Wednesday, September 11, 2013

இஹ்வான்கள் மீண்டும் ஆட்சிபீடம் ஏறுவார்களா..??


எகிப்தை மையமாகவைத்து இமாம் ஹஸனுல் பன்னா (ரஹிமஹுல்லாஹ்)வால் ஆராம்பிக்கப்பட்ட இஹ்வானுல் முஸ்லிமீன் என்ற இயக்கம் கடும் போராட்டத்தின் பின் எகிப்தில் தமது ஆட்சியை நிலைநிறுத்தி ஒரு வருட முடிவுக்குள் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில்ளூ ஒரு கூட்டத்தினர், இஹ்வான்கள் வீழ்ந்து விட்டார்கள். அவர்களால் மீண்டும் எழுந்து நிற்க முடியாது. என்றும், மேலும் ஒரு கூட்டம், அப்படியல்ல அவர்கள் மீண்டும் எழுவார்கள். என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தில் இஸ்லாத்தின் வரலாற்றையும் இஹ்வான்களின் நிலையையும் ஓரளவாவது அறிந்த நான் இந்த வரலாற்று ஒப்பீட்டு அனுகலை உங்களது சிந்தையில் இடுகிறேன்.

முதலில் இஹ்வான்களின் நிலையை பார்க்கமுன் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மக்காவிலும், மதீனாவிலும் தான் உருவாக்கிய சமூகத்தைப் பற்றியும், அவர்கள் அனுபவித்த சோதனைகளையும், அதனை அல்லாஹ் எவ்வாறு வெற்றியாக்கினான் என்பதையும் மீட்டிப்படிப்பது அவசியம் எனக் கருதுகிறேன்.

நபியவர்கள் தனது சமூக உருவாக்கத்தில் முதலாவதாக தனக்கு நெருக்கமான உறவினர்கள், தோழர்கள், உண்மையை நேசிப்பவர்களிடம் சத்தியத்தை எடுத்துச் சொன்னார்கள். இந்த சந்தர்பத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு இருந்து மிகப்பெரிய சவால் என்னவெனில்ளூ தம்மோடு இருந்த குறைஷிகளின் அடாவடித்தனங்களாகும். இந்தகால கட்டத்தில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றால் அதனை மறைத்து வைக்கவே விரும்புவார்கள். ஏனெனில் அதனை குறைஷிகள் அறிந்தால், யாஸிர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் குடும்பம், பிலால், கப்பாப்..... (ரழியல்லாஹு அன்ஹும்) போன்ற நபித்தோழர்கள் அனுபவித்த குறைஷிகளின் சித்திரவதைக்கு ஆளாக்கப்படுவார்கள். இப்படியான சந்தர்பங்கள் அவர்களுக்கு ஏற்பட்டு, கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு, பசியால் வாட்டப்பட்டு, தூக்குமரம் ஏறினாலும் அவர்கள் ஏகத்துவத்தில் உறுதியாக இருந்தார்கள்.

பின், நபித்துவத்தின் 13ஆம் ஆண்டு மதீனா ஹிஜ்ரத்தைத் தொடர்ந்து முஸ்லிம்கள் பல சமூகங்களுடன் ஒன்றினைந்து (முஹாஜிர்கள், அன்ஸார்கள், இஸ்லாத்தை ஏற்காத மதீனத்து மக்கள், யூதர்கள், முனாபிக்கள்..) ஓர் ஆதிக்க சக்தியாக பிரவாகம் எடுத்துளூ ஹிஜ்ரி 2, ரமழான் பிறை 17இல் தமது முதற்தர எதிரியான குறைஷிகளை எதிர்த்து பத்ர் களத்தில் போராடி அல்லாஹ்வின் உதவியோடு வெற்றிகொண்டு தமது முழு எதிரிகளையும் திகைப்படையச் செய்தார்கள்.

அடுத்தகட்டமாக ஹிஜ்ரி 3, ஷவ்வால் மாதம் பழிவாங்குவதற்காகக் காத்திருந்த குறைஷிகள் உஹத் களத்தில் முஸ்லிம்களை சந்தித்தனர். இந்த யுத்தத்தில் முதல் கட்டத்தில் முஸ்லிம்கள் வெற்றிபெற்றாலும், இரண்டாம் கட்டத்தில் முஸ்லிம்கள் தோல்விகண்டார்கள். இச்சந்தர்பத்தில் அல்லாஹ் பின்வரும் வசனங்களை இறக்கியருளினான்.

'எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்;. கவலையும் கொல்லாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.

உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால், அதே போன்று மற்றவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம்;. இதற்குக் காரணம், ஈமான் கொண்டோரை அல்லாஹ் அறிவதற்கும், உங்களில் உயிர்த் தியாகம் செய்வோரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குமே ஆகும்;. இன்னும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை.


நம்பிக்கை கொண்டோரை பரிசுத்த மாக்குவதற்கும், காஃபிர்களை அழிப்பதற்கும் அல்லாஹ் இவ்வாறு செய்கின்றான்.


உங்களில் (அல்லாஹ்வின் பாதையில் உறுதியாகப்) போர் புரிபவர்கள் யார் என்றும், (அக்காலை) பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் யார் என்றும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமல் நீங்கள் சுவனபதியில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களா?


நீங்கள் மரணத்தைச் சந்திப்பதற்கு முன்னமே நிச்சயமாக நீங்கள் அதை விரும்பினீர்ளே! இப்போது அது உங்கள் கண்முன் இருப்பதை நீங்கள் திட்டமாகப் பார்த்துக் கொண்டீர்கள். (இப்போது ஏன் தயக்கம்?)' (ஆலு இம்ரான் 3:139-143)

இந்த வசனங்களினூடாக அல்லாஹ் போரின் விளைவுகளை தெளிவுபடுத்துகிறான். அவற்றை பின்வருமாறு பரித்தெடுக்கலாம்:

1.    உண்மையான முஃமீன்களை இனங்கான்பதற்கு
2.    அல்லாஹ்வின் எதிரிகள், முனாபிக்கள், அநியாயக்காரர்கள் யார் என்பதை இனங்காட்டுவதற்கு
3.    சுவனவாசிகளை தேர்ந்தெடுப்பதற்கு
4.    நம்பிக்கையாளர்களை பரிசுத்தமாக்கி அவர்களை உறுதிப்படுத்துவதற்கு
5.    காபிர்களை அழிப்பதற்கு

இதனை உஹதுப்போருடன் உரசிப்பார்த்தால், முஸ்லிம்களது கூட்டுப்படை வெளியாகி போர்க்களத்தை நோக்கி வந்ததும், நாம் முஸ்லிம்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு இஸ்லாத்தை அழிக்கும் விஷப்பாம்புகளான முனாபிக்களின் கூட்டம் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூலின் தலைமையில் பிரிந்து சென்றது. அதேநேரம், இஸ்லாத்தின் உறுதியானவர்களைளூ எவ்வளவுதான் அடிவாங்கினாலும் புரமுதுகு காட்டமாட்டோம் என்று உறுதியாக இருந்து இறுதிவரை போராடியவர்கள் மூலம் இனங்காட்டப்பட்டார்கள். அடுத்ததாக கட்டுப்பாட்டில் உறுதியாக இருக்கவேண்டும் என்ற பாடத்தை மலைக்குன்றில் அப்துல்லாஹ் இப்னு சுபைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் தலைமையில் நிறுத்தப்பட்ட அம்பெறி வீரர்கள் மூலம் ஆழமாகப் பதித்தான். இதன் மூலம் அல்லாஹ், நீங்கள் உறுதியாக எழுச்சிபெற வேண்டுமாயின் முதலாவது உள்ளக எதிரிகளை இனங்கண்டு அடக்கவேண்டும் என்ற பாடத்தை கற்றுக்கொடுத்தான்.

அதனைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட இரண்டு வருடங்களைத் தொடர்ந்து ஹிஜ்ரி 5, ஷவ்வால் மாதம் இஸ்லாத்தின் முழு எதிரிகளும் ஒன்று சேர்ந்து இஸ்லாத்தை பூண்டோடு ஒழிக்க வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு அஹ்ஸாப் போரில் மதீனாவை சுற்றிவலைத்தார்கள். பலநாட்கள் தொடர்ந்த இந்த சுற்றிவலைப்பில் யூதர்களதும் நயவஞ்சகர்களினதும் நடவடிக்கையால் முஸ்லிம்கள் நாலா புறத்தாலும் தாக்கப்படும் நிலை உறுவாகுமோ என்றிருந்த சந்தர்பத்திலும் சஹாபாக்கள் உறுதியாக இருந்தார்கள். இந்த சந்தர்பத்தில் அல்லாஹ்வின் உதவி வந்து சேர்ந்தது.

முஸ்லிம்களுக்கு எதிராக படைதிரண்டுவந்த எதிரிப்படையினரான குறைஷிகளுக்கும், யூதர்களுக்கும் நன்கு அறிமுகமானவரான கத்ஃபான் கோத்திரத்தைச் சேர்ந்த நுஅய்ம் இப்னு மஸ்ஊத் இப்னு ஆமிர் என்பவர் இரகசியமாக இஸ்லாத்தை ஏற்று. மிகப்பெரிய இரண்டு எதிரிகளுமான யூதர்களுக்கும் குறைஷிகளுக்கும் மத்தியில் பிரிவினையை உண்டுபன்னி அவர்களை தோல்விகான வைத்தான்.

இப்படியாக முழு எதிரிகளையும் வென்றபின் இஸ்லாம் மிக வேகமாக பரவி அரேபியாவின் எல்லை வரை விரிந்தது.

இனி இஹ்வான்களது வரலாற்றை சற்று அலசுவோம்.

1928 மார்ச் மாதம் இமாம் ஹஸனுல் பன்னா (ரஹிமஹுல்லாஹ்) தலைமையில் 6 பேருடன் எகிப்தில் உருவாகிய இஸ்லாமிய இயக்கமே இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கமாகும். இது ஆரம்பித்த காலத்தில் இந்த குழுமம் பலபிரதேசங்களுக்குச் சென்று தமது சிந்தனையைப் பரப்பி சில தனித்தனி ஆளுமைகளை தம்மோடு இணைத்துக்கொண்டது. இப்படியாக இணைந்த இந்த அமைப்பு அப்துந்நாஸர், அன்வர் சாதாத், ஹுஸ்னி முபாரக் போன்ற சர்வாதிகாரிகளால் நபிகள் கால முதல்தர எதிரியான குறைஷிகளால் எப்படி முஸ்லிம்கள் ஒடுக்கப்பட்டார்களோ, நசுக்கப்பட்டார்களோ, சித்திரவதைக்கு உற்படுத்தப்பட்டார்களோ அவ்விதம் ஒடுக்கப்பட்டார்கள், நசுக்கப்பட்டார்கள், சித்திரவதை செய்யப்பட்டார்கள், சிறைப்படுத்தப்பட்டார்கள், இறுதியில் தூக்குமரமும் ஏற்றப்பட்டார்கள். இக்கால கட்டத்தில் ஒருவர் நான் ஒரு இஹ்வான் என்று அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பமாட்டார்.

அதனைத் தொடர்ந்து 2010காலப்பகுதியில் டியுனீஸியாவில் வெடித்த அரபு வசந்தமான ஜெஸ்மின் புரட்சியைத் தொடர்ந்து எகிப்திலும் இஹ்வான்களோடு ஒன்றுசேர்ந்து பலதரப்பினரும் அப்புரட்சியை எகிப்திலும் அரங்கேற்றி 2012 ஹுஸ்னி முபாரக் ஆட்சியை விட்டு இறங்கும் வரை அந்த மக்கள் புரட்சியை மேற்கொண்டு வெற்றிகண்டார்கள். அதனைத் தொடர்ந்து ஜநனாயக முறையில் மக்களால் இஹ்வான்களைச் சேர்ந்த கலாநிதி முஹம்மத் முர்ஸி ஆட்சிபீடம் ஏறி ஆட்சிநடாத்தினார்கள். இது நபியவர்களின் மதீனா சமூகத்தில் பத்ர் களத்தில் கண்ட வெற்றிபோன்ற விளைவுகளை ஏற்படுத்தியது. இஸ்லாமிய வாதிகள் எழுச்சிபெற்றார்கள்.

பின் 2013 ஜுலையில் அப்போதும் இஸ்லாமிய வாதிகளின் முதல் எதிரியாக இருந்த முஸ்லிம்களின் எதிரிகளான இஸ்ரேல் அமெரிக்காவின் அடிவருடிகளான முபாரக்கின் ஏஜன்டுக்கள் (இராணுவ ஜனரல்கள்) இஸ்லாமிய வாதிகளை வீழ்த்தி தமது ஆட்சியை நிலைப்படுத்தினார்கள். இதற்கு இராணுவ ஜனரல்களோடு கூட்டுச்சேர்ந்த பல பிரிவினரும் உதவியாய் இருந்தார்கள். எனினும் இதற்காக இஸ்லாமிய வாதிகள் தமது இன்னுயிரை இன்றுவரை தியாகம் செய்தவர்களாகவே இருக்கிறார்கள். இது இஹ்வான்களின் தோல்வியாக இருக்கமுடியாது. ஏனெனில் இந்த சந்தர்பம் உஹத் யுத்தத்தின் போது இறக்கப்பட்ட இறை வசனங்கள் சொல்லும் விடயங்களுடன் ஒன்று படுகின்றது. அவைதான்:

1.    இப்போராட்டத்தின் மூலம் உண்மையான இஸ்லாமிய வாதிகள் யார் என்பதை முஸ்லிம் உம்மத்துக்கு இனங்காட்டப்பட்டனர்.
2.    இஸ்லாத்தின் எதிரிகளும், அநியாயக்காரர்களும், முனாபிக்களும் தெளிவாக இனங்காட்டப்பட்டார்கள்.
3.    இஸ்லாமிய வாதிகளது ஈமான் பலப்படுத்தப்பட்டது.

இவ்வாறாக இந்த ஆர்ப்பாட்டம் பல விளைவுகளை இந்த சமூகத்திற்குத் தந்தது. இன்ஷா அல்லாஹ், ஒருபக்கம் டொலர்களும், மறுபக்கம் ரியால்களும் சூழ்ந்து இஸ்லாத்தை ஒடுக்கும் இச்சந்தர்பத்தில் அல்லாஹ் அஹ்ஸாப் யுத்தத்தில் முஸ்லிம்களுக்கு எப்படி உதவிசெய்தானோ அவ்விதம் இந்த இஸ்லாமிய வாதிகளுக்கும் வெற்றியைக் கொடுப்பான். இப்படி இஹ்வான்கள் மீண்டும் எழுச்சிபெற்றால் இந்த உம்மத் மீண்டும் இந்த உலகை ஆளும் நிலை உருவாகும். இதனையே பிரபல இஸ்லாமிய அறிஞரான கலாநிதி தாரிக் அஸ்சுவைதானி தான் அல்ஜெஸீரா தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் குறிப்பிடுகிறார், 'எகிப்து கிடைத்துவிட்டால்ளூ முழு முஸ்லிம் உம்மத்தும் கிடைத்ததாகிவிடும்.'

وَأُخْرَى تُحِبُّونَهَا نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ

'அன்றியும் நீங்கள் நேசிக்கும் வேறொன்றும் உண்டு, (அதுதான்) அல்லாஹ்விடமிருந்து உதவியும், நெருங்கி வரும் வெற்றியுமாகும், எனவே ஈமான் கொண்டவர்களுக்கு (இதைக் கொண்டு) நன்மாராயம் கூறுவீராக!' (சூறதுஸ் ஸஃப் 61:13)





முஆத் முனாஸ் (வரகாபொலை)
மாதம்பை இஸ்லாஹிய்யா வளாகம்

No comments:

Post a Comment