Wednesday, September 4, 2013

நவீன அபூஜஹ்ல்களுக்கு ஒரு நினைவூட்டல்!

 நவீன அபூஜஹ்ல்களுக்கு ஒரு நினைவூட்டல்!


 “(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. “அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனைப் படைத்தான். ஓதுவீராக. உம் இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.”

அதிகமதிகம் கேட்டு அறிமுகமான வசனங்கள்தான் இவை. இறக்கியருளப்பட்ட வரிசைப்படி பார்த்தால் இவைதான் ஆரம்ப இறைவசனங்கள். கல்வியின் துவக்க ஆண்டுகளில் இந்த வசனங்கள் ஓதப்பட்டு விளக்கங்கள் வழங்கப்படுவது வழக்கம்.  பேனா, எழுத்துகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்த வசனங்கள் எடுத்தியம்புகின்றன. அத்தோடு நின்று விடவில்லை. இந்த வசனங்களுக்கு இன்னொரு நிகழ்வும் பின்னணியில் உள்ளது.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர் அப்பாஸ் (ரலி) அந்த அனுபவத்தை நினைவுகூர்கிறார்.  மக்காவில் பரிசுத்த கஅபா ஆலயத்தில் அமர்ந்திருந்தார் அப்பாஸ் (ரலி). அந்தச் சமயத்தில் அபூஜஹ்ல் அங்கே வந்தான். அங்கே கூடியிருந்த மக்களிடம் அவன் கேட்டான்: “உங்கள் முன்னால் வைத்து முஹம்மத் இங்கே இந்த மண்ணில் முகம் பதித்து சாஷ்டாங்கம் செய்கின்றாரா?”  மக்கள் சொன்னார்கள்: “ஆம். செய்கின்றார்.”  உடனே அபூஜஹ்ல் ஆத்திரத்துடன் இவ்வாறு அலறினான்: “தெய்வங்களான லாத், உஸ்ஸா மீது ஆணையாக! முஹம்மத் அவ்வாறு செய்வதைக் கண்டால் நான் அவரது பிடரியில் ஏறி மிதிப்பேன். அவரது முகத்தில் மண்ணை வாரி வீசுவேன்.”  இதனைக் கேட்ட அப்பாஸ் (ரலி) அங்கிருந்து மெல்ல வெளியேறினார். அபூஜஹ்ல் சொன்ன விஷயங்கள் அனைத்தையும் அண்ணலாரிடம் அப்பாஸ் (ரலி) தெரிவித்தார்.

என்ன ஏது என்று அறியாமல் கஅபாவுக்குள் வந்து குழப்பத்தில் அண்ணலார் சிக்கி விடக்கூடாது என்ற அடிப்படையிலேயே அப்பாஸ் (ரலி) அவ்வாறு அறிவித்திருக்கவேண்டும்.  ஆனால் அது விபரீத விளைவை ஏற்படுத்திற்று. அப்படியானால் அது என்ன என்று ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதான் என்பதாக இருந்தது அண்ணலாரின் முகபாவம். பரிசுத்த ஆலயத்தில் வணக்க வழிபாடுகளைத் தடுப்பதற்கு அபூஜஹ்ல் யார்? கோபத்தில் அண்ணலாரின் முகம் சிவந்து விட்டது.  நேரே கஅபா ஆலயம் நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தார்கள். ஆடையை இறுக்கிக் கட்டிக்கொண்டு அப்பாஸ் அண்ணலாரின் பின்னால் ஓடினார். இறையில்லத்தின் வாயில் கொஞ்ச தூரத்தில் இருந்தது. வேகமும், வெறியும் காரணமாக அண்ணலார் வாயிலை நோக்கி நடக்கவில்லை. சுவரில் இருந்த ஓர் இடைவெளியில் புகுந்து உள்ளே நுழைந்தார்கள். அப்பாஸ் கூறுகிறார்: “இது இழிவும், அழிவும் கொண்ட ஒரு நாள் என்று நான் எனக்குள் உறுதிப்படுத்திக்கொண்டேன்.”  பள்ளிக்குள் நுழைந்த அண்ணலார் (ஸல்) அவர்கள் சப்தமாக திருக்குர்ஆனை ஓத ஆரம்பித்தார்கள்:

“(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. “அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனைப் படைத்தான். ஓதுவீராக. உம் இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான். அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும்போது, நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது. தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா? ஓர் அடியாரை – அவர் தொழும்போது. நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும், அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும், அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நீர் பார்த்தீரா?

நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? அப்படியல்ல. அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம். தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை. ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும். நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம். (அவன் கூறுவது போலல்ல). அவனுக்கு நீர் வழிபடாதீர். (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.” (சூரா அலக் 96:1-19)

இதனை முழுவதுமாகக் கேட்டுக்கொண்டிருந்தான் அபூஜஹ்ல். வெறும் தொங்கும் நிலையான அலக் என்ற சதைப்பிண்டத்திலிருந்து படைக்கப்பட்ட அற்ப மனிதனுக்கு இத்தனை அகங்காரமா என்று அவன் புரியமாலில்லை.  அந்த இறைவசனங்களை ஓதி முடித்து விட்டு முஹம்மத் (ஸல்) அவர்கள் இதோ தங்கள் புனித நெற்றியைத் தரையில் வைத்து சாஷ்டாங்கம் செய்கிறார்கள்.  அபூஜஹ்லுக்கு அது பெரும் சவாலாக இருந்தது. ஆனால் அவன் அசைவற்று, செய்வதறியாது திகைத்து நின்றான். கூட்டத்தில் ஒரு ஆள் அபூஜஹ்லிடம் இவ்வாறு சொன்னார்: “அபுல் ஹிக்கம், இதோ முஹம்மத்…”  அபூஜஹ்ல் சமநிலை தவறியவனைப் போல் ஆனான். அவன் இவ்வாறு கேட்டான்: “இந்தக் காட்சியை நீங்கள் காண்கிறீர்களா? அல்லாஹ்வின் மீது ஆணையாக, எனக்கும் முஹம்மதுக்கும் இடையில் ஒரு பெரும் தீக் கிடங்கும், ஆபத்து நிறைந்த ஜந்துக்களும், சிறகுகளும் நிறைந்து நிற்கின்றன.”  தனக்கும், முஹம்மத் (ஸல்) அவர்களுக்குமிடையிலுள்ள தூர இடைவெளியின் தனிக்காட்சி அபூஜஹ்லின் மனத்திரையில் அப்படிப் பதிந்ததாக இருந்தது அது. இறைசக்தியின் தலையீடுதான் அதற்குக் காரணமாக இருந்தது.

நவீன அபூஜஹ்ல்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கவே – அவர்களுக்கு ஒரு நினைவூட்டலாக இருக்கவே இந்தப் பதிவு.

நன்றி : தேஜஸ் மலையாள நாளிதழ்
தமிழில் : MSAH

No comments:

Post a Comment