில்லை என்பது முஸ்லிம்களுக்கு ஒரு அசாதாரண நிலைதான். முஸ்லிம்களுக்கான தனித்துவ ஊடகத்தை உருவாக்குவது நல்லது. ஆனால் அது இனவாத நிலைக்கு சென்றால் அதுவும் அசாதாரண நிலையையே தோற்றுவிக்கும்.
இதற்கான பெரியதோர் திட்டமிடல் வேண்டும். மக்களிடையே குரோதம், பேதம். இனவாதம் என்ப வற்றை தோற்றுவிக்காத வகையில் பிரச்சினைகளின் போது நடுநிலையாக நின்று செயற்படுவதாக இருக்கவேண்டும். இவ்வாறான தனித்துவங்களுடனேயே உருவாக வேண்டும். காலப்போக்கில் அவை பிழையான வழியில் பயன்படுத்தப்படக் கூடாது.
இளம் ஊடகவியலாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
ஊடகவியலாளர்களுக்கு மட்டுமல்ல சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களை சேர்ந்த இளம் பரம்பரையினரும் புதிய கோணத்தில் உலகை பார்க்க வேண்டும். இவர்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு கூட்டிணைந்த ஜனநாயக சமூகமாக, ஜனநாயக அரசை கட்டிழுப்ப பாடுபட வேண்டும்.
இலங்கையில் ஊடக தர்மம் எந்தளவு பேணப் படுகின்றது?
எப்படி அரசியல் கட்சிகள் சாக்கடையாக உள்ளனவோ அதே நிலைக்குதான் ஊடகங்களும் வந்துள்ளன. இத்தகைய இன ரீதியான பிரச்சினைகளுக்கு ஊடகங் களும் பிரதான காரணம். ஊடகங்கள் சமூகத்துக்கு சரி யான செய்திகளை சொல்லுமானால் நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பில்லை.
.
Tags : | 'ராவய' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் விக்டர் ஐவன் |
No comments:
Post a Comment