Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

Tuesday, July 9, 2013

ஷஹாதத்தை மொழிந்தவர்களின் கடமை சான்றுபகர்வதே...







ஏகத்துவத்தை தமது வாழ்க்கை வழியாக மாற்றிக் கொண்ட அனேகரின் வாயில் இருந்து வெளியாகும் கசப்பான உண்மை, 'நான் முஸ்லிம்களைப் பார்த்திருந்தால் இஸ்லாத்தில் ஒருபோதும் நுழைந்திருக்க மாட்டேன், மாறாக இஸ்லாத்தை படித்ததனாலேயே நான் ஏகத்துவத்தை ஏக வழியாக ஏற்றேன்.' என்பது.

உண்மைதான் நூற்றுக்கு நூறு உண்மைதான். அன்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கலத்திலும், ஸஹாபாக்கல் காலத்திலும் முஸ்லிம்களைப் பார்த்து இஸ்லாத்திற்குள் சாரி சாரியாக வந்தார்கள். ஏன்? அவர்கள் பெயரால், நடத்தையால், மனதால் முஸ்லிம்களாக இருந்தார்கள். மேலும் அவர்கள் மொழிந்த ஷஹாதத்திற்கு சான்றுபகர்கின்றவர்களாக இருந்தார்கள்.

எவ்வாரெனில் உமைய ஆட்சிக்காலத்தில் மூஸா பின் நுஸைரின் தலைமையில் வட ஆபிரிக்கா சென்ற படை அப்பிரதேசத்தை இஸ்லாமிய ஆழுகையின் கீழ் கொனர்ந்து, அம் மக்களை நிம்மதியாகவும், சந்தேசமாகவும், சுதந்திரமாகவும் வாழும் விதமான சூழ்நிலையை ஏற்படுத்தக் கொடுத்தனர். அதே சந்தர்ப்பத்தில் ஸ்பெயினில் ரொட்ரிக் மன்னனின் கீழ் நடந்த ஆட்சியில் ஸ்பெயின் மக்கள் நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தனர்.
அப்போது வட ஆபிரிக்காவில் வாழ்கின்ற மக்களின் நிலை அறிந்த ஸ்பெயின் மக்கள், வட ஆபிரிக்காவை நோக்கி சாரி சாரியாக குடிபெயர்ந்தனர். அதுமட்டுமல்லாது ரொட்ரிக் மன்னனை வீழ்த்தவும் உதவுவதாக கவர்னரிடம் வாக்களித்தனர். உடனே முஸா பின் நுஸைர், இளமைத்துடிப்புள்ள 20 வயதும் பூர்த்தியாகாத தளபதியான தாரிக் பின் ஸியாதின் தலைமையில் ஒரு படையை அனுப்பினார். அப்படை சிறிது காலத்தில் ஐரோப்பாவை இஸ்லாத்தின் ஆளுகையின் கீழ் கொண்டுவந்தது.
சற்று எம் சிந்தனைக்கு இட்டுள்ள பூட்டுகளை திறந்து விட்டு, இன்று எம்மவர்களைப் பார்த்து ஒரு சாதாரன விடயத்திற்காவது நீங்கள் தான் இந்த விடயத்தை செய்யவேண்டும், நீங்கள் தான் இதற்கு மிகவும் பொருத்தமானவர்கள். என்ற வார்த்தைகளை உச்சரிக்க முஸ்லிம் அல்லாதவர்கள் சிந்தனைசெய்துகூட பார்ப்பார்களா?... என்று சற்று நிதானமாக சிந்தியுங்கள். நிச்சியமாக மாட்டார்கள் என்றே மெய்யுரைக்கும் மனம் சொல்லும். அன்று அரசாட்சியைக்கூட எம்மவர்களிடம் கொடுக்க முன்வந்தார்களே, ஏனெனில் அவர்களது செயற்பாடுகளில் இஸ்லாம் பிரதிபளித்தது.

எம் தாய்த்திரு நாட்டிலும் எம் முன்னோர்கள் இவ்வாறுதான் இருந்தார்கள். அதனை பெரும்பான்மையினரும் அவர்களது வரலாறுகளில் பதிய மறக்கவில்லை. ஆனால் கவலை இன்று எமது நிலை இதற்கு நேர்மாறாக மாறியுள்ளது. நாம் இந்நாட்டில் வாழ்வதுபோன்று சிறுபான்மையினராக ஒரு மன்னில் வாழ்பவர்களுக்கு இஸ்லாத்தில் அடிப்படை சட்டம் ஒன்று இருக்கிறது. அதுதான், அந்த சிறுபான்மை முஸ்லிம்கள், தாம் வாழும் தாருல் குப்ரிலிருந்து தாருல் இஸ்லாத்திற்கு அதாவது இஸ்லாமிய ஆளுகையின் கீழ் இருக்கும் பிரதேசங்களுக்கு புலம்பெயர வேண்டும் என்பதாகும்.
இவ்வாறு புலம் பெயராமல் இருப்பதாயின் அவர்களின் மீது கட்டயமாகின்ற ஒன்றுதான் அவர்கள் அந்த தேசத்தில் இஸ்லாத்தைப் பரப்ப வேண்டும், அந்த தேசத்தை இஸ்லாமிய மயப்படுத்தும் முயற்சியில் இருக்க வேண்டும். அதாவது நாம் முஸ்லிம் அல்லாத பெரும்பான்மையினருக்கு இஸ்லாத்தை, ஏகத்துவத்தை, இஸ்லாத்தின் சிந்தனைகளை, அதன் அழகை மற்றும் இலகு தன்மையை எடுத்துக் கூற வேண்டும். இப்பணியை நாம் இரண்டுவிதமாக செய்யலாம்.

1.    நாம் பெரும்பான்மை முஸ்லிம் அல்லாதவர்களை அனுகி அவர்களுக்கு இஸ்லாத்தை எத்திவைத்தல்.
2.    நாம் எமது நடத்தையில் இஸ்லாத்தை பிரதிபலித்தல்.

இவையிரண்டிலும் முதலாவதை விட இரண்டாவது அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதும் இலகுவானதுமாகும். இதனையே ஜாமிஆ நாளீமியா கலாபீடத்தின் பட்டமளிப்பு விழாவொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பிரபல இஸ்லாமிய அறிஞர் அபுல் ஹஸன் அலி நத்வி அவர்கள் கூறுகையில், 'இலங்கையில் தஃவாவிற்கான அனைத்து வாயில்களும் மூடப்பட்டுள்ளன. ஒன்றைத் தவிர, அதுதான் நாம் முன்மாதிரிகளாக இருப்பதன் மூலம் இஸ்லாத்தை எத்திவைப்பது.'
இவ்வாறு நாம் எமக்கு கடமையாக உள்ள இந்த சான்றுபகரும் அழைப்பு முறையை எம் தோல்களில் சுமப்பதற்கு நாம் சில அணிகலன்களை அணிவது கட்டாயம்.

1.    நாம் அழைக்கும் விடயமான இஸ்;லாம் பற்றிய பூரண விளக்கத்தை பெற்றிருத்தல்.
2.    ஹிக்மத் எனும் நுணுக்கமான அறிவை பெற்றிருத்தல்.
3.    அழைக்கும் விடயத்தை சான்றுபகரும் முன்மாதிரிகளாக இருத்தல்.
4.    எம்மை எதிர்த்தவர்களையும் அரவணைத்து அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளல்.

இவ்வாறு நாம் நடக்கும் போது நாம் எங்கிருந்தலும் சிறந்த சமூகமாக இருக்கலாம். இதுவே எமது உடனடித் தேவைகளில் ஒன்றாகவும் இருக்கிறது. அப்போது தஃவவும் இஸ்லாஹும் ஓருசேர இம்மண்ணில் நடக்கும். இப்படி நடக்கும் சமூகம் பற்றி இறைவேதம் இவ்வாறு கூறுகிறது:

كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ وَلَوْ آَمَنَ أَهْلُ الْكِتَابِ لَكَانَ خَيْرًا لَهُمْ مِنْهُمُ الْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ الْفَاسِقُونَ

'மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்;. இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்;. வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் - அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்;. எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.' (3:110)

ஆகவே எம்மீது கடமையாகியுள்ள இந்த தஃவா எனும் கடமையை செய்ய நாம் பண்பாடுள்ள முஸ்லிம்களாக மாறி, அதன் மூலம் எமது மார்க்கத்திற்கு சான்று பகர்கின்றவர்களாகவும் எமது சமூகத்தையும், இம்மன்னில் இஸ்லாத்தின் இஸ்திரத்தன்மையை பாதுகாப்பவர்களில் ஒருவராக மாறுவோம்.


முஆத் முனாஸ் - வரகாபொலை
(இஸ்லாஹிய்யா வளாகம்)

ஆராயாமல் செய்திகளைப் பரப்புதல்

ஆராயாமல் செய்திகளைப் பரப்புதல்

அல்லாஹ் தஆலா தனது திருமறையிலே பின்வருமாறு கூறுகின்றான்: நம்பிக்கையாளர்களே! யாதொரு விஷமி உங்களிடம் யாதொரு செய்தியைக் கொண்டுவந்தால், (அதன் உண்மையை அறியும் பொருட்டு அதனைத்) தீர்க்க விசாரணை செய்து கொள்ளுங்கள். (இல்லையெனில், அவனுடைய செல்லை நம்பி) அறியாமையால் யாதொரு மக்களுக்கும் நீங்கள் தீங்கிழைத்துவிட்டு பின்னர் நீங்கள் செய்தவைகளைப் பற்றி நீங்களே துக்கித்துக் கவலைப்படும்படியும் நேர்ந்துவிடும். (அல்ஹுஜுராத் 49:6)


இவ்வசனம் இடம் பெற்றிருக்கும் அல் ஹுஜுராத் அத்தியாயம் பல்வேறு சந்தர்ப்பங்களில் இறங்கிய ஒழுக்க போதனைகளை உள்ளடக்கியுள்ளது. ஒரு இறைவிசுவாசிக்கு அவசியம் இருக்க வேண்டிய குணநலன்களைக் கற்றுத் தருவது இந்த அத்தியாயத்தின் கருப்பொருளாகக் காணப்படுகிறது. இப்போதனைகள் மதீனாவில் ஒரு கட்டுக் கோப்பான இஸ்லாமிய சமூகம் உருவாக்கப்பட்டதன் பின்னர் இறக்கப்பட்டன. அந்த சமூகத்தில் காணப்பட்ட ஜாஹிலிய்யாக் கால பண்புகளை மாற்றுவிக்க இவ்வத்தியாயத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் முனைகின்றன. அந்த அடிப்படையில் மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள வசனம் சமூகத்தில் பிரட்சினைகள் உருவாவதற்கு உருதுணையாக இருக்கும் வதந்திகள் சம்பந்தமாக பேசுகின்றது.

இன்று பலவிதமான வதந்திகள் பரவியிருக்கின்றதையும் அதனைக் கட்டவிழ்த்திடும் நபர்களையும் நாம் பரவலாக எமது சமூகத்திலே கான்கிறோம். ஆதலால் வதந்திகளின் பாரதூரம், அதைப்பற்றி அல்குர்ஆனும் சுன்னாவும் கூறுவது என்ன? என்பவற்றை அறிந்திருப்பது காலத்தின் தேவை என்று கருதி இந்த முயற்சியை மேற்கௌ;கின்றேன். அல்ஹம்துலில்லாஹ்.

மேறுகூறிய இறைவசனத்தில் ஒரு செய்தி எம்மிடம் வந்தால் அதனைக் நாம் எவ்வாறு கையாளவேண்டும் என்பதை தெளிவாக கூறுகின்றதைக் கானலாம். எவ்வாறெனில்.

யாராவது ஒருவர் ஏதாவது ஒரு செய்தியை எம்மிடம் கொண்டுவந்தால்.
1. அது உண்மையா என்று அறியும் பொருட்டு தீரவிசாரிக்க வேண்டும்.
2. இவ்வாறு விசாரித்தறியாமல் அதை மக்களுக்கு அறிவித்தால் இதனால் மக்கள் தீங்கிழைக்கப்படுவார்கள்.
3. இவ்வாறு செய்வது உங்களுக்கே மேசமாகவும் அமையும்.
இந்த அல்குர்ஆனின் உபதேசத்தோடு பின்வரும் நபிமொழிகளையும் நாம் உரசிப்பார்க்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பெய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.' (முஸ்லிம் தமிழாக்கம், பாகம் 1, ஹதீஸ்:06)

இதனுடைய விளக்கம் என்னவெனில்: ஒருவர் கேள்விப்படும் தகவல்களில் உண்மையும் இருக்கலாம், பொய்யும் இருக்கலாம். இந்நிலையில், தமது காதில் விழுந்த செய்திகள் அனைத்தையும் ஒருவர் மற்றவருக்குச் சொல்வதென்பது பொய் பரவுவதற்கு துணைபோவதாகவே அமையும். ஆகவே உண்மையா, பொய்யா என்பதை நன்கு பரிசீலித்து பின்னரே தாம் கேள்விப்பட்ட தகவலை ஒருவர் அடுத்தவரிடம் தெரிவிக்க வேண்டும். இல்லையேல், அவரும் பொய்யராகவே கருதப்படுவார். (அல்மின்ஹாஜ்)

மேலும் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் நவின்றதாக: ஷைத்தான் மனித வேடத்தில் செயலாற்றுகின்றான். அவன் மக்களிடம் வந்து பொய்ச் செய்திகளை எடுத்துரைக்கின்றான். பிறகு மக்கள் கலைந்து சென்றுவிடுகின்றனர். (அதாவது சபை முடிந்துவிடுகின்றர். மக்கள் கலைந்து சென்றுவிடுகின்றனர்) அப்போது அவர்களில் ஒருவன் „நான் இந்த விஷயத்தை ஒரு மனிதனிடமிருந்து செவியுற்றேன். அவனது முகம் எனக்குத் தெரியும். ஆனால், பெயர் மட்டும் தெரியாது‟ என்று கூறுவான். (முஸ்லிம்)

விளக்கம் : இந்த நபிமொழியில், எந்த விஷயத்தையும் ஆராயாமல் செய்வதை விட்டுத் தடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அந்த விஷயத்தை சொன்னவன் பொய்யனாகவும் ஷைத்தானாகவும் இருக்கலாம். மக்கள் கூட்டத்தின் முன் தான் கேள்விப்பட்ட விஷயங்களையெல்லாம் எடுத்துச் சொல்லும் வழக்கம் உண்மையாகிவிட்டால், அதனால் பேரிழப்புகள் உண்டாகக் கூடிய கஷ்டங்களும் நஷ்டங்களும் ஏற்படக்கூடும். எனவே, செய்தி விடுப்பவனைக் குறித்து இந்த மனிதன் எப்படிப்பட்;டவன் என்று புலானாய்வு செய்யுங்கள். அவன் பொய்யன் என்பது உறுதியாகிவிட்;டால், அவனது பேச்சை நிராகரித்து விடுங்கள்.

அப்துல்லாஹ் பின் வஹப் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள், 'தெரிந்துகொள்! கேள்விப்பட்டதையெல்லாம் அறிவிக்கும் ஒரு மனிதர் (பொய்யிலிருந்து) தப்பமாட்டார்ளூ கேள்விப்பட்டதையெல்லாம் அறிவிக்கும் ஒருவர் ஒருபோதும் (வழிகாட்டும்) தலைவராக இருக்கமாட்டார்' என்று கூறினார்கள். (முஸ்லிம் தமிழாக்கம், பாகம் 1, ஹதீஸ்:08)

அப்தூரஹ்மான் பின் மஹ்தி (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தாம் கேள்விப்பட்டவற்றில் (சந்தேகத்திற்குரிய) சிலவற்றையாவது (பிறருக்குத்) தெரிவிப்பதிலிருந்து வாய்மூடாதவரை அவர் பின்பற்றப்படும் தலைவராக ஆகமுடியாது.
இதை முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் தமிழாக்கம், பாகம் 1, ஹதீஸ்:10)
சுஃப்யான் பின் ஹுஸைன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் இயாஸ் பின் முஆவியா (ரஹ்) அவர்கள், 'குர்ஆனை கற்பதில் உங்களுக்கிருக்கும் ஈடுபாட்டை நான் அறிவேன். எனவே, குர்ஆனிலுள்ள ஓர் அத்தியாயத்தை எனக்கு ஓதிக்காட்டி விளக்கமளிப்பீராக! நீங்கள் கற்றதை நான் சரி பார்க்க வேண்டும்' என்று கூறினார்கள். நான் அவ்வாறே செய்தேன். அப்போது அவர்கள் என்னிடம், 'நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்கிறேன். அதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்ளூ நிராகரிக்கப்பட்ட செய்திகளை கூற வேண்டாமென உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், அச்செய்திகளை கூறித் திரிகின்றவர் இழிவடையாமலும் பொய்யர் என இனங் காணப்படாமலும் இருத்தல் அரிது' என்றார்கள். (முஸ்லிம் தமிழாக்கம், பாகம் 1, ஹதீஸ்:11)
இவை அனைத்தையும் உற்றுநொக்கும் போது ஏதாவது ஒரு செய்தி எம்மிடம் வந்தால் அதை சம்பந்தப்பட்டவர்களிடம் வினவி தீரவிசாரிக்காது மக்களிடம் பரப்புவது பெய்யர்களாகும், மேலும் அத்தகையவர்கள் மனிதர்களை வழிநடத்துவதற்கு அருகதையற்றவர்கள் என்பவற்றை எமக்கு உனர்ந்து கொள்ள முடியும்.
பேய்யைப் பற்றியும் அதன் விபரீதங்கள் பற்றியும் நாம் நன்கு அறிந்தே வைத்திருக்கிறோம். என்றாலும் அதைப்பற்றிய ஒரு சில அறிவிப்புகளை பார்ப்போம்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
„பொய் சொல்வது எந்த நிலையிலும் அனுமதிக்கப்பட்டதல்ல, உண்மையாக (வேண்டுமொன்றே வினையாக) சொன்னாலும் சரி, விளையாட்டுக்காகச் சொன்னாலும் சரி, இரண்டுமே கூடாது. உங்களில் எவரேனும் தம் குழந்தைக்கு ஏதேனும் ஒரு பொருள் கொடுப்பதாக வாக்களித்துவிட்டு அதனை நிறைவேற்றாமல் விடுவதும் அனுமதிக்கப்பட்டதல்ல!‟ (அல் அதபுல் முஃப்ரத், பக்கம் 58)
அறிவிப்பாளர் : பஹ்ஸ் பின் ஹகீம் (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: „மக்களைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய் சொல்பவனுக்குக் கேடும் தோல்வியும் உண்டாகட்டும்! அவனுக்கு அழிவு காத்திருக்கிறது.‟ (திர்மிதி)
விளக்கம் : பேசிக்கொண்டே இருக்கும்போது பொய்யைக் கலந்து, உரையாடலை காரசாரமாகவும் சுவைமிக்கதாகவும் ஆக்கி, அவையில் கலகலப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்திடப் பொய்யுரைப்பது தவறாகும் என இந்த நபிமொழியில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: „தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியமால் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுவதாயினும் - பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். தன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேள்.‟ (அபூதாவூத்)

இவற்றைப் பார்க்கும் போது விளங்கும் விளையாட்டுக்குக் கூட பெய்பேசுவது கூடாத ஒரு விடயம் என்பது. குர்ஆன் இதனைக் கூறும் போது 'பொய் பேசுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்' (திருக்குர்ஆன் 22:30) என்று கூறுகிறது. மேலும் தூதர் (ஸல்) அவர்கள் பெய்யைத் தவிர்ந்து இருப்பவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டைக் பெற்றுத் தருவதற்கு தான் பொறுப்பு என்று வாக்களித்திருக்கிறார்கள்.

சிந்தியுங்கள் சகோதரர்களே நாம் பெய்யாக சோடித்து சொல்லும் செய்திகள் அல்லது யாரவது எங்களிடம் சோடித்து சொன்னவைகளை நாம் தீரவிசரித்து அறியாமல் அதை மக்களிடையே பரப்புவதால் மனிதர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள். அதே நேரம் இவ்வாறு வதந்திகளைக் கட்டவழ்த்து விடுபவர்கள் இரண்டு தீமைகளை அடைந்து கொள்கின்றார்கள்.
1. பொய் எனும் பாவத்தை செய்கின்றார்கள்.
2. சமூகத்திலே குழப்பத்தை உண்டுபன்னுகிறார்ள்.

இவை இரண்டையும் அல்லாஹ் மன்னிக்க வேண்டும் என்றிருந்தால் அவன் சம்பந்தப்பட்ட நபர்களிடம் மன்னிப்பை பெற்றுக்கொள் வேண்டும். அப்பொழுது தான் அல்லாஹ் அவனை மன்னிப்பான். அதேனேரம் சகோதரர்களே! அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'தான் விரும்புவதை தனது சகோதரனுக்கும் விரும்பாதவதை ஒருவன் பரிபூரண ஈமான் கொண்டவராக முடியாது.' இந்த அறிவிப்பிற்கு இனங்க நாம் துன்பத்திலும், கவலையிலும் நாம் விழுவதை ஒருபோதும் விரும்பமாட்டோம். அதேபோன்று எமது சகோதரர்களுக்கும் இதையே விரும்பி துன்பம் மற்றும் கவலைகளிலிருந்து அவர்களையும் காப்பாற்றுபவர்களாக இருந்தால் தான் நாம் ஈமானிலே பரிபூரணமடைய முடியும்.

ஆகவே சகோதரர்களே இவ்வளவு பாரதூரமான இந்த வதந்திகளைப் பரப்பும் காரியத்திலிருந்து தவிர்ந்து சமூக கட்டமைப்பில் பங்கம் விளைவிக்கும் நபர்களிலிருந்து ஒதுங்கி விலகி அதனை வளர்க்கும் உரங்களாக எம்மை மாற்றி சமூகத்தை வழிநடத்தும் தலைவர்களாக எம்மை மாற்றிக்கொள்ள முயற்சிப்போம்.


எம்.எம். முஆத்
(இஸ்லாஹிய்யா வளாகம்-மாதம்பை)
E-Mail: muaadh.munas07@gmail.com

Monday, July 8, 2013

ரமழான் நோன்பின் சட்டங்கள்

ரமழான் நோன்பின் சட்டங்கள்

ரமழான் நோன்பு முஸ்லிமான பருவ வயதையடைந்த புத்திசுவாதீனமுள்ள சக்தியுள்ள ஊரில் தங்கியிருக்கக்கூடிய அனைவரின் மீதும் கடமையானதாகும்.

மிகுந்த வயது முதிர்ச்சி குணமாகுமென்று எதிர்பார்க்க முடியாத நோய் போன்ற காரணத் தால் நோன்பு நோற்க இயலாதவர்கள் ஒவ்வொரு நாளும் ஓர் ஏழைக்கு உணவு வழங்க வேண்டும்.

தனது நோய் நீங்கிவிடுமென்று எதிர்பார்க்கக்கூடிய நோயாளி தான் நோன்பு நோற்பது சிரமமென்று கருதினால் நோன்பை விட்டுவிடலாம். நோய் குணமான பின் விடுபட்ட நோன்பை நிறைவேற்ற வேண்டும்.

கர்ப்பமுற்ற பெண்ணும் குழந்தைக்குப் பாலூட்டுபவளும் நோன்பு நோற்பது சிரமமென்று கருதினால் அல்லது குழந்தையின் உடல்நலம் கெடும் என்று அஞ்சினால் நோன்பை விட்டு விடலாம். இந்நிலையை விட்டுக் கடந்த பிறகு நோன்பை நிறைவேற்றவேண்டும்.

மாதவிலக்கு மற்றும் பிரசவத்தீட்டு உள்ள பெண்கள் அக்காலங்களில் நோன்பு நோற்கக் கூடாது. அக்காலகட்டத்திற்குப் பின் அவர்கள் விடுபட்ட நோன்பை நிறைவேற்ற வேண்டும்.

தண்ணீரில் மூழ்குதல் தீவிபத்தில் சிக்குதல் போன்ற அபாயங்களிலிருந்து மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காக நோன்பை விடும் கட்டாயத்திற்கு ஆளானவர் நோன்பு நோற்றுச் சிரமப்பட வேண்டியதில்லை. தவறிய நோன்பைப் பின்னர் நிறைவேற்றிக் கொள்ளலாம்.

பிரயாணி விரும்பினால் நோன்பு நோற்கலாம். விட்டுவிட அவருக்கு அனுமதியிருப்பதால் விட்டுவிடவும் செய்யலாம். இப்பயணம் உம்ரா போன்றதற்காகவோ வாகன ஓட்டி (டிரைவர்)களாகப் பணி செய்வதற்காகவோ இருக்கலாம். இத்தகையவர்கள் தாம் வசிக்கும் ஊர்களுக்கு வந்தவுடன் விடுபட்ட நோன்பை நோற்றுக் கொள்ளவேண்டும்.

நோன்பை முறிக்கக்கூடியவை

மனைவியுடன் உடல் உறவு கொள்வது: நோன்பு நோற்று இருக்கும் நிலையில் உடல் உறவு கொண்டு விட்டால் முறிந்த நோன்பை மீண்டும் நோற்பதுடன் அதற்கான அபராதத்தையும் நிறைவேற்ற வேண்டும். அபராதத்தில் முந்தியது ஓர் அடிமையை உரிமை விடுவதாகும். அல்லது தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்கவேண்டும்.

சுய இன்பத்தைக் கொண்டு அல்லது மனைவியுடன் கொஞ்சிக் குலாவுவது கொண்டு இந்திரியம் வெளிப்படல்

உண்பதும் குடிப்பதும். இது பயனுள்ளதாயினும் அல்லது பயனற்ற புகை போன்றதாயினும் சரியே.

உணவு உண்பதற்குப் பகரமாக குளுக்கோஸ் ஊசி போட்டுக் கொள்வது. (உணவுக்குப் பகரமில்லாத நோயைக் குணப்படுத்தும் ஊசி போட்டால் நோன்பு முறியாது.)

மாதத்தீட்டு மற்றும் பிரசவ இரத்தம் வெளிப்படுவது.

இரத்தம் குத்தி வாங்குவது அல்லது நரம்பு வழியாக இரத்தத்தை வெளியாக்குவது. (பொன்னி மூக்கு உடைவதாலோ பல் உடைவதாலோ தானாக இரத்தம் வெளிப் பட்டால் நோன்பு முறியாது.)

வேண்டுமென்றே வாந்தி எடுப்பது. (நாட்டமின்றி வாந்தி வந்துவிட்டால் நோன்பு முறியாது)

நோன்பை முறிக்கக்கூடிய காரியங்களுள் ஏதாவது ஒன்றை மறந்தோ அறியாமலோ கட்டாயத்திற்கு உட்பட்டோ செய்து விட்டால் நோன்பு முறியாது.

நோன்பின் ஒழுக்கங்கள்

நோன்பாளி இச்சையைத் தூண்டும் காட்சிகளை விட்டும் வெறுக்கத்தக்க காட்சிகளை விட்டும் தன் பார்வையை தாழ்த்திக் கொள்ளவேண்டும்.

புறம் பேசுதல் கோள் மூட்டுதல் பொய்யுரைத்தல் முதலியவற்றை விட்டும் நாவைப் பேண வேண்டும்.

வெறுக்கத் தக்க செய்திகளையும் இசைகளையும் கேட்பதை விட்டும் காதுகளைப் பேண வேண்டும்.

மற்றும் இதர உடலுறுப்புகளையும் பாவத்தில் மூழ்க விடாமல் பாதுகாக்க வேண்டும்.

சாப்பிடுவதையும் குடிப்பதையும் அதிகமாக நாட்டம் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

நோன்பு நோற்று இருக்கும் நிலையிலும் நோன்பு திறந்த பிறகும் உள்ளத்தை அல்லாஹ்வின் மீது அச்சத்துடனும் ஆதரவுடனும் வைத்துக்கொள்ளவும். இந்நிலை வணக்கங்கள் அனைத்தின் இறுதியிலும் அமைந்திருக்க வேண்டும்.

உடலுறவு முதலிய பெருந்தொடக்கு நிலையில் இருப்பவர் நோன்பு நோற்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டால் உணவு உண்டுவிட்டு நோன்பு நோற்பதற்காக நிய்யத் (எண்ணம்) வைத்துக் கொள்ளலாம். பின்னர் குளித்துத் தூய்மையாக்கிக் கொள்ளலாம்.

மாதத்தீட்டு மற்றும் பிரசவத்தீட்டு இவற்றிலிருந்து அதிகாலைக்கு முன் துப்புரவாகி விட்ட பெண் அன்றைய நோன்பை நோற்பது கடமை.

நோன்பாளி தன் பல்லைப் பிடுங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் பிடுங்கிக் கொண்டு அதற்கு மருந்து வைத்துக் கொள்ளலாம். காதுகளிலும் கண்களிலும் சொட்டு மருந்திட்டுக் கொள்வதும் கூடும். சொட்டு மருந்தின் ருசியை தொண்டையில் உணர்ந்தாலும் சரி. நோன்பு முறியாது.

கடுமையான வெப்பநிலையில் சகிக்க முடியாத நோன்பாளி தன் உடலைக் குளிர் படுத்திக் கொள்வதால் நோன்பு முறியாது.

நோன்பு நோற்ற நிலையில் பல் சுத்தம் செய்து கொள்ளலாம்.

ஆஸ்துமா போன்ற நோய்களால் ஏற்படும் சுவாச நெருக்கடியை இலேசு படுத்தும் ஸ்ப்ரேயை நோன்பாளி தன் வாயில் செலுத்திக் கொள்வதால் நோன்பு முறியாது.

வாய் வரண்டு போய் சிரமமாக இருந்தால் நோன்பாளி உதடுகளை ஈரப்படுத்திக் கொள்ளலாம். அல்லது (புழபடiபெ செய்யாமல்) வாய் கொப்பளித்துக் கொள்ளலாம்.

ஸஹர் உணவை ஃபஜ்ருக்குச் சிறிது நேரத்திற்கு முன்பு வரைப் பிற்படுத்துவதும் சூரியன் மறைந்தவுடன் நோன்பு திறப்பதைத் துரிதப்படுத்துவதும் நபிவழி ஆகும்.

பழுத்த பேரீத்தம்பழம் அது கிடைக்காவிட்டால் சாதாரணப் பேரீத்தம்பழம் அதுவும் கிடைக்காவிட்டால் தண்ணீர் அதுவும் கிடைக்காவிட்டால் கிடைக்கும் ஏதேனும் ஓர் உணவைக்கொண்டு நோன்பைத் திறக்கலாம். எதுவுமே கிடைக்காவிட்டால் உணவு கிடைக்கும் வரை உள்ளத்தில் நோன்பு திறந்ததாக எண்ணிக்கொள்ளவும்.

நோன்பாளி வணக்க வழிபாடுகளை அதிகமாக்கிக் கொள்வதும் தடுக்கப்பட்ட அனைத்தையும் விட்டு தவிர்த்துக்கொள்வதும் அவசியமாகும்.

ஐவேளைக் தொழுகைகளை அதனதன் நேரத்தில் ஜமாஅத்துடன் நிறைவேற்ற வேண்டும்.

பொய் பேசுதல் புறம்பேசுதல் ஏமாற்றுவது வட்டி கொடுக்கல் வாங்கல் செய்வது தடை செய்யப்பட்ட சொல் செயல் அனைத்தையும் விட்டு விலகியிருக்க வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பாவமான சொல்லையும் அதைக் கொண்டு செயல்படுவதையும் விட்டு விடவில்லையோ அவர் தன் உணவையும் குடிப்பையும் விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை.

ரமழான் நோன்பு பற்றி ஒரு பார்வை

ரமழான் நோன்பு பற்றி ஒரு பார்வை




எதற்காக நோன்பு நோற்க வேண்டும்? இக்கேள்விக்குப் பலர் பலவிதமாக விடையளிக்கின்றனர்.
பசியின் கொடுமையைப் பணம் படைத்தவர்கள் உணர வேண்டும் என்பதற்காகத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டது என்பர் சிலர். பசியை உணர்வது தான் காரணம் என்று அல்லாஹ்வும் கூறவில்லை; அவனது தூதரும் கூறவில்லை. இது இவர்களின் கற்பனையே தவிர வேறில்லை.
பசியை உணர்வது தான் காரணம் என்றால் செல்வந்தர்களுக்கு மட்டும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்க வேண்டும். அன்றாடம் பசியிலேயே உழல்பவனுக்கு நோன்பு கடமையில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் பணக்காரர்கள் கூட நோன்பு நோற்காமலேயே பசியின் கொடுமையை உணர்ந்து தான் இருக்கின்றனர். பசியை உணர்வதால் தான் சாப்பிடுகின்றனர். நெருப்பு சுடும் என்பதை எப்படிச் சர்வ சாதாரணமாக உணர்கிறோமோ அது போலவே மனிதர்கள் மட்டுமின்றி எல்லா உயிரினங்களும் பசியை உணர்ந்திருக்கின்றன. எனவே இந்தக் காரணம் முற்றிலும் தவறாகும்.
உடல் ஆரோக்கியம் பேணப்படுவது தான் நோன்பின் நோக்கம் என்று வேறு சிலர் கூறுகின்றனர். நோன்பு நோற்பதால் உடல் ஆரோக்கியம் பேணப்படும் என்று அல்லாஹ்வும் கூறவில்லை; அவனது தூதரும் கூறவில்லை. உடல் ஆரோக்கியம் இதனால் ஏற்படும் என்பது காரணம் என்றால் நோயாளிகள் வேறு நாட்களில் நோற்றுக் கொள்ளுங்கள் என்று இறைவன் கூறுவானா? நோயாளிகளுக்குத் தானே ஆரோக்கியம் அவசியத் தேவை! நோன்பே ஒரு மருந்து என்றிருக்குமானால் நோயாளிகளுக்கு நோன்பிலிருந்து விலக்கு அளிப்பதில் எந்த நியாயமும் இல்லை. எனவே நோன்பு நோற்பதற்கு இதைக் காரணமாகக் கூறுவதும் தவறாகும்.
சில மனிதர்களுக்கு இதனால் ஆரோக்கியம் ஏற்படலாம். அல்சர் போன்ற நோய் ஏற்பட்டவர்களுக்கு இதனால் நோய் அதிகரிக்கவும் செய்யலாம். எனவே இறை திருப்தியை நாடி நிறைவேற்றப்படும் ஒரு வணக்கத்திற்கு இது போன்ற அற்பமான காரணங்களைக் கூறி நோன்பைப் பாழாக்கி விடக் கூடாது. நோன்பு கடமையாக்கப்பட்டதற்குரிய காரணத்தை அல்லாஹ்வே மிகத் தெளிவாகக் கூறி விட்டான். அந்தக் காரணம் தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் நோன்பு கடமையாக்கப்படவில்லை. மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள வசனத்தில், நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக என்று இறைவன் குறிப்பிடுகிறான்.
நோன்பு நோற்பதால் இறையச்சம் ஏற்படும். இறையச்சம் ஏற்பட வேண்டும் என்பது தான் அல்லாஹ் கூறுகின்ற காரணம்.
மக்குச் சொந்தமான உணவைப் பகல் நேரத்தில் அல்லாஹ் கட்டளையிட்டதால் தவிர்த்து விடுகிறோம். நமது வீட்டில் நாம் தனியாக இருக்கும் போது நமக்குப் பசி ஏற்படுகிறது. வீட்டில் உணவு இருக்கிறது. நாம் சாப்பிட்டால் அது யாருக்கும் தெரியப் போவதில்லை. ஆனாலும் நாம் சாப்பிடுவதில்லை. நாம் சாப்பிடக் கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டதால் நாம் சாப்பிடுவதில்லை. யாரும் பார்க்காவிட்டாலும் நாம் சாப்பிடுவது அல்லாஹ்வுக்குத் தெரியும்; அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் நமது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருப்பதால் தான் நாம் சாப்பிடுவதில்லை. யாரும் பார்க்காவிட்டாலும் இறைவன் பார்க்கிறான் என்பதற்காக நமக்குச் சொந்தமான உணவை ஒதுக்கும் நாம், ரமளான் அல்லாத மாதங்களிலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று நம்ப வேண்டும்.
ஹராமான காரியங்களில் ஈடுபட நினைக்கும் போது, ஹலாலான பொருட்களையே இறைவனுக்குப் பயந்து நாம் ஒதுக்கி வந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும். இந்த ஆன்மீகப் பயிற்சி தான் நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான ஒரே காரணம். இதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் விளக்கியுள்ளார்கள்.
யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1903, 6057
பசித்திருப்பது நோன்பின் நோற்கமல்ல என்பதும் இங்கே விளக்கப்படுகிறது. நோன்பின் மூலம் எடுக்கப்படும் பயிற்சி நம்மிடம் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதும் இங்கே விளக்கப்படுகிறது.
நோன்பின் மூலம் பெற்ற பயிற்சி, பொய் சொல்வதிலிருந்தும் தீய நடவடிக்கையிலிருந்தும் தடுக்கவில்லை என்றால் அது நோன்பு அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நாம் நோன்பு நோற்றுள்ள நிலையில் நம்முடன் வீண் வம்புக்கு யாரேனும் வந்தால் கூட சரிக்குச் சரியாக அவர்களுடன் வம்புக்குப் போகக் கூடாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வலியுறுத்துகிறார்கள்.
உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் சண்டைக்கு வந்தால், யாரேனும் திட்டினால் நான் நோன்பாளி என்று கூறி விடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1893, 1903
நோன்பு என்பது ஒரு ஆன்மீகப் பயிற்சி என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். இது தான் நோன்பின் நோக்கம் என்று உணர்ந்தால் தான் அந்த நோக்கத்தை நாம் அடைய இயலும். முப்பது நாட்கள் நோன்பு நோற்றுப் பயிற்சி எடுத்தவர்கள் நோன்பை நிறைவு செய்தவுடன், சினிமாக் கொட்டகைகளில் வரிசையில் நிற்கிறார்கள் என்றால் இவர்கள் பட்டினி கிடந்தார்கள் என்று கூறலாமே தவிர நோன்பு நோற்றார்கள் என்று கூற முடியாது.
ரமளானுக்கு முன் எந்த நிலையில் இருந்தோமோ அதே நிலை தான் ரமளானுக்குப் பிறகும் நம்மிடம் இருக்கிறது என்றால் நாம் எந்தப் பயிற்சியும் பெறவில்லை என்பது தான் இதன் பொருள். எனவே இத்தகைய நிலை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்

Friday, July 5, 2013

மாற்றம் வேண்டிநிற்கும் முதல் மாற்றம்....

மாற்றம் வேண்டிநிற்கும் முதல் மாற்றம்....


மாற்றம் என்பது திடீரென உருவெடுப்பதொன்றல்ல. அது படிப்படியாக, கட்டம்கட்டமாக உருவாகின்றதொன்றாகும். அதேநேரம் இது இடம்பெற இரண்டு பலங்கள் ஒருசேர வேண்டும். அவைதான்: உடல், உள வலிமை மிக்க இளம் கன்றுகளும், பழுத்த அனுபவமுள்ள முதியவர்களுமாகும். இன்று எமது சமூகத்தில் அனுபவசாலிகள் வழிகாட்ட காத்திருக்க அதனை சுமந்து, நடைமுறைப்படுத்தி மாற்றத்தை கொண்டுவரத் தயாராகும் உடல், உள வலிமை கொண்ட இளம் பரம்பரையினரைக் காணமுடியாதுள்ளது. இதற்குக் பலவிதமான காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இன்று எமது இளைஞர்கள் தமது சக்தியையும் பலத்தையும் உணரவில்லை என்பதாகும்.

இளைஞர்கள் என்றால்...?

இளைஞர்கள்தான் மாற்றத்தை ஏற்படுத்த வல்லவர்கள் என்பதை அல்குர்ஆன், அல்ஹதீஸ் எடுத்தியம்புகிறது. இதற்கு கஹ்ப் வாசிகளின் சம்பவம், மற்றும் இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்), கிடங்குவாசிகளின் சம்பவம்.... போன்ற இன்னோரன்ன சம்பவங்கள் ஆதாரம். அதுமட்டுமல்லாமல்ல, இளைஞர்களைப் பற்றி அனுபவசாலிகள் பல கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள். அந்தவகையில் ஈராக்கைச் சேர்ந்த நவீனகால சிந்தனையாளர் அஹ்மத் முஹம்மத் ராஷpத் தனது ஷஸினாஅதுல் ஹயாத்| என்ற புத்தகத்தில் சொல்லியிருக்கும் கருத்தை இங்கு குறிப்பிடுவது சிறந்தது. 'ஒரு கிராமத்தில் முதியவர்கள், பெண்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், சிறுவர்கள் மற்றும் நோயாளிகள் போன்றோர் சமூகமாற்ற செயற்பாட்டில் மிகக் குறைந்த அளவே பங்கெடுக்கின்றனர். அச்செயற்பாட்டின் ஆணிவேர் அக்கிராமம் கொண்டிருக்கும் இளைஞர்களே, இவ்விளைஞர்களின் செயற்பாட்டுத் திசைக்கேற்பவே அக்கிராமத்தின் திசை தீர்மானிக்கப்படுகிறது. எனவே இளைஞர்கள் மிகக் கவனமாக வழிகாட்டப்பட வேண்டிய தேவை இருக்கிறது.'

மேலும் சில அறிஞர்கள், 'இளைஞர்கள்தான் ஒரு சமுதாயத்தின் உயிர் நாடிகள்' என்கிறார்கள். ஏனென்றால் இளம் கண்டு பயமறியாதது போன்று இளைஞர்கள் துணிவும் வீரமும் உள்ளவர்கள். இத்தகைய சக்தியினராலேயே சமூகமாற்றம் சாத்தியப்படுகிறது. இதனை நவீன அறபுப் புரட்சிகள் எடுத்துக்காட்டின.

இன்றைய இளைஞர்கள்...

ஆனால் இன்று எமது இளைஞர்களின் நிலை என்னவென்று தெரியும், உலகை அனுபவிப்பதற்காக வாழ்கின்றார்கள். சற்று விரிவாக கூறுவதாயின் நான் யார், நான் எதற்காக வாழ்கிறேன்?.... போன்ற கேள்விகளுக்கு விடைதெரியாதவர்களாய், ஆபாசங்களிலும், அளிச்சாட்டியாங்களிலும், இதுபோன்ற விடயங்களில் அடிபட்டுச் செல்லும் சருகுகளாயிருக்கின்றார்கள்.

இந்நிலையை மாற்றுவது எவ்விதம்...?

நாம் இவர்களை மாற்றத்தின் கதாநாயகர்களாக மாற்றுவதற்கு அவர்களது இயல்புடன் ஒத்துப்போகும் அனுகுமுறைகளைக் கையாளவேண்டியுள்ளது. இன்றைய யுகம் குறிப்பாக வாலிப சமூகம் ஊடகத்தால் அடிமைப்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம். இதனைத்தான் மலேசியாவின் முன்னால் பிரதமர் மஹாதிர் முஹம்மத் அவர்கள், '19ஆம் நூற்றாண்டில் யார்கைவசம் கப்பல் படை இருந்ததோ அவர்கள்தாம் இவ்வுலகை ஆளும் ஜாம்பவான்களாக இருந்தார்கள். அதேபோன்று, 20ஆம் நூற்றாண்டில் யார் கைவசம் விமானப் படை இருந்ததோ அவர்கள்தான் இவ்வுலகின் ஜாம்பவான்களாகத் திகழ்ந்தார்கள். இந்த நூற்றாண்டின் ஜாம்பவான்களாகத் திகழுபவர்கள் ஊடகத்தை கையில் வைத்திருப்பவர்களே.' என்றார்கள்.

இந்த ஊடகம் இன்றைய உலகை ஆண்டுகொண்டிருக்கிறது. மேலே சொன்னது போல குறிப்பாக இது இளைஞர் சமூகத்தை அடிமைப்படுத்தியிருக்கிறது. ஆகவே நாம் இவர்களை மாற்றத்தின் கதாநாயகர்களாக மாற்ற ஊடகத்தில் மாற்றத்தை ஏற்றபடுத்த வேண்டும், அதனூடாக எமது புரட்சியை ஏற்படுத்த வேண்டும். இந்த ஊடகத்தைப் பொருத்த வரையில் இரண்டுவகைப்படுகிறது.

1. அச்சு ஊடகம்
2. இலத்திரனியல் ஊடகம்

அச்சு ஊடகங்கள் என்பது துண்டுப்பிரசுரங்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், சிற்றேடுகள், புத்தகங்கள்,.... போன்றனவாகும். இலத்திரனியல் ஊடகங்கள் என்பது, தொலைக்காட்சி, கைப்பேசி, இணையம், மின்னஞ்சள், Facebook, Twitter, Blogger,........ போன்றனவாகும். இதிலே இளைஞர்களையும் மக்களையும் அதிகம் அடிமைப்படுத்தியிருப்பது இலத்திரனியல் ஊடகங்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இவ்வகையான இலத்திரனியல் ஊடகங்களினூடாக ஒரு பாரிய புரட்சியை ஏற்படுத்துவதன் மூலம் ஒரு பலம் மிக்க வாலிபக் குழுவை சமூகத்தில் உருவாக்க முடியும்.

இது போன்று நாம் எழுதும் எழுத்துக்கள் இளைஞர்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்துவது மிகவும் குறைவாகும். ஏனென்றால் அவர்கள் வாசிப்புத் துறைக்கு ஆர்வம் காட்டாதவர்களாகவே இருக்கிறார்கள். உதாரணமாக Facebook இல் கூட நாம் ஒரு செய்தியைக் கொடுப்பதாக இருந்தால் அதை நாம் ஒரு Videoவாக அல்லது ஒரு Imageஆக கொடுக்கும் போதுதான் அதனை அதிகமானவர்கள் பார்ப்பார்கள். மாற்றமாக அதனை வெரும் எழுத்துக்களாக கொட்டினால் அதனைப் பார்க்கமாட்டார்கள். பொதுவாக இன்று அனேகமானவர்கள் Image Readerகளாகத் தான் இருந்துவருகிறார்கள் என்பதே இதற்குக் காரணம்.

இதற்காக சமூகம் வேண்டி நிற்பது...?

இன்று இளைஞர்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை கொண்டுவருவதற்கு நாம் செய்ய வேண்டிய முதலாவது வேலை இலத்திரனியல் ஊடகங்களில் மாற்றத்தை உண்டுபன்னி அதில் இஸ்லாமிய கருத்துக்களை மேற்சொன்ன விதத்தில் சொறிவதாகும். இதற்காக எமது சமூகம் இத்தகைய ஊடகத் துறையாளர்களை உள்வாங்கவேண்டும். ஊடகத்துறையாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இதனை பேராசிரியர் குர்ஷpத் அஹ்மத் அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள், இன்று எமது முஸ்லிம் உம்மத் அவசரமாக வேண்டி நிற்பது மூன்று விடயங்களையாகும்.
1. புத்திஜீவிகள்
2. துறைசார் நிபுனர்கள்
3. ஊடகத் துறையாளர்கள்

ஆகவே நாம் ஊடகத்துறையினர்களை எமது சமூகத்தில் உருவாக்கி அவர்களினூடாக ஊடகத்தில் பின்வரும் விடயங்களைச் செய்வதன் மூலம் மாற்றம் என்ற சொல்லின் தாத்பரியத்தை நிதர்சனமாக சமூகத்தில் காணலாம்.

இஸ்லாமிய சிந்தனையை பரப்புதல்.
இஸ்லாம் பற்றிய பிழையான கருத்துக்களை களைதல்.
பிற சமூகங்களுடன் நல்லுறவை பேனல்.
இஸ்லாம் பற்றி பூரணமான சிந்தனையை முன்னெடுத்தல்.
அடிப்படை அலகுகளில் இஸ்லாத்தை நிலைநாட்டல்.
உம்மத்தின் ஒற்றுமையை பாதுகாத்தல். (பிளவுபட்ட பெரும்பான்மை சமூகமொன்றில் ஒற்றுமையாக வாழும் சிறுபான்மை சமூகம் பலம்மிக்கது –  யூசுப் அல்கர்ழாவி)

ஆகவே நாம் சிறந்த ஊடகத்தினை உருவாக்குவதினூடாக, ஒரு பலம்வாய்ந்த இளைஞர் சமூகத்தை உருவாக்கி, அதன் மூலம் ஒரு முன்மாதிரி சமூகமாக மாறி, இந்த மாற்றமடைந்த சமூகத்தினூடாக உலகத்திற்கு ஒளியூட்டுவோம்.

إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ
''எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை.'' (13:11)


முஆத் முனாஸ் (வரகாபொலை)
இஸ்லாஹிய்யா வளாகம் - மாதம்பை.

அல்லாஹ்விற்றகாகப் சேர்ந்து அல்லாஹ்விற்காகப் பிரிந்த இரண்டு உறவுகளின் உண்மைச் சம்பவம் (வீடியோ இணைப்பு)

அல்லாஹ்விற்றகாகப் சேர்ந்து அல்லாஹ்விற்காகப் பிரிந்த இரண்டு உறவுகளின் உண்மைச் சம்பவம் (வீடியோ இணைப்பு)

http://www.youtube.com/watch?v=u_Rs6a6jakk


சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஜனாஸாக்களைக் குளிப்பாட்டும் ஒரு ஸேக் தனது அனுபவத்தைப் பகிர்கிறார்.

'ஒரு மையத்து வந்துள்ளது, அவசரமாக வாருங்கள்.' என்று எனக்கு ஒரு அழைப்பு. நானும் அதற்கான ஆயத்தங்களுடன் ஆடைகளை அணிந்து அந்த ஜனாஸா இருக்கும் அரைக்குள் நுழைகிறேன்.

உள்ளே ஒரு வாழிபன், அந்த ஜனாஸாவிற்கு ஒத்த வயதிருக்கும் அங்கு இருப்வர்களையெல்லாம் வெளியேற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தான். அவரது வேகத்தில் என் ஆடை நான்தான் ஜனாஸாவை குளிப்பாட்டுவன் என்று காட்டாவிடின் நானும் வெளியேற்றப்பட்டிருப்பேன்.

அனைவரும் வெளியேறியபின் நான் அந்த வாழிபனை எனக்கு உதவிக்காக அழைத்தேன். அவனும் வந்தான். பின் அந்த இளைஞன் விம்மி விம்மி அழத்தொடங்கினான். 'இவ்வாறு அழுவது நீ இந்த ஜனாஸாவிற்குக் கொடுக்கும் வேதனையாகும். அழாதீர்கள்!!' என்று நானும் ஆறுதல் சொன்னேன். என்றாலும் அழுகை முற்றுப்புள்ளி பெறவில்லை.

பின் நான் அந்த வாழிபனிடம், 'நீ அவனது சகோதரனா? என்று வினவினேன்' அதற்கு அவர், இல்லை எனது சகோதரன், தந்தை என்ற உறவுக்கும் மேல் எங்கள் உறவு என்றார். அப்பொழுதுதான் புரிந்தது. இவர் இந்த ஜனாஸாவின் நண்பன் என்று. உடனே ஆச்சரியத்தில் என் விழிகள் மேலெழுந்தன.
அவ்விளைஞன் தனது உறவைப் பற்றி இவ்வாறு கூறினார். 'நானும் இவரும் சமகாலத்தில் ஒரே பிரதேசத்தில் பிறந்தோம். சிறு வயதிலிருந்தே எனக்கும் இவருக்கும் நெருங்கிய உறவு. இருவருமாக விளையாடுவோம், தொழுகைக்காக பள்ளிக்குச் செல்வோம், பாடசாலைக்கும் ஒன்றாகவே செல்வோம், இருவருமாகவே பல்கலைக்கழகம் நுழைந்து ஒன்றாகவே படித்தோம், ஒன்றாகவே எமக்கு வேலையும் கிடைத்தது, நான் எனது நண்பனுக்கு எனது சகோதரியையும், நண்பன் எனக்கு அவனது சகோதரியையுமாக திருமணம் செய்து கொண்டோம், பின் பக்கத்து பக்கத்திலே எமது வீடுகளையும் அமைத்துக் கொண்டோம். இவ்வாறு எமது உறவு நன்மையான விடயத்திலும், தக்வாவுடைய விடயத்திலும் ஒத்துழைப்பாக இருந்தது. நீங்களே சொல்லுங்கள் எமது உறவைப்போன்று நீர் கண்டிருப்பீரா? அதனால் தான் எனக்கு இவரது பிரிவு கஷ;டமாக இருக்கிறது.'

ஒருவாராக நாம் இந்த ஜனாஸாவை அடக்கம் செய்தோம்.

அடுத்தநாள் மீண்டும் ஒரு அழைப்பு, 'அவசரமாக வாருங்கள் ஜனாஸா ஒன்று வந்திருக்கிறது' நான் சென்று ஜனாஸாவைப் பார்த்தால் எங்கோ கண்ட பழக்கப்பட்ட முகமாக இருந்தது. அப்போது பக்கத்திலிருந்த அந்த ஜனாஸாவின் தந்தையிடம் இது பற்றி வினவ, 'என்ன இவரைத் தெரியாதா? நேற்று இவரது நண்பனின் ஜனாஸாவிடயத்தில் உங்களுக்கு உதவியவர் இவர்தான்.' என்றார்.

அப்போது நாம் அந்த ஜனாஸாவை அவரது நண்பனது ஜனாஸாவுக்குப் பக்கத்திலே அடக்கம் செய்து விட்டு. 'உலகில் இவர்கள் சேர்ந்திருந்தது போன்று, கப்றிலும், சுவனத்திலும் இவர்களை சேர்த்து வைப்பாயாக!!' என்று அல்லாஹ்வைப் பிரார்த்தித்தோம். இருவரது ஜனாஸாவுக்கும் மத்தியில் ஒரு சுவருதான் தடுப்பாக இருந்தது.

பாருங்கள் சகோதரர்களே. இதுதான் அல்லாஹ்விற்காக இணைந்து அல்லாஹ்விற்காக பிரியும் உறவுக்கு உதாரணம். அல்லாஹ்விற்காக நோசம் பாராட்டுவதன் சிறப்பு மகத்தானது. இதற்கு நபியவர்களின் பின்வரும் பென்மொழி சான்றாகும்.

'எனக்காக அன்பு கொண்டவர்கள் எங்கே? உங்களுக்காக நபிமார்களும், ஷஹீத்களும் (எங்களுக்கும் கிடைக்காதா?!! என்று) அங்கலாய்க்கும் அளவு உயர்ந்த ஒளியினாலான மேடைகள் இருக்கிறது.' என்று அல்லாஹுத்தஆலா மறுமையில் தனக்காக நேசம் பாராட்டியவர்களை அழைப்பதாக நபியவர்கள் கூறியதை முஆத் இப்னு ஜபல் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: அத்திர்மிதி:2390)

இவ்வாறாக இணையும் நண்பர்கள், 'நன்மையான விடயத்திலும் தக்வாவுடைய விடயத்திலும் ஒத்துழைப்பாக இருங்கள், பாவகாரியங்களிலும் அத்துமீறல்களிலும் ஒத்துழைப்பாக இருக்காதீர்கள்.' (அல்மாயிதா:2) என்ற ஏவலை சான்றுபகர்கின்றவர்களாக இருப்பார்கள்... இதுவே மேற் சொன்ன சம்பவமும் எமக்கு உணர்த்துகின்றது..

முஆத் முனாஸ் (வரகாபொல)