சவூதி மன்னரின் இஸ்லாமிய விரோத யுத்தம்
- லதீப் பாறூக் -
இரண்டு புனிதத் தளங்களின் பாதுகாவலராக
தன்னைத் தானே பிரகடனம் செய்து கொண்டுள்ள சவூதி மன்னர் அப்துல்லாஹ்,
முஸ்லிம் உலகின் இரத்தத்தை மீண்டுமொரு தடவை தனது கைகளில் தடவிக்
கொண்டுள்ளார். சவூதி மன்னரின் நிதி மூலம் பதவிக்கு கொண்டு வரப்பட்ட
எகிப்திய இராணுவம் கடந்த 8, ஜூலை 2013 அன்று காலைத் தொழுகையின் போது,
ஐம்பத்தொரு பேரை கொலை செய்துள்ளது.
முர்ஸி
அரசாங்கத்தைப் பதவி கவிழ்த்த சவூதி- அமெரிக்க- ஸியோனிச விசிரியும்,
இராணுவத் தளபதியும், பாதுகாப்பமைச்சருமான ஜெனரல் அப்துல் பத்தாஹ் அல்-
ஸிஸிதான் இக்கொலைகளுக்குப் பொறுப்புதாரி.
அமெரிக்க – மற்றும் சியோனிஸ சக்திகளோடு
கைகோர்த்து, மத்திய கிழக்கிலும், அதற்கு வெளியிலும் முஸ்லிம் நிலங்களை
ஆக்கிரமிப்பதும், அவற்றை அழித்தொழிப்பதும் சவூதி அரசாங்கத்திற்கொன்றும்
புதிய விடயமல்ல.
சவூதியும் ஏனைய வளைகுடா முடியரசுகளும்,
எகிப்தில் ஜனநாயகமும் இஸ்லாமும் வளர்ச்சி பெறுவதைக் கண்டு அச்சம் கொண்டன.
இந்நாடுகளின் ஆட்சியாளர்களுக்குத் தமது பலம், செல்வம், மற்றும் வசதிகளை
காப்பாற்றிக் கொள்வதே தமது பிரதான கவலையாக இருந்தது.
இவை புரிந்த உதவிக்குப் பகரமாக எகிப்திய
இராணுவம், தான் தோற்றுவித்துள்ள உள்நாட்டின் மிகத் தீவிரமான அரசியல்
குழப்ப நிலையைத் தீர்க்க வேண்டுமே என்பது பற்றிய கவலை கூட இல்லாமல், தமது
சவூதி, அமெரிக்க மற்றும் சியோனிஸ எஜமானர்களைத் திருப்திப்படுத்தும் பணிகளை
மேற்கொண்டு வருகிறது.
எகிப்து குழப்ப நிலையில் இருந்த போதே,
சவூதி, ஐக்கிய அரபு இராச்சியம், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா என்பன எகிப்திய
இராணுவத்திற்கு வெகுமானங்களை வழங்க ஆரம்பித்திருந்தன. சவூதி அரேபியா ஐந்து
பில்லியன் டாலர்களையும், ஐக்கிய அரபு இராச்சியம் மூன்று பில்லியன்
டாலர்களையும் எகிப்திற்கு உதவியாக வழங்கின.
இஸ்ரேலுக்குத் தனது நன்றியைத் தெரிவித்த
இராணுவப் புரட்சித் தலைவர் ஜெனரல் அப்துல் பத்தாஹ் அல்- ஸிஸி, இஸ்ரேலிய
உத்தரவுகளைப் பணிவுடன் நிறைவேற்ற ஆரம்பித்துள்ளார். எகிப்துடன் பலஸ்தீனை
இணைக்கின்ற சுரங்கங்களை இராணுவப் புரட்சி இடம்பெற்ற அடுத்த நாளே
புல்டோஸர்கள் மூலம் உடைத்து நொருக்கத் துவங்கினார். 2006 இல் காஸா மீதான
இஸ்ரேலிய முற்றுகையைத் தொடர்ந்து, பலஸ்தீனியர்களின் பிரதான உயிர்க்
கால்வாயாக இச்சுரங்கங்களே இருந்து வந்தன.
எனவே, சில தினங்களுக்குள் காஸாவில்,
மின்சாரத்தைப் பிறப்பிப்பதற்கும், எம்பியூலன்ஸ்களுக்குமான எறிபொருள்
தீர்ந்து போகும் என காஸாவில் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. “எகிப்துடனான
சுரங்கங்கள் மூடப்பட்டுள்ள நிலையிலும், காஸா எல்லைக்குள் போதுமான
எறிபொருள் நுழைவதை இஸ்ரேல் அனுமதிக்காது என்கின்ற நிலையிலும், நாம் ஒரு
நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்குகிறோம்”.
எகிப்திய இராணுவப் புரட்சியை வரவேற்ற
இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு கவுன்ஸிலின் முன்னாள் தலைவர் கியோரா எய்லண்ட்,
எகிப்திய மற்றும் சிரிய நிகழ்வுகள் இஸ்ரேலிற்கு சாதாகமான சமிக்ஞையாகும்
எனத் தெரிவித்துள்ளார்.
“எகிப்தைப் பொறுத்தவரை, ஓர் ஆண்டுக்கு
முன் நாம் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் ஆட்சி குறித்தும், இஸ்லாமிய
எதிர்ப்பியக்கங்களுக்கு புதிய அரசாங்கம் ஆதரவு வழங்கலாம் என்பது குறித்தும்
அச்சம் கொண்டிருந்தோம். ஆனால், இன்று அவ்வரசாங்கம் ஒரு முடிவுக்கு
வந்துள்ளது” என்று மேலும் தெரிவித்த அவர், “எனவே இது தொடர்பில் தற்போது
அச்சம் கொள்வதற்கு எதுவும் இல்லை. ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக அரசாங்கம்
எகிப்தில் அமைகின்ற பட்சத்தில், இஸ்ரேலுடனான அதன் உறவு முழுமையாகச் சாதாரண
நிலைக்குத் திரும்பி விடலாம்” என்கின்றார்.
எய்லண்ட் குறிப்பிடுவது போன்று, எகிப்தில்
இஸ்ரேலுடன் தீர்க்கமான உறவு கொண்ட மிகப் பிரதான நிறுவனம் எகிப்திய
இராணுவம்தான். ஜனாதிபதிக் கதிரையில் அமர்ந்திருப்பவர் எவராக இருப்பினும்,
அமெரிக்கா நிதி எகிப்திய இராணுவத்திற்குக் கிடைக்கின்ற வரை, அது சினாய் தீப
கற்பத்தில் இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்யும். “இஸ்ரேலைத் தாக்குவது
எப்படிப் போனாலும், ஜனாதிபதிக்கு எகிப்தில் ஏராளமான பிரச்சினைகள்
காணப்படும்” என்று அவர் மேலும் குறிப்பிடுகிறார்.
மூர்ஸி அரசாங்கம் இராணுவப் புரட்சி மூலம்
கவிழ்க்கப்பட்டதை ஏற்றுக் கொள்வதற்கு, முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை இணங்க
வைப்பதற்கான முயற்சிகளிலும் அமெரிக்க உயர் அதிகாரிகள் ஈடுபட்டதாக
அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மீண்டும் அவர்களை அரசியல் செயன்முறையில்
ஈடுபடுத்துவதற்கான முயற்சியிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் புரட்சியை சட்ட ரீதியாக
அங்கீகரிக்குமாறு கோறுகிறார்கள் என்று கூறும் இஸ்லாமியவாதிகள், சட்ட
ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை நீக்கியமையை அங்கீரிப்பது எகிப்திய
ஜனநாயகத்திற்கு அடிக்கின்ற சாவுமணியாகும் என்று தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், அமெரிக்க நயவஞ்சகத்தனம்
குறித்துக் கதைக்கையில், குடியரசுக் கட்சிக்காரரான ரொன் போல் பின்வருமாறு
குறிப்பிடுகிறார்: “எகிப்திய இராணுவப் புரட்சி தேர்தல் மூலம் தெரிவான
ஜனாதிபதியை நீக்கி, அவரை சிறைப்படுத்தியுள்ளது. ஊடக நிறுவனங்கள்
மூடப்பட்டுள்ளன. ஜனாதிபதி ஆலோசகர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அரசியல் யாப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. மூர்ஸியை பதவி கவிழ்த்த எகிப்திய
இராணுவம் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை வருடாந்த உதவியாகப்
பெறுகின்றது. எகிப்திய ஜனநாயக ஜனாதிபதியை பதவி கவிழ்த்த எகிப்திய
இராணுவத்தை, அமெரிக்கா உரிமை கொண்டுள்ளது என்று கூட சுருக்கமாகச் சொல்லி
விடலாம். பல தசாப்தங்கள் கடந்து எகிப்திற்கு ஜனநாயக ரீதியாகத்
தெரிவானதொரு அரசாங்கம் இருந்தது. அமெரிக்கா மூலம் நிதி உதவி
வழங்கப்படுகின்ற எகிப்திய இராணுவத்தின் ஊடாக அது இன்று கவிழ்க்கப்பட்டு
விட்டது.
எகிப்தில் தலையிடுகின்ற நயவஞ்சகத்தனமான,
அதே நேரம் முட்டாள்தனமான கொள்கையை அமெரிக்கா கடைபிடித்து வருகிறது. மக்கள்
வாக்கெடுப்பு எதுவுமே இல்லாமல், ஆட்சிக்கு வந்த ஹுஸ்னி முபாரக்கின்
அதிகாரத்திற்கு முட்டுக் கொடுத்து, அவரை அதிகாரத்தில் வைத்திருப்பதற்காக
பில்லியன் கணக்கான டாலர்களை அது முன்பு செலவு செய்தது. பிறகு ஹுஸ்னி
முபாரக்கைப் பதவி விலக்கியவர்களுக்கு உதவி புரிந்து, ஒரு தேர்தல்
நடாத்தப்பட வேண்டும் எனக் கோரியது. நீதியும், நேர்மையுமான முறையில் தேர்தல்
நடாத்தப்பட்டு, ஆறு தசாப்தங்களுக்குப் பிறகு ஒரு மக்கள் அரசாங்கமும்,
ஜனாதிபதியும் தெரிவு செய்யப்பட்ட நிலையில், அமெரிக்க நிதி வழங்கப்பட்ட
இராணுவத்தினால் ஜனாதிபதியும், அரசாங்கமும் பதவி விலக்கப்பட்டுள்ளனர்.
தற்போது ஜனநாயகத்தை மீள நிலைநிறுத்துமாறு, அமெரிக்கா கோருகிறது. அதே நேரம்,
எகிப்திய இராணுவத்திற்கு அமெரிக்கா வழங்குகின்ற நிதியை நிறுத்த வேண்டி
இருக்கும் என்பதனால், எகிப்தில் இடம்பெற்ற நிகழ்வை இராணுவப் புரட்சி என்று
வர்ணிப்பதையும் அமெரிக்க அரசாங்கம் கவனமாகத் தவிர்த்து வருகிறது”.
எவ்வாறாயினும், ஜெனரல் அப்துல் பதாஹ் அல்-
ஸிஸியினால் வெளியிடப்பட்ட அறிக்கையை வாபஸ் பெற்று, அதிபர் மூர்ஸியை அவரது
பதவியில் திரும்ப அமர்த்துகின்ற வரைக்கும், ஜனாதிபதி முஹம்மத் மூர்ஸியின்
சட்டபூர்வத்தன்மைக்கு ஆதரவான தேசிய கூட்டணி எதுவித பேச்சுவார்த்தைகளையும்
ஏற்றுக்கொள்ளாது என முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது.
முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அறிக்கையில் பின்வருமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது:
- எம் மீது தாக்குதல் நடாத்தும் எவரை நோக்கியும் எமது கைகளை நாம் நீட்ட மாட்டோம். எமது இரத்ததை மற்றவர்கள் சிந்திய போதிலும், நாம் எவரது இரத்தத்தையும் சிந்த மாட்டோம். எமக்கெதிராக நீட்டப்படுகின்ற துப்பாக்கித் தோட்டக்களையும், ஆயுதங்களையும் எமது வெறும் நெஞ்சுகளையும், வெற்றுக் கரங்களையும் கொண்டுதான் எதிர்கொள்வோம்.
- சிவில் ஜனநாயக அரசு குறித்து தொடர்ந்தேச்சையாகக் கதைத்து வந்த பல அரசியல் சக்திகள், இராணுவப் புரட்சியின் பின்னணியில் இருந்ததோடு, தாம் இது வரை காலம் கதைத்து வந்த பெறுமானங்கள், விழுமியங்கள் அனைத்தையும் ஒருபுறம் தள்ளி வைத்து விட்டு, இராணுவப் புரட்சியை அவை ஆதரித்தமை மிகவும் கவலையளிக்கும் விடயமாகும்.
- எந்த சமயத்தினாலும், சட்டத்தினாலும், அரசியல் யாப்பினாலும், சம்பிரதாயத்தினாலும் ஏற்றுக்கொள்ள இயலாத இத்தவறில், சமயத் தலைவர்கள் பலர் சம்பந்தப்பட்டமைதான் கவலை தருகிறது.
- எல்லா வலிகள் மற்றும் கசப்புணர்வுகளுக்குப் பிறகும், ஜனாதிபதி, பாராளுமன்றம், அரசியல் யாப்பு என்பவற்றை மீண்டும் அதற்குரிய இடத்திற்குத் திருப்பிக் கொண்டு வருவதற்காக இதய சுத்தியோடு அழைப்பு விடுக்கின்ற எத்தரப்பினுடைய அழைப்பையும் ஏற்றுக் கொள்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். பிறகு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும், முரண்பாடாண விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொள்வார். எகிப்திய மக்களின் இரத்தத்தைப் பாதுகாக்கும் வகையிலும், இராணுவப் புரட்சி காரணமாக எகிப்து தள்ளப்பட்டுள்ள படுகுழியில் இருந்து அதனை மீற்கின்ற வகையிலும் தேசத்தை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளையும் அவர் மேற்கொள்வார்.
இவ்விதம் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment