இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.
1. எந்தவொரு நிகழ்வையும் சமூகம் அவதானித்துக் கொண்டிருக்கிறது. ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து அதுபற்றி அலசுபவர்கள், விமர்சிப்பவர்கள் யார்? அவர்கள் என்ன பேசுகிறார்கள்? நடுநிலையாகப் பேசுபவர்கள் யார்? குறிப்பிட்ட விவகாரத்தை நடுநிலையாகப் பேசினாலும் கூட பாதிக்கப்படுபவர்கள், ஆவேசம் கொள்பவர்கள் யார்? அதற்கென்ன காரணம்? அவர்கள் பிரச்சினையை எவ்வாறு திசைதிருப்புகிறார்கள்? போன்ற இன்னோரன்ன விடயங்களையெல்லாம் ஒரு சமூகத்திலிருக்கின்ற நடுநிலையாளர்கள் அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது அவதானங்களும் பின்னூட்டங்களும் (Comments) கருத்துக்களும் ஒருவர் பேசுகின்ற, எழுதுகின்ற, செய்கின்ற விடயங்களுக்கு சாட்சியாகும். நிதானமிழந்து உணர்ச்சிவசப்படுகின்றவர்களது அவதானங்களும் கூற்றுக்களும் சிரத்தைக்குட்படுத்தப்பட வேண்டியவைகளல்ல.
2. தலைவர்கள் விமர்சிக்கப்படக்கூடாது என்றொரு வரையறை இஸ்லாத்தில் இருப்பதாக நான் அறியேன். நான் அறிந்தவரை தலைவர்கள் தான் அதிகமாக விமர்சிக்கப்படுவார்கள். அந்த விமர்சனங்களைத் தாங்கிக் கொண்டு அவற்றுள் தனக்குத் தேவையானவை எவை என்பதை நிதானமாகத் தெரிவுசெய்து கொள்பவர் தான் சிறந்த தலைவர். ஒரு தலைவர் தான் விமர்சிக்கப்படக் கூடாது என்று நினைப்பாராயின் அல்லது அந்தத் தலைவரின் கட்சியைச் சேர்ந்தவர்கள் அப்படிக் கருதுவார்களாயின் அவர்களுக்கு தலைவர்கள் பற்றியும் தலைமைக்குரிய கடமைகள், பொறுப்புக்கள் பற்றியும் தெரியாது என்று பொருள். எனக்குத் தெரிந்ததெல்லாம் மாநபி (ஸல்) அவர்கள் மட்டும் தான் முஸ்லிம் உம்மத்தில் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட மனிதராவார்கள். ஏனைய அனைவரும் விமர்சனத்துக்குட்பட்டவர்களே. தலைவர்கள் விமர்சிக்கப்படும் போது ஒரு சமூகம் ஆரோக்கியமாக இருக்கின்றதென்பது அர்த்தம். தலைவரை விமர்சிக்க முடியாதென்று ஓர் அமைப்போ கட்சியோ அல்லது அவற்றின் தலைவர்களோ நினைத்தால் அவர்கள் அடக்குமுறையை விரும்புகிறார்கள் என்பது பொருள்.
3. ஒரு தலைவர் மீது வெறுப்படைந்து அவரைத் தனிப்பட்ட ரீதியிலும் அவர் இல்லாத நேரத்திலும் மோசமாக விமர்சிப்பவர்கள் சமூகத்திலிருப்பார்கள். அதேநேரம் வெளிப்படைத் தன்மையோடு அவரை ஆக்கபூர்வமாக விமர்சிப்பவர்களும் இருப்பார்கள். ஓர் உன்னதமான தலைவர் இரண்டாவது வகை விமர்சகர்களை நிச்சயம் விரும்புவார். தன்னை உள்ளுர வெறுத்துக்கொண்டு வெளிப்படையில் தன்னுடன் நல்லுறவு வைத்துக்கொள்ளும் விமர்சகர்களிடமிருந்து அல்லாஹ்விடம் அவர் பாவமன்னிப்புத் தேடுவார். எனினும், உணர்ச்சிகளுக்கும் பாதிப்புகளுக்கும் அவசரமாக உள்ளாகும் தலைவர்கள் முதல்வகை மனிதர்களையே விரும்புவர்.
4. முஸ்லிம் சமூகம் பிளவுபடுவது குறைகளை சுட்டிக்காட்டுவதனால் அல்ல. மாறாக குறைகளை மறைப்பதனால் ஆகும். குறைகள் தம்பக்கம் இருந்தால் அவற்றைப் பெருமனதோடு ஏற்றுக்கொள்ளும் பண்பு தலைவர்களிடம் இருக்குமாயின் அந்தத் தலைவர்களின் கண்ணியமும் மகிமையும் வானளாவ உயரும். அவ்வாறு ஏற்றுக்கொள்வது இழுக்கு என்றும் தங்களது குறைகளை பிறர் சுட்டிக்காட்டுவது அவமானம் என்றும் கருதும் போது தான் சமூகத்தில் பிளவு உருவாகின்றது. அத்தகைய தலைவர்களை நெருங்க முடியாமை, தூரமான இடைவெளி, வெறுப்பு, நம்பிக்கையின்மை போன்ற பிரச்சினைகள் அப்போது தான் தலைதூக்குகின்றன. அவற்றால் தான் சமூகம் ஒன்றுபட முடியாமல் அவஸ்தைக்குள்ளாகின்றது.
5. எனது விமர்சனம் பிறை விவகாரத்தால் சமூகத்தில் ஏற்பட்ட பாதிப்புக்களையும் அதற்குத் தலைவர்கள் காரணமாக இருந்தார்கள் என்பதையும் மட்டுமே உள்ளடக்கியிருந்தது. தனிமனிதர்களின் தனிப்பட்ட விடயங்களை சந்திக்கிழுப்பதாகவும் அவர்களின் அந்தரங்கத்தை அலசுவதாகவும் அவற்றைக் காரணமாகக் காட்டி ஜம்இய்யதுல் உலமாவை அல்லது மற்றொரு இஸ்லாமிய இயக்கத்தை குற்றம் சுமத்துவதாகவோ, ஜம்இய்யதுல் உலமா செய்த பணிகளை மறுப்பதாகவோ அல்லது ஓர் இஸ்லாமிய இயக்கத்தை எதிர்ப்பதாகவோ இருக்கவில்லை. இது விமர்சனத்தை வாசிக்கும் ஒரு பாமரன் கூட விளங்கிக்கொள்ள முடியுமான எளிய உண்மை.
6. நிலைமை அவ்வாறிருக்க அந்த விமர்சனத்தை ஒரு சாரார் உம்மத்திற்கெதிரானது, சமூக ஒற்றுமையை சீர்குலைக்க வல்லது, தமது இயக்கத்திற்கெதிரானது, உலமாக்களுக்கெதிரானது, ஜம்இய்யதுல் உலமாவின் பணிகளுக்கெதிரானது, தலைவர்களின் மேன்மைகள், பதவிகள், அந்தஸ்துக்கெதிரானது என்றெல்லாம் பிரச்சாரம் செய்து பிரச்சினையின் எல்லையை வீணாகப் பெருப்பிக்கின்றார்கள்.
7. இந்த அசாதாரணத்தை எனக்கும் அவர்களுக்குமிடையில் தீர்த்துவைக்க அல்லாஹ் போதுமானவன். பிரச்சினைகளை அதனதன் அந்தஸ்தில் வைத்து நோக்கத் தெரியாதவர்களிடம் நான் நீதியை எதிர்பார்க்கவில்லை. உண்மையை அறிந்த ஒருவன் அவர்களுக்கும் எனக்குமிடையில் இருக்கிறான் என்ற நம்பிக்கையே எனது ஆறுதலுக்குப் போதுமானது.
அந்த ஏகனோடு அவன் காட்டித்தந்த நடுநிலைப்பாதையில் நின்று விவகாரங்களைப் பார்க்கும் நடுநிலையாளர்களும் எனக்கு ஆறுதல் தான். அத்தகைய நடுநிலைவாதிகள் இன்றி இந்த சமூகம் எக்காலப்பகுதியிலும் வெறிச்சோடி விடாது. அவர்கள் எனது விமர்சனத்தை நடுநிலையாகப் பார்த்து பின்னூட்டங்களும் தந்திருக்கிறார்கள்.
8. நடந்து முடிந்த விவகாரத்தில் சமூகமே பிரச்சினைப்பட்டது. அந்த சமூகம் சார்பாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் பற்றி ஒரு விமர்சனம் செய்தேன். அதற்குப் பதில் விமர்சனம் செய்துள்ள சிலர் என்னை இழிவுபடுத்தும் விதமாக செய்திருக்கும் விமர்சனங்களும் உண்டு. அவற்றுக்கு நான் எப்போதுமே காதுகொடுப்பதில்லை, அவர்களுக்குப் பதிலளிக்கும் எண்ணமும் என்னிடமில்லை.
என்னை அழகுற விமர்சித்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களது விமர்சனத்தில் எடுப்பதற்கு எனக்கொரு விடயம் இருந்தது. யூஸுப் முப்தியிடம் கேட்காமல் அவரை முன்மொழிய உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறதென்பதே அது.
அவரைக்குறிப்பிட்ட பதவியில் அமர்த்துவதற்கு எனக்கு அதிகாரம் இருப்பதாகவோ அவ்வாறு முன்மொழிவதனால் உடனடியாக அவரையுமறியாமல் அவர் அமர்த்தப்பட்டுவிடுவார் என்ற சூழ்நிலையிலோ நான் இந்த விடயத்தை அணுகவில்லை. ஜம்இய்யதுல் உலமாவுக்கு ஒரு யாப்பிருப்பதும் அந்த யாப்பின் படி தான் அனைத்தும் அங்கு நடைபெறுகின்றன என்பதும் எனக்குத் தெரியாததும் அல்ல. அவ்வாறிருந்தும் அஷ்ஷெய்க் யூஸுப் முப்தி அவர்களை சங்கடத்துக்குள்ளாக்கும் நிலை எனது இந்த முன்மொழிவால் ஏற்பட்டுள்ளது. அந்த சங்கடத்தை அவருக்கு ஏற்படுத்தாமலிருக்கலாம் என்பது எனக்குப்புரிந்தது. எனது ஆக்கத்தை வெளியிடும் போதும் அந்த உணர்வு என்னிடம் இருக்கவே செய்தது. அதனால் குறிப்பிட்ட அந்த ஆக்கத்திலேயே நான் மன்னிப்பும் கேட்டிருந்தேன். இன்னும் அந்த மன்னிப்பை மீண்டும் கேட்பதில் எனக்கு எந்த மரியாதைக் குறைவும் ஏற்படப்போவதில்லை.
அஷ்ஷெய்க் யூஸுப் முப்தி அவர்கள் எனக்குப் பதில்கூறி வெளியிட்ட அவரது அறிக்கையில் அவருடைய நடுநிலைப்பார்வை பிரதிபலித்தது அல்லாஹ் அவருக்கு அருள்பாளிப்பானாக.
அவர் எனது அந்த முன்மொழிவு பற்றியோ அல்லது ஆக்கம் பற்றியோ வெளியிட்ட செய்தியில் ஒருவருக்கு ஒரு கருத்தைக் கூறும் சுதந்திரம் இருக்கிறது. இருப்பினும் நான் இப்பதவியை எதிர்பார்த்தவனுமல்ல, அதற்குத் தகுதியானவருமல்ல, இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நான் பொறுப்புமல்ல என்று அழகுற விளக்கியிருந்தார். ஜஸாஹுல்லாஹு கைரன். நடந்து முடிந்த விவகாரத்தில் எனது இந்த அவதானங்களை முன்வைப்பதோடு முடித்துக்கொள்கிறேன். நாளை நல்லதொரு சமூகம் மலர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. அதற்காக உழைக்கும் அனைவருக்கும் அல்லாஹ் பேரருள் புரிவானாக!...
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
usthazhajjulakbar.org
No comments:
Post a Comment