தொட்டிலில் ஒரு குழந்தை தடுமல், காய்ச்சல்...... என்று இன்னோரன்ன நோய்களால் அவதிப்பட்டவண்ணம் இருக்கிறது.
இதற்கு அக்குழந்தையின் பெற்றோர்கள் நிவராணம் தேடிக்கொண்டு இருக்கும் தருணம் அக்குழந்தையை யாரோ கடத்திச் சென்றுவிட்டனர். ஆனால் அப்பெற்றோர்களோ இதனை அலட்டிக்கொள்ளாது குழந்தையின் நோயைப்பற்றியே இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பெற்றோர்கள் பற்றிய உமது நிலைப்பாடு என்ன...............??
...........................
...........................
மடையர்கள்... தன் குழந்தை தனது கட்டுப்பாட்டில் இல்லாத போது அதனது நோய் பற்றிப் பேசாமல் முதலில் அக்குழந்தையை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொணர்ந்தால் அதற்கான நிவாரணத்தை இலகுவாகப் பெறலாமல்லவா...??! என்பதே அப்பெற்றோர்கள் பற்றிய எமது நிலைப்பாடாக இருக்கும்.
இன்று இஸ்லாத்தையும் முஸ்லிம் உம்மத்தையும் பாதுகாப்பதற்காக அணிதிரளுங்கள் என்று அறைகூவல் விடுக்கும் இஸ்லாமிய இயக்கங்கள் மேற்சொன்ன பெற்றோர்களுக்கு ஒத்தவர்களே..
இஸ்லாமும் முஸ்லிம்களும் மேற்கின் சிந்தனைகளாலும், சட்டதிட்டங்களாலும் கட்டுண்டு கிடக்கின்ற இக்காலத்தில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் மேற்கின் பிடியிலிருந்து பிடுங்கி, இஸ்லாத்தை அனைத்து சித்தாந்தங்களிலிருந்தும் மேலோங்கச் செய்யாது, இஸ்லாத்திற்கு ஏற்பட்டுள்ள நோய்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது முட்டாள்தனமான செயலாகும் என்பதில் எந்த அய்யமும் இல்லை. ஏனெனில் இந்த விவாதங்கள் ஒரு முடிவுக்கு வந்தாலும் எம்மால் அதனை ஒரு போதும் நடைமுறையில் கொணர முடியாது எமக்கொன்று ஒரு அதிகாரம் வரும் வரை. இஸ்லாம் ஒரு அதிகார பீடத்தில் இருந்தால் இப்படியான வாதத்திற்குரிய விடயங்களை இலேசாக தீர்த்துவைக்கலாம்.
இஸ்லாமிய அழைப்பாளர்களைப் பற்றி கலாநிதி கலீல் ஹாமித் பின்வருமாறு உவமிக்கிறார், 'ஓர் ஆறு மலையிலிருந்து ஊற்றெடுத்து ஓடும் போது அதன் இலக்கு கடலை அடைய வேண்டும் என்பதே. இதனால், அது இடையில் குறுக்கிடும் கட்பாறைகளோடு மோதாது அதனைவிட்டும் விலகி முதலில் கடலை சென்றடைகின்றது. பின்னர் அந்தக் கற்பாறைகளும் அதனுள் வந்து சேர்ந்து கொள்கின்றது. மாற்றமாக ஆறு கட்பாறையோடு மோதிக்கொண்டிருந்தால் அது அதன் இலக்கை இலகுவாக அடையமுடியாது பாரிய அழிவுகளைக் கண்டிருக்கும்.'
இன்று இஸ்லாமிய இயக்கங்கள் அல்குர்ஆன் சொல்கின்றது போன்று 'இஸ்லாம் அனைத்து கொள்கைகளையும் மிகைக்க வேண்டும்' என்ற உயரிய இலக்கை அடைவதற்காக ஒன்றினைந்து ஓரணியாக நின்று உழைக்க வேண்டும். இப்படி உழைத்து இஸ்லாம் இந்த இலக்கை அடைந்தால் எமக்கு மத்தியில் சர்ச்சையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் இந்த வாதப்பிரதி வாதங்கள் இலகுவாக தீரும்.
இன்று ஒரு கொள்கை மேலோங்க வேண்டும் என்றால் அந்தக் கொள்கையை அந்த நூற்றாண்டின் மொழியில் பேசவேண்டும். இதனைத் தான் அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான், 'ஒவ்வொரு தூதரும் தன் மக்களுக்குத் தெளிவாக விவரித்துக் கூறும் பொருட்டு. அந்தமக்களின் மொழியைக் கொண்டே (போதனை புரியுமாறு) நாம் அவர்களை அனுப்பிவைத்தோம்.' (14:04) ஆகையால் 21ஆம் நூற்றாண்டான இந்த நூற்றாண்டில் உள்ளவர்களுடன் நாம் பேசவேண்டும் என்றால் அவர்களது மொழியை இனங்கண்டு அதனைக்கொண்டு தான் பேசவேண்டும். இதற்கு மலேசியாவின் முன்னால் பிரதமர் மஹாதிர் முஹம்மத் அவர்களின் பின்வரும் கூற்று பொருத்தமாக இருக்கிறது. '19ஆம் நூற்றாண்டில் யாரிடம் கப்பல் படை இருந்ததோ அவர்கள்தான் இந்த உலகின் ஜாம்பவான்களாக இருந்தார்கள். 20ஆம் நூற்றாண்டில் யாரிடம் விமானப் படை இருந்ததோ அவர்கள்தான் இந்த உலகின் ஜாம்பவான்களாக இருந்தார்கள். 21ஆம் நூற்றாண்டில் யார் கைவசம் ஊடகப் பலம் இருக்கிறதோ அவர்கள்தான் இந்த உலகின் ஜாம்பவானகளாக இருப்பார்கள்.'
இன்று இந்தக் கருத்து நூறுவீதம் உண்மையாகிறது. ஏனெனில் எமது சமூகத்தில் தாக்கம் செலுத்தியிருக்கும் விடயங்களை அவதானியுங்கள்,... Facebook, Twitter, Youtube, சினிமா, பாடல்கள், குரும்படங்கள், சின்னத்திரைகள், வீதி நாடகங்கள்.... என்பனவாகவே அது அமையப்பெற்றுள்ளது.
ஆகவே இந்த நூற்றாண்டின் மொழியான ஊடகமொழியில் எமது தஃவாவை மும்முரமாக மேற்கொண்டு இந்த உலகின் ஆதிக்க சக்தியாக இஸ்லாத்தை மாற்றி இந்த உலகிற்கு அமைதியையும் பாதுகாப்பையும் கொடுப்பதற்காக இஸ்லாமிய இயக்கங்கள் ஒன்றுபட்டு உழைக்க வேண்டுமே ஒழிய மார்கத்திற்கு பீடித்துள்ள நோய்களை மாத்திரம் களைவதில் முழுக்கவணத்தையும் கொடுத்து காலத்தையும் சமூகத்தையும் அழிவுக்கூண்டில் நிறுத்தாது எம்மில் மாற்றத்தை கொணரவேண்டும்.
'மனிதர்கள் தங்களைத் தாங்களே மாற்றிக்கொள்ளாத வரையில், நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மாற்றுவதில்லை.' (13:11)
முஆத் முனாஸ் (வரகாபொல)
மாதம்பை இஸ்லாஹிய்யா வளாகம்
E-mail: munasmuaadh@gmail.com
No comments:
Post a Comment